ரூ.89 கோடி டு ரூ.10,000 கோடி – மல்லிகா ஸ்ரீனிவாசன் ‘இந்தியாவின் டிராக்டர் குயின்’ ஆனது எப்படி?
இந்தியாவில் பெரும் பிரச்சினைகளை சந்திக்கும் முதன்மையான தொழில்களுள் ஒன்று விவசாயம். அப்படியிருக்கையில், விவசாயம் குறித்து எதுவும் தெரியாமல், நகரத்தில் வளர்ந்த ஒருவர், விவசாயிகளோடு தொடர்புடைய, அவர்களுக்கு தேவையான உபகரணத்தை தயார் செய்கிற ஒரு நிறுவனத்தை வழிநடத்துவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.
ஆனால், தனது இடைவிடாத லட்சியம், புதுமை மற்றும் தலைமைப் பண்பு காரணமாக சாதித்து காட்டி கோடிகளை குவிக்கும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியவர்தான் மல்லிகா சீனிவாசன்.
யார் இந்த மல்லிகா சீனிவாசன்?
உலகின் மூன்றாவது பெரிய டிராக்டர் உற்பத்தி நிறுவனமான ‘டஃபே’ (Tractors and Farm Equipment Limited – TAFE) தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர்தான் இந்த மல்லிகா சீனிவாசன். சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரான சிவசைலத்துக்கு மகளாகப் பிறந்து, மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியில் கணித பட்டப்படிப்பு, சென்னைப் பல்கலைக்கழகத்தில் பொருளாதார பட்டப்படிப்பு, பின்னர் அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்டன் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் எம்.பி.ஏ படிப்பில் கோல்டு மெடல் வென்றவர் மல்லிகா. டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைவர் வேணு சீனிவாசனின் மனைவி.
இந்தியாவின் பிரபலமான பிசினஸ்மேன் மனைவி என்பதை தாண்டி, தனது கல்வி மற்றும் அறிவுக்கூர்மையால் தொழில்துறையில் தனக்கென தனி முத்திரை பதித்தார் மல்லிகா. அவரின் தந்தையின் நிறுவனமே ‘டஃபே’.
1986-ல் மல்லிகா ‘டஃபே’யில் இணைந்தபோது அந்நிறுவனம் ஈட்டிக்கொண்டிருந்த வருமானம் 86 கோடி ரூபாய் மட்டுமே. அத்துடன், எண்ணற்ற பிரச்சினைகள் வேறு நிலவியது.
நஷ்டத்தை சந்திக்க நேர்ந்த காலத்தில், தன்னுடைய துணிச்சலான முடிவுகளால் ‘டஃபே’யின் வரலாற்றை மாற்றி எழுதியதோடு, தற்போது வருவாய் ரூ.10,000 கோடிக்கு மேல் கிடைக்கும் அளவுக்கு உயர்த்தினார் மல்லிகா.
அந்தக் காலக்கட்டத்திலேயே பல கோடி ரூபாயைக் கொட்டி, புதிய தொழில்நுட்பங்களை டஃபே டிராக்டர்களிலும் விவசாயக் கருவிகளிலும் இணைக்க முனைந்தார். ஏனென்றால், அப்போது புதிய தொழில்நுட்பங்களை கொண்டுவராமல் சில நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்துக் கொண்டிருந்தன. அந்த நிலைமைக்குச் செல்லாமல், நிறுவனத்தில் புதுமையை புகுத்தினார். டிராக்டர் உற்பத்தியிலும் புதிய தொழில்நுட்பங்கள் கொண்டுவரப்பட்டது. அதற்கு நல்ல பலன் கிடைத்தது.
‘வின் – வின்’ முறையில் அசத்தல்
டஃபேயின் டிராக்டர் உற்பத்தியை அதிகப்படுத்திய மல்லிகா, டிராக்டர்கள் முதல் அறுவடை இயந்திரங்கள், கலப்பைகள் என விவசாயிகளுக்கான அனைத்து உபகரணங்களும் கிடைக்கும் வகையில் நிறுவனத்தை மாற்றியமைத்தார். இது விவசாயிகளுக்கும் பலன் கொடுத்தது. இதனால் பயிர்களின் உற்பத்தித்திறன் அதிகரித்ததோடு விவசாயிகளின் வாழ்வாதாரமும் எளிதானது.
இவற்றின் பலனாக, விவசாயிகள் டஃபேயின் பக்கம் திரும்பத் தொடங்கினர். விற்பனையும் அதிகமாகின. இதனால், விவசாயத் துறையில் வளர்ந்து வரும் தேவைகளை நிவர்த்தி செய்யும் வண்ணம் தொடர்ந்து தனது நிறுவனத்தில் புதுமைகளை கொண்டுவந்தார்.
