Contact Information

JKrish Pvt Ltd, AIC Raise, Rathinam Techzone, Eachanari, Coimbatore. Tamilnadu - 641 021.

We Are Available 24/ 7. Call Now.

தென்னிந்திய ஸ்நாக்ஸ்களை கோவையில் இருந்து உலகளவில் கொண்டு செல்லும் ஊர்ல.காம்


திருநெல்வேலி அல்வா, ஸ்ரீவில்லிப்புத்துார் பல்கோவா, நாகர்கோவில் நேந்திர சிப்ஸ், கோவில்பட்டி கடலைப்பட்டி என எல்லா ஊரு ஸ்பெஷல் அயிட்டங்களையும் இப்போ ஒரே ஊர்ல-யே வாங்கலாம் தெரியுமா?. அடடே, செம மெட்டராச்சே… அப்படி எந்த ஊருல எல்லாமே கிடைக்குதுனு தான கேட்குறீங்க! அட, “ஊர்ல”-தாங்க கிடைக்குது.

அதாகப்பட்டது, “Oorla” எனும் இணையதளப் பக்கத்தில் தமிழ்நாட்டின் அனைத்து பிரபல ஸ்நாக்ஸ் வகைகளும் விற்பனை செய்யப்படுகின்றன. தமிழ்நாடு மட்டுமின்றி பார்டர் தாண்டி, கேரளா, ஆந்திராவின் பிரபல பலகாரங்களையும் ஒரே இடத்தில் வாங்கி ருசிக்கும் வகையில், ‘ஊர்ல’ எனும் ஸ்டார்ட்அப் நிறுவனத்தை துவங்கி அதில் வெற்றியும் கண்டுள்ளனர் அதன் நிறுவனர்களான சரவண குமார் மோகன்ராஜ், அரவிந்த் சரவணபவன், பிராபகரன் பாலசுந்தரம் சேர்ந்த நால்வர் அணி.

தென்னிந்திய பிராந்திய ஸ்நாக்ஸ் வகைகளை உலகளாவிய சந்தைக்குக் கொண்டு வருவதற்கான யோசனையையும், அதற்கான உந்துதலையும் அளித்துள்ளார் காயத்ரி தேவி கணேசன். ஏனெனில், அமெரிக்காவில் வசித்துவந்த அவருக்கு ஆசைப்படும் நேரத்தில் நம்மூர் பலகாரங்களை ருசிக்க முடியாமல், ஏங்கியுள்ளார். அவர் மட்டுமின்றி, சொந்த ஊரை விட்டு தொலைதுாரத்தில் வாழும் அனைத்து இந்தியர்களின் ஏக்கமும் அதுவே என்பதை அவர் உணர்ந்த கணத்தில் பிறந்தது ஊர்ல ஸ்டார்ட்அப்பிற்கான விதை.

பின், அந்த யோனைக்கு வடிவம் கொடுக்க சரவணன், அரவிந்த், பிராபகர் ஆகியோரும் இணைந்து 2021ம் ஆண்டு நிறுவனத்தை தொடங்கியுள்ளனர்.

“2021ம் ஆண்டு தீபாவளியின் போது முதல் தயாரிப்பை டெக்சாஸுக்கு அனுப்பினோம். 10 வெவ்வேறு தென்னிந்திய இனிப்புகள் மற்றும் காரவகைகள் அடங்கிய பலகாரப்பெட்டி அது. வெவ்வேறு பிராந்தியங்களின் புகழ்பெற்ற விற்பனையாளர்களிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து பலகாரப்பெட்டி திட்டமிட்டு தயாரித்தோம். அது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றியும் பெற்றது. வெறும் 30 நாட்களுக்குள், சுமார் 850 ஆர்டர்களை பெற்றோம். அதுதான் எங்களின் ஆரம்பம்,” என்றார் மோகன்ராஜ்.

