ஏழைகள் நிதி கல்வி பெறவும், அரசு திட்டங்களை அணுகவும் உதவும் 17 வயது தொழில்முனைவோர்!
வீட்டு வேலை செய்யும் சகினா, வேலை தேடி தில்லியில் இருந்து ஜார்கண்ட் வந்தார். ஒரு நிலைய ஊழியராக அவரது முதல் வேலையில் ஊதியம் குறைவாக இருந்தது.
அதன் பிறகு, வீட்டு உதவியாளராக ரூ.1500க்கு வேலை கிடைத்தது. இது அவரது வாழ்க்கை சூழலை மேம்படுத்தினாலும், வீட்டிற்கு பணம் அனுப்பி, செலவு செய்தது போக அவரால் சேமிக்க முடியவில்லை.
“எனக்கு ஏதாவது ஆனால் குடும்பம் என்ன ஆகும் என பயம் உண்டானது…” என்கிறார் சகினா.
அப்போது தான் அவர், 17 வயது சமூக தொழில்முனைவோரான காஷ்வி ஜிண்டால் நடத்திய, ’இன்வெஸ்ட் தி சேஞ்ச்’ (Invest The Change) பற்றி தெரிந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி மூலம் அவர், பிரதான் மந்திரி ‘சுரக்ஷா பீமா யோஜனா காப்பீடு’ பற்றி தெரிந்து கொண்டார். விபத்து மரணம் அல்லது உடல் பாதிப்பிற்கு பாதுகாப்பு அளிக்கும் இந்த பாலிசிக்கான தொகை ஆண்டுக்கு ரூ.20 மட்டும் தான்.
“இந்த நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்த திட்டத்தில் இணைய எனக்கு விருப்பம் இருந்தாலும் வங்கி கணக்கு இல்லாததால் முடியவில்லை. காஷ்வி குழு வங்கிக் கணக்கு துவக்க உதவியது. இந்த திட்டத்தில் இணைந்தது, எதிர்காலத்தில் நான் இல்லாவிட்டாலும் குடும்பத்திற்கு பாதுகாப்பு இருக்கும் என்பதை உறுதி செய்துள்ளது,”என சோஷியல் ஸ்டோரியிடம் பேசும் போது சகினா தெரிவித்தார்.
இன்வெஸ்ட் தி சேஞ்ச், மருத்துவம், விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு தொடர்பான அரசு திட்டங்களில் கவனம் செலுத்துகிறது. குருகிராமை சேர்ந்த இந்த அமைப்பு, அரசு திட்டங்கள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவது துவங்கி, விண்ணப்பிப்பது வரை உதவி செய்வதோடு நிதி கல்வியும் அளிக்கிறது.
எப்படி துவங்கியது?
தந்தை கவுரவ் 15 ஆண்டுகளாக ஹெட்ஜ் நிதி ஒன்றை நடத்தி வருவதால், தனக்கு எப்போதுமே நிதி சந்தையில் ஆர்வம் இருந்ததாக காஷ்வி ஜிண்டால் கூறுகிறார்.
“அவர் நிதி உலகில் பணியாற்றுவதை பார்த்து, எனக்கு அந்த செயல்பாட்டில் ஆர்வம் உண்டானது. அப்போது அதிகம் புரியாவிட்டாலும், சந்தை ஏற்றத்தாழ்வு உள்ளிட்டவை தொடர்பாக அவரிடம் கேள்விகளாக கேட்டுக் கொண்டிருப்பேன்,” என்கிறார்.
அதன் பிறகு, பொருளாதாரம் பாடத்தில் ஆர்வம் உண்டாகி, 10வது படித்துக்கொண்டிருந்த போது நிதி உலகில் பணியாற்றுவது என தீர்மானித்தார்.
அவரது குடியிருப்பு பகுதியில் வீட்டு வேலை உதவியாளர் ஒருவர் மரணம் அடைந்தார். அவரது வருமானத்தை நம்பியிருந்த குடும்பம் நிலை குலைந்து போனதை பார்த்த போது காஷிவுக்கு ஏழைகளுக்கு உதவும் எண்ணம் உண்டானது.
சமூகத்தின் விளிம்பு நிலை தொழிலாளர்கள் பலரிடம் பேசிக்கொண்டிருந்த போது, நிதி, பொருளாதாரம் தொடர்பாக போதுமான விழிப்புணர்வு இல்லாததை உணர்ந்தார்.
“பிறகு தான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜானா, பிரதான் மந்திரி ஜீவன் பீமா யோஜானா போன்ற திட்டங்கள் இத்தகைய எதிர்பாராத நெருக்கடியில் இருந்து ஏழைகளை காக்க இருப்பதை தெரிந்து கொண்டேன்,” என்கிறார். அரசு காப்பீடு திட்டங்கள் பற்றி பலருக்கு தெரியாமல் இருப்பதையும் கவனித்தார்.
தேசிய சர்வே அலுவலகம் தகவல் படி, கிராமப்புற ஏழை இந்தியர்களில் 10 சதவீதம் மட்டுமே ஏதேனும் அரசு அல்லது தனியார் காப்பீடு பெற்றுள்ளனர். இதனால் பலரும் மருத்துவம் சார்ந்த நிதி நெருக்கடிக்கு உள்ளாகின்றனர்.
மற்ற பாலிசிகளிலும் இதே நிலை தான் என வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கோவிட் பெருந்தொற்று காலத்தில் பல குடும்பங்கள் தங்கள் சேமிப்பில் கைவைக்க வேண்டியிருந்ததையும் அவர் நினைவு கூர்கிறார். இந்த குடும்பங்கள் பல ஆயுள் அல்லது மருத்துவ காப்பீடு பெற்றிருக்கவில்லை.
இதையடுத்து, நிதி சோதனையில் இருந்து பாதுகாப்பு அளிக்கக் கூடிய அரசு காப்பீடு திட்டங்கள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 2021ல் அவர் ’இன்வெஸ்ட் தி சேஞ்ச்’ திட்டத்தை துவக்கினார்.
“முதல் நிகழ்ச்சிக்கு வரவேற்பு நன்றாக இருந்தது. குடியிருப்பு சங்கத்தைச் சேர்ந்த 50 தொழிலாளர்கள் பங்கேற்றனர். அடுத்த நிகழ்ச்சிகளுக்கு குறிப்பிட்ட திட்டங்களில் இணைய விரும்புகிறவர்களிடம் இருந்து அழைப்பு வரத்துவங்கியது. இதற்காக தகவல் மையம் அமைத்தோம்,” என்று குடியிருப்பு பகுதியில் நடத்திய முதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி குறித்து காஷ்வி கூறுகிறார்.
அரசு திட்டங்கள் அணுக உதவி
இந்த அமைப்பு மூன்று கட்ட அணுகுமுறையை பின்பற்றுகிறது. முதல் கட்டமாக பயிலறங்குகளுக்கான உள்ளடக்கத்தை தயார் செய்கிறது. ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீடு திட்டங்களில் கவனம் செலுத்தினாலும், அடல் பென்ஷன் யோஜனா போன்ற திட்டங்கள் பற்றியும் தகவல் அளிப்பதாக காஷ்வி கூறுகிறார்.
அறிமுக பகுதியில், பல்வேறு திட்டங்கள் மற்றும் அவற்றின் பலனை விவரிக்கிறார். அடுத்து வரும் பகுதிகளில் ஆன்லைனில் விண்ணப்பிப்பது போன்றவற்றில் சிக்கலைகளை எதிர்கொள்பவர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது.
அதன் பிறகு, அவர்களுக்கு உரிய பலன் கிடைத்ததா என்பதை இக்குழு தொடர்பு கொண்டு அறிகிறது. விண்ணப்பம் ஏற்கப்படவில்லை எனில், அதற்கான தீர்வுகளை வழங்குகிறது. இந்த நடவடிக்கைகளில் உதவுவதற்காகவும் காஷ்வி குழுவில் 15 தன்னார்வலர்கள் உள்ளனர்.
இதுவரை, பஸ் டிரைவர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட 3000 பேருக்கு மேல், அரசு திட்டங்களின் பலன் பெற உதவியுள்ளனர். இக்குழு 30 நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது. காஷ்வி, தனது சுற்றுப்புறத்திலும், பள்ளிகள், ரெஸ்டாரண்டிலும் நிகழ்ச்சிகளை நடத்துகிறார். அடிப்படை நிதி விஷயங்கள், அரசு காப்பீடு திட்டங்கள் குறித்து விளக்குவதற்காக ரோட்டரி திறன் வளர்ச்சி குழுவுடனும் இணைந்து செயல்பட்டு வருகிறார்.
நிகச்சிகளை நடத்த குறிப்பிட்ட நேரம் அல்லது அட்டவனை இல்லை என்கிறார். பள்ளிகள், அமைப்புகளை தொடர்பு கொண்டு இந்த நிகழ்ச்சிகளை நடத்துகிறார். இந்தத் திட்டம் பலரிடம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பெருந்தொற்று காலத்தில் சிக்கலான நிதி சூழலை எதிர்கொண்ட குருகிராமைச் சேர்ந்த பிரகாஷ் மண்டல் இதில் ஒருவர். அவருக்கு உதவக்கூடிய அரசு திட்டங்களை இக்குழு எடுத்துரைத்தது.
“எல்லா திட்டங்களிலும் என்னை கவர்ந்தது, ஆண்டுக்கு ரூ.436 பிரிமியம் செலுத்தும் பிரதான் மந்திரி ஜீவன் பீமா யோஜனா மற்றும் ஆண்டுக்கு 20 பிரிமியம் செலுத்தும் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜானா,” என்கிறார் பிரகாஷ்.
இந்த திட்டங்கள் பற்றி அவருக்கு இதற்கு முன் தெரியாது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு, குறைந்த செலவில் அளிக்கப்படும் இந்த பலன்கள் குறித்த சந்தேகமும் இருந்தது. ஆனால், ஆன்லைனில் ஆய்வு செய்த பிறகு தானும் பதிவு செய்து கொண்டார்.
“காப்பீடு பாலிசிக்கு பதிவு செய்ய முயன்ற போது ஆவணப்பணிகளில் சிக்கல் உண்டானது. ஆனால் காஷ்வி குழுவினர் எனக்கு உதவி செய்தனர். இந்த இரண்டு பாலிசிகளும் என் வாழ்க்கையில் மிகுந்த நிம்மதியை கொண்டு வந்துள்ளது. ஏனெனில், சிறிய தொகையை செலுத்துவது மூலம் எதிர்காலத்தில் ஏதேனும் எதிர்பாராதது நடந்தால் பாதுகாப்பு கிடைப்பது உறுதியாகி உள்ளது,” என்கிறார் அவர்.
காஷ்வி நடத்தும் நிகழ்ச்சிகள் நிதி கல்வியறிவும் அளிக்கின்றன.
“நிதி கல்வியறிவு மக்களை சுதந்திரமாக்கி, தகவல் சார்ந்த முடிவு எடுக்க உதவுகிறது. எனவே, அவர்களிடம் சேமித்து முதலீடு செய்து, பணத்தை நன்றாக நிர்வகித்து செல்வ வளத்தை உருவாக்கி கொள்ள வலியுறுத்துகிறோம்,” என்கிறார் காஷ்வி.
சவால்கள்- எதிர்காலம்
எந்த பயணமும் தடைகள் இல்லாதது அல்ல. காஷ்வியின் பயணமும் இதற்கு விதிவிலக்கு அல்ல. அவர் ஆங்கிலம், இந்தியில் பேசுவதால், மற்ற மொழி பேசும் தொழிலாளர்களுடன் பேசுவதை சிக்கலாக்குகிறது.
“இந்த சிக்கலை எதிர்கொள்ள குறிப்பிட்ட மொழி பேசும் தன்னார்வலர்களை நாடுகிறோம்,” என்கிறார். இது தவிர, பலரும் தங்கள் தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்து கொள்ள தயங்குகின்றனர் என்கிறார்.
“மக்கள் மோசடியை நினைத்து அஞ்சுவதால், யாரையும் எளிதாக நம்பவதில்லை. பயிற்சி நிகழ்ச்சிகளின் போது பங்கேற்பாளர்களுடன் நம்பிக்கையை ஏற்படுத்துவது கடினமானது. அவநம்பிக்கையை போக்குவதன் மூலம் நம்பிக்கையை உருவாக்குகிறோம்”.
தனது வயதும் ஒரு காரணம் என்கிறார். சிறிய வயது காரணமாக பலரும் தன்னை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்கிறார். தனது பணி வெறும் பொழுதுபோக்கு அல்ல, சமூக நோக்கிலான ஈடுபாடு என்பதை உணர்த்துவது கடினமாக இருப்பதாகவும் கூறுகிறார். இவற்றை எல்லாம் மீறி, தந்தை தனது மிகப்பெரிய ஆதரவாளராக இருப்பதாகக் கூறுகிறார். நிறுவனத்திற்கான லாஜிஸ்டிக்ஸ் விவரங்களை கவனிப்பது முதல் காட்சி விளக்கத்தை தயார் செய்வது வரை, உதவுவதோடு, சவாலான தருணங்களில் ஊக்கம் அளிக்கும் நபராகவும் தந்தை விளங்குவதாக கூறுகிறார்.
மேலும், மாணவியாக இருப்பதால், படிப்பு மற்றும் நிறுவனத்தை கவனித்துக்கொள்வது சவாலாக இருப்பதாகவும் கூறுகிறார். எனினும் வாழ்க்கையில் இலக்குகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்கிறார். பணிகளை சமாளிக்க திட்டமிட்டு செயல்படுவதாகவும் கூறுகிறார்.
எதிர்காலத்தில் நிறுவனத்தை பெரிதாக்கி, மேலும் பலரை சென்றடைய வேண்டும் என்கிறார்.
“பயனாளி தகுதி உடைய அரசு திட்டங்களை தேர்வு செய்து பரிந்துரைக்கும் செயலியை இணையதளத்தில் ஒருங்கிணைக்க இருக்கிறோம். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் செயல்முறையை இது எளிதாக்கும் என்கிறார்.