பொதுவாக விவசாயத்துக்கு சுற்றுச்சூழல் மிக அவசியம். அதனை உணர்ந்து, பொறுப்புணர்வு உடன் சுற்றுச்சூழலுக்கு உகந்த தயாரிப்புகளை வெளியிடுவதில் டஃபே தொடர்ந்து கவனம் செலுத்திவந்ததுக்கு முக்கியக் காரணமும் மல்லிகா சீனிவாசன்தான்.
பிசினஸ் என்று வந்துவிட்டால் போட்டியாளர்களை சமாளித்தால் மட்டுமே வெற்றி என்பதை தாண்டி நிலைத்து நிற்க முடியும். அந்த வகையில், டஃபே சில முக்கிய நகர்வுகளை மல்லிகா தலைமையில் மேற்கொண்டது. அவற்றில் குறிப்பிடத்தக்கவை, போட்டி நிறுவனமான ஐச்சர் டிராக்டர் நிறுவனத்தை தன் வசப்படுத்திய மல்லிகாவின் யுக்தி.
உலகளவில் டிராக்டர் போன்ற விவசாய உபகரணங்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக இருந்து வரும் AGCO கார்ப்பரேஷனின் Massey Ferguson நிறுவனத்துடன் பார்ட்னர்ஷிப் ஏற்படுத்தியது என்று மல்லிகாவின் தலைமையில் டஃபே சில மைல்கல்களை எட்டியது.
இதனால், ரூ.10,000 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டி உலகின் மூன்றாவது பெரிய டிராக்டர் உற்பத்தி நிறுவனமாக டஃபே-வை உயர்த்தியதுடன், இந்தியாவின் விவசாயக் கட்டமைப்பையும் மறுவடிவமைத்து ‘டிராக்டர் குயின்’ என்று அழைக்கப்படுகிறார் மல்லிகா சீனிவாசன்.
‘கொடை’யிலும் டாப்!
தொழிலில் மட்டுமல்ல, வாரி வழங்குவதிலும் மல்லிகா டாப் தான். தனிப்பட்ட முறையில், திருநெல்வேலி மாவட்டத்தில் கல்வி மற்றும் சுகாதாரத்தில் சில முன்முயற்சிகளை செய்து வரும் மல்லிகா, சங்கர நேத்ராலயா மற்றும் சென்னையில் உள்ள புற்றுநோய் மருத்துவமனைகளுக்கு நிதியுதவி அளித்து வருகிறார். மேலும், தனது பெற்றோர்களான இந்திரா – சிவசைலம் அறக்கட்டளை மூலம் நிறைய நற்காரியங்களை செய்து சமூக பங்களிப்பும் செய்து வருகிறார்.
இவற்றின் காரணமாக மல்லிகா எண்ணற்ற விருதுகளை வென்றுள்ளார். 2014-ல் பத்மஶ்ரீ விருது, ஃபோர்ப்ஸ் ஆசியாவின் சிறந்த 50 பெண்கள் பட்டியலில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
இவை தவிர, இந்திய – அமெரிக்க வர்த்தகக் கவுன்சில் இயக்குநர் குழுவில் உறுப்பினர், டாடா ஸ்டீல் இயக்குநர் குழுவில் உறுப்பினர், ஐ.ஐ.டி மெட்ராஸ், பாரதிதாசன் நிர்வாகவியல் மையம், ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி உள்ளிட்ட கல்வி மையங்களின் இயக்குநர் குழுவில் உறுப்பினர், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் தலைவர் உள்ளிட்ட உயர் பதவிக்கானவர்களை தேர்வுசெய்யும் வாரியமாக செயல்பட்டு வரும் பி.இ.எஸ்.பி. (Public Enterprises Selection Board – PESB) அமைப்பின் தலைவர் என எண்ணற்ற கௌரவங்களும் மல்லிகாவுக்கு தேடி வந்தன.
தொலைநோக்குப் பார்வை கொண்ட மாணவராக இருந்தது முதல் உலகளாவிய நிறுவனம் ஒன்றின் தலைவராக உயர்ந்தது வரை மல்லிகா சீனிவாசனின் பயணம் என்பது உறுதி, புதுமை மற்றும் தலைமைத்துவ பண்புகளை கொண்டது. விவசாயத் துறையில் அவரது அர்ப்பணிப்பு என்பது எதிர்கால சந்ததியினருக்கு ஒரு ஊக்கமளிக்கும் கதை.
டஃபேயின் வெற்றிகரமான தலைவர் என்ற முறையில் மல்லிகா சீனிவாசனின் பாரம்பரியம் இந்தியாவிலும் அதற்கு அப்பாலும் உள்ள ஆர்வமுள்ள தலைவர்களுக்கு ஒரு கலங்கரை விளக்கமாக உள்ளது என்றால் மிகையல்ல.
தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமை உண்மையில் தொழில்களையும் சமூகங்களையும் எவ்வாறு மாற்றும் என்பதற்கு மல்லிகா சீனிவாசனே சாட்ச