26 வயதில் ரூ.416 கோடிக்கு அதிபதி… டிஜிட்டல் உலகின் ‘இன்பாக்ஸ் மேன்’ கிஷன்!
திப்ருகரின் அமைதியான தெருக்களில் இருந்து தொழில்நுட்ப சக்தியாக உருவெடுத்த கிஷன் பகாரியாவின் வெற்றிப் பயணமே இக்கதை.
அசாமின் திப்ருகரைச் சேர்ந்த ஓர் இளைஞன் தன் கனவுப் படைப்பு தனக்குப் புகழையும் பணத்தையும் சேர்த்து உலகளாவிய அங்கீகாரத்தையும் பெற்றுத் தரும் என்று நினைத்துக்கூடப் பார்த்திருக்கவில்லை.
அந்த இளைஞர் பெயர் கிஷன் பகாரியா. திப்ருகரின் அமைதியான தெருக்களில் இருந்து தொழில்நுட்ப சக்தியாக உருவெடுத்த கிஷன் பகாரியாவின் வெற்றிப் பயணமே இக்கதை.
கிஷனின் கதை தொழில்நுட்ப அறிவைப் பற்றியது மட்டுமல்ல; டிஜிட்டல் கல்வியறிவு எப்படி ஒரு டெவலப்பரின் விதியை மாற்றி எழுதும் என்பதை வளரும் டெவலப்பர்களுக்கு விவரிக்கும் கதையாகும்.
சிறுவயதிலே கிஷன் ஓர் ஆர்வமுள்ள குழந்தை. அந்த ஆர்வமே அவரை தொழில்நுட்பத்தில் ஒரு கண்டுபிடிப்பாளராக மாற்றியது. தொழில்நுட்ப உலகில் நுழைந்தபோது கிஷனிடம் ஒரு கணினியும் இன்டெர்நெட் தவிர வேறு எதுவும் இல்லை. எனினும், அதைக் கொண்டு விண்டோஸ் அப்ளிகேஷன்களில் அவர் செய்த ஆரம்பகால பணிகள், தொழில்நுட்ப உலகில் அவருக்கென இடத்தை பிடிப்பதற்கான அடித்தளத்தை அமைத்து கொடுத்தது.
Texts.com எனும் புரட்சி
ஸ்மார்ட்போன்களில் WhatsApp, Instagram மற்றும் Twitter என்று ஏராளமான மெசேஜிங் ஆப்ஸ்களால் நிரம்பி வழியும் இக்காலகட்டத்தில், இவற்றுக்கான ஒருங்கிணைந்த தீர்வே 26 வயதான கிஷன் உருவாக்கிய Texts.com. விரிவாக சொல்வதென்றால் WhatsApp, Instagram மற்றும் Twitter போன்ற பல மெசேஜிங் ஆப்களில் இருந்து வரும் மெசேஜ்களை ஒரு இன்டர்பேஸ் மூலம் ஒருங்கிணைந்து ஒரே இடத்தில் வழங்கும் ஆப் தான் இந்த Texts.com.
இன்னும் சிம்பிளாக சொல்வதென்றால், அனைத்து மெசேஜ்களுக்கும் ஒரே இன்பாக்ஸ் தான் இந்த Texts.com. எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன், டிஜிட்டல் தகவல் தொடர்புகளில் தனியுரிமை என்று பல்வேறு வசதிகளை Texts.com வழங்குகிறது.
ரூ. 400 கோடிக்கான அதிபதி
கிஷனின் Texts.com-ன் வெற்றியின் உச்சம் சமீபத்தில் இந்நிறுவனத்தை அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான ஆட்டோமேட்டிக் (Automattic) நிறுவனம் 50 மில்லியன் டாலருக்கு கைப்பற்றியபோதே Texts.com-யையும், கிஷனின் மகிமையை அனைவரும் அறியத் தொடங்கினர்.
50 மில்லியன் டாலர் என்னும் போது, அதன் இந்திய மதிப்பு தெரியுமா..? ஆம், சுமார் ரூ.416 கோடி. ஆட்டோமேட்டிக் நிறுவனம் ஒரே இரவில் கிஷனை கோடீஸ்வரராக்கியது.
ஆட்டோமேட்டிக் நிறுவனம், பிரபல வேர்ட்பிரஸ்.காம் (WordPress.com) மற்றும் டம்ப்ளர் (Tumblr) ஆகியவற்றின் உரிமையாளரான மாட் முல்லெங்கிற்கு சொந்தமானது.
Texts.com-ஐ வாங்கிய ஆட்டோமேட்டிக் நிறுவனம், தொடர்ந்து கிஷனையே Texts.com-இன் செயல்பாடுகளுக்கு பொறுப்பேற்க கேட்டுக் கொண்டது. அதன்படி, ஆட்டோமேட்டிக்கின் ஆதரவுடன், கிஷன் இப்போது Texts.com குழுