ஆண்டுக்கு ரூ.50 லட்சம் – முடக்கக் காலத்தில் முளைத்த காளான் பிசினஸில் அசத்தும் தம்பதியர்!
கொரோனா முடக்க காலம் பல எதிர்பாராத திருப்பங்களை கொடுத்துவிட்டு சென்றதை யாராலும் மறக்க முடியாது. கொரோனா காலம் கொடுத்த தாக்கம், அது வீழ்ச்சியாக இருந்தாலும் சரி, வளர்ச்சியாக இருந்தாலும் இன்னும் நம்மை விட்டு நீங்கவில்லை. அப்படி கொரோனா காலத்தில் மாற்றி யோசித்து வளர்ச்சியை சந்தித்த ஒரு காதல் தம்பதியின் மூன்றெழுத்து கதையே ‘நுவேடோ’ (Nuvedo).
நவீனத்தின் வளர்ச்சி என்கிற பெயரில் செயற்கைகள் அதிகமானதன் காரணமாக மக்கள் ஆர்கானிக் உணவு பக்கம் மாறி வருகின்றனர். இந்தியாவிலும் ஆர்கானிக் உணவுகளுக்கான வரவேற்பு பெரிய அளவில் அதிகரித்து வருகிறது. அப்படி ஆர்கானிக் உணவை அடிப்படையாக கொண்டு பெங்களூருவைச் சேர்ந்த ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனமே ‘நுவேடோ’.
கேரளாவின் ஜஸித் ஹமீத் – பிரித்வி கினி இருவரும் காதல் தம்பதிகள். பிட்ஸ் பிலானியில் உற்பத்தி துறை சார்ந்த பொறியியல் படிப்பு முடித்த ஜஸீத், ஆதித்யா பிர்லா ஃபேஷன் நிறுவனத்தில் ஆப்பரேஷன்ஸ் மேனேஜராக பதவி வகித்தார். பிரித்வி கினியோ தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி வந்தார். 6 ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்த கொண்ட இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர்.
அனுபவம் தந்த ஐடியா:
தம்பதியினர் இருவருக்குமே சொந்தமாக நிறுவனம் தொடங்க வேண்டும் என்பதே கனவு, இருவருக்குமே சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையிலான இயற்கை உணவுகள் மீது ஆர்வமும் அதற்கு ஒரு காரணம். அதற்காக, ஒரு வருடம் ஆந்திரா, கர்நாடகா மற்றும் இமாச்சலப் பிரதேசம் போன்ற பல பகுதிகளில் சுற்றி பல பண்ணைகளில் விவசாயம் கற்றுக்கொண்டுள்ளனர்.
அந்தக் கற்றலில் இயற்கை விவசாயத்தை முழுமையாக கையிலெடுக்க வேண்டும் என்றால் பல ஆண்டுகள் ஆகும் என்பதை இருவரும் உணர்ந்தனர். இதனால் மாற்றுப் பாதைகளை தேடிக்கொண்டிருந்தவர்களுக்கு தேடலுக்கான பதிலாக அமெரிக்காவில் இருந்து சில பாக்கெட்டுகளில் வந்தது ‘நுவேடோ’வுக்கான ஸ்டார்ட்-அப் ஐடியா.
பெங்களூருவுக்குச் சென்ற பிறகு, அடிக்கடி உடல் அலர்ஜியால் அவதிப்பட்டு வந்துள்ளார் ஹமீத். இதற்காக பல மருந்துகள் எடுத்தும் சரியாகவில்லை. அப்போதுதான் அவரின் அமெரிக்க நண்பர் ஒருவர் அங்கு பிரபலமான உணவுப் பொருளான காளான் சாறுகளை கொடுத்துள்ளார். இதை உட்கொண்ட பிறகு மூன்றே மாதங்களில் அலர்ஜி மறைந்துவிட்டன.
இதற்கு மத்தியில் கொரோனா தொடங்கிவிட, அமெரிக்காவில் இருந்து காளான் சாறு கிடைப்பது கடினமாகிவிட்டது. இந்தியாவில் அப்படியான பொருள் எதுவும் கிடைக்கவில்லை.
அந்த காளான் சாறு பிசினஸையே தங்களின் ஸ்டார்ட் அப்-ஆக மாற்றினால் என்ன மாற்றி யோசித்த தொடங்கினார்கள். அப்படி உதயமானதுதான் ‘நுவேடோ.
பெங்களூரை அடிப்படையாக கொண்டு ‘நுவேடோ’ நிறுவனம் மூலம் காளான் வளர்ப்பு கருவிகள் மற்றும் காளான் சாறுகளை விற்பனை செய்து வருகிறது.
நுவேடோவில் காளான் வளர்ப்பு தொகுப்பை வாங்குபவர் வீட்டிலேயே காளானை வளர்க்க முடியும். பல்வேறு வகையான காளான்கள் கிடைப்பதால் மக்களிடையே அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக, இவர்களின் பங்கஷனல் காளான் (functional mushrooms).
இவை மருத்துவ குணங்கள் அதிகம் உள்ள காளான் வகை ஆகும். 2000 ஆண்டுகளாக பழங்குடிகள் மத்தியில் அதிகம் புழங்கப்படும் இந்த வகை காளான்கள் வளர்ப்பில் ‘நுவேடோ’ தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
பிளஸ் பாய்ன்ட்
குறிப்பாக, ரசாயனம் ஏதும் கலக்காத பல காளான் வளர்ப்பு முறை, அதாவது, 100% இயற்கையான முறையில் இருக்கும் தொகுப்பே இவர்களின் பிசினெஸ்க்கான பிளஸ் பாயின்ட். இதற்கு வரவேற்பும் கிடைத்தது.
2022-ல் ரூ.10,000 முதலீட்டில் தொடங்கப்பட்ட ‘நுவேடோ’ முதல் ஆண்டில் 6 லட்சம் ரூபாய் வருமானத்தையும், இரண்டாவது ஆண்டில் 25 லட்சம் ரூபாய் வருமானத்தையும், இந்த நிதியாண்டில் 50 லட்சம் ரூபாய் வருமானத்தையும் ஈட்டிக் கொடுத்துள்ளது.
அதுமட்டுமில்லாமல், சமீபத்தில் பிரபல வணிக ரியாலிட்டி ஷோவான ‘ஷார்க் டேங்க் இந்தியா’வில் கலந்துகொண்டு நுவேடோவை உலக மக்களுக்கு கொண்டு சேர்க்கும் முயற்சியை செய்தனர் தம்பதியினர் இருவரும். அதேபோல் கர்நாடக அரசின் ரூ.20 லட்சம் மானியத்தையும் நுவேடோ வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.