கோயம்புத்துாரைச் சேர்ந்த இந்த பிராண்டானது, இந்த மாதத் தொடக்கத்தில், அதன் இனிப்பு மற்றும் கார வகைகளை, அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தின் டென்வர் நகரில் அதன் தயாரிப்புகளை காட்சிப்படுத்தியது. இதுவரை 50,000 ஆர்டர்களை பெற்றுள்ள நிறுவனம் 2024ம் நிதியாண்டிற்குள் ரூ.14 கோடி வருவாயை ஈட்டும் என்று எதிர்பார்ப்பதாகவும், நிறுவனத்தை துவங்கியதிலிருந்தே லாபத்தை பெற்று வருவதாகவும் மோகன்ராஜ் தெரிவித்தார்.

ஊர்ல-வின் ஆரம்பம்…

ஊர்ல நிறுவனம் அதன் தொடக்க நாட்களில், அதன் நிறுவனர்கள் உருவாக்கி, இயக்கிய சமூக ஊடக பக்கங்களில் விளம்பரம் செய்து அதன் மூலம் ஆர்டர்களைப் பெற்றது. விரைவில், இந்த பிராண்டானது வாய்மொழி மூலம் பிரபலமடையத் தொடங்கியதன் விளைவாய் உள்ளூர் தொடங்கி அமெரிக்காவில் உள்ள வாடிக்கையாளர்களிடமிருந்து ஆர்டர்கள் கிடைத்தன.

தொடக்கத்தில், பிரபலமான கடைகள் மற்றும் ஆத்தன்டிக்கான உணவு வகைகளை தயாரிப்பதில் புகழ்பெற்ற குடும்பங்களிடமிருந்து பலவிதமான தின்பண்டங்களை தேர்ந்தெடுத்து வாங்கியுள்ளனர். இந்த செயல்முறையில் நேரமும், உழைப்பும் அதிகம் இருந்தாலும், உள்ளூர் வணிகங்கள் மற்றும் வாடிக்கையாளர்களுடன் தொடர்புகளை உருவாக்கி கொள்ள உதவியுள்ளது.

இன்டர்நேஷனல் மார்க்கெட் அனாலிசிஸ் ரிசர்ச் அண்ட் கன்சல்டிங் குழுவின் (ஐஎம்ஆர்சி) அறிக்கையின்படி, இந்திய சிற்றுண்டி சந்தையானது 2023ம் ஆண்டில் ரூ.42,695 கோடியாக இருந்துள்ளது. 2032ம் ஆண்டுக்குள் சந்தையின் மதிப்பானது ரூ.95,522 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஊர்ல பிராண்டானது சந்தையில் நுழைந்த போது, சந்தையில் ஏற்கனவே கோலோச்சியிருந்த ‘ஸ்வீட் காரம் காபி’ போன்ற நிறுவனங்களுடன் போட்டியிட வேண்டியிருந்தது.

ஸ்வீட் காரம் காபி ஆனது கடந்த ஆண்டு Fireside Ventures இலிருந்து $1.5 மில்லியன் முதலீட்டையும், Adukale மற்றும் The State Plate போன்ற நிறுவனங்களிலிருந்தும் முதலீட்டையும் பெற்றுள்ளது.

தென்னிந்திய தின்பண்டங்கள் மற்றும் கார நொறுக்கு தீனிகள் சந்தையை முதன்மையாகக் குறிவைக்கும் மற்ற போட்டியாளர்களைப் போலில்லாமல், இந்தியாவின் பிற பகுதிகளின் பிரபலமான திண்பன்டங்களைப் பெற்று அதற்கான சந்தையை உருவாக்குவதையும் ஊர்ல நோக்கமாகக் கொண்டுள்ளது. அந்தவகையில், ஆந்திரா, தெலுங்கு மற்றும் தமிழ் உணவு வகைகளில் ஸ்பெஷலாக விளங்குவதன் மூலம் ஊர்ல பிராண்டானது சந்தையில் தனித்து நிற்கிறது. தற்போது 50 நாடுகளில் அத்தயாரிப்புகளை விற்பனை செய்கிறது. தவிர, வெளிநாட்டு சந்தையிலும் கவனம் செலுத்தி வருவதாக மோகன்ராஜ் தெரிவித்தார்.

இதுவரை, 30க்கும் மேற்பட்ட விற்பனையாளர்களுடன் கூட்டு சேர்ந்து நிறுவனமானது அதன் தயாரிப்புகளை பெறுகிறது. விற்பனையாளர்களிடமிருந்து பெறப்படும் தயாரிப்புகளின் தரத்தினை பரிசோதிப்பதற்காகவே கோயம்புத்துாரில் ஒரு ஆய்வகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தயாரிப்புகளின் தரத்தில் அதிக கவனம் செலுத்தி வரும் இந்நிறுவனம், 7 முதல் 10 நாட்கள் வரை கெட்டு போகாத பொருட்களை கொண்டுள்ளது. அப்படியானால், தயாரிக்கப்பட்ட சில நாட்களுக்குள் உட்கொள்ள வேண்டிய இனிப்புகளை நிறுவனம் எவ்வாறு வாடிக்கையாளர்களுக்கு அனுப்புகிறது? என்ற கேள்விக்கு பதிலளித்த அதன் நிறுவனர்,

“அனைத்து தயாரிப்புகளும் வாடிக்கையாளர்களிடமிருந்து ஆர்டர் பெறப்பட்ட பின்னே, தயாரிக்கப்படுகின்றன. சில விற்பனையாளர்கள் ஊர்ல-வுக்காக பிரத்தியேகமாக பொருட்களை தயாரிக்கின்றனர். 24 முதல் 48 மணி நேரத்திற்குள் தயாரிப்புகளை வழங்கக்கூடிய விற்பனையாளர்களுடன் மட்டுமே நிறுவனமானது கூட்டுச் சேர்ந்துள்ளது. விற்பனையாளர்களிடமிருந்து தயாரிப்புகளை பெற்றப் பிறகு, மூன்று முதல் ஐந்து வேலை நாட்களுக்குள் பொருட்கள் பேக் செய்யப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும். எந்தவொரு பொருளையும் சரியான ஷெல்ஃப் லைஃப் உடன் அதன் மூல உற்பத்தி தளத்திலிருந்து பெற்று விற்க விரும்புகிறோம்,” என்றார்.

சந்திக்கும் சவால்களும், அதிலிருந்து மீளுதலும்…

லாஜிஸ்டிக்ஸினை கையாள்வதில் பிராண்டானது மிகப்பெரிய சவாலாக சந்திக்கிறது. ஏனெனில், உணவுப்பொருள் ஏற்றுமதி, இறக்குமதியில் ஒவ்வொரு நாடுகள் சில விதிமுறைகளை பின்பற்றுவதால், அவற்றை பின்பற்றி பொருட்களை நுகர்வோரின் கைக்கு சென்றடைய வைப்பதில் சவால்களை எதிர்கொள்கிறது.

இச்சவால்கள் நுகர்வோரை எவ்விதத்தில் பாதிப்டையாமலிருக்க, வாடிக்கையாளர்களது கேள்விகளுக்கு உடனுக்குடன் பதிலளிக்கின்றது. இச்செயலின் கூடுதல் பலனாய், வாடிக்கையாளர்கள் மத்தியில் பிராண்டின்மீதான நம்பிக்கைத்தன்மையும் அதிகரித்துள்ளது.

“தற்போது, பல ப்ராண்டுகள் இந்த ஸ்னாக் பிரிவில் இருந்தாலும், oorla.com நிறுவனம் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை வெற்றிகரமாக பெற்றுள்ளது. எதிர்காலத்தில் இந்த நம்பிக்கை மற்ற தயாரிப்பு வகைகளுக்கும் விரிவடையும் என்று நம்புகிறோம். இது பிராண்ட் மற்றும் வணிகம் செழிக்க வழி வகுக்கும். தென்னிந்திய தயாரிப்புகளுக்கு அப்பால் நகர்ந்து, மேற்கு, கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளின் பிரபலமான தயாரிப்புகளையும், ஊர்ல-வின் தயாரிப்பு வரிசையில் சேர்த்து அதற்கான சந்தையை எதிர்காலத்தில் உருவாக்க வேண்டும்,” என்றுக் கூறி முடித்தார்.

Share:

administrator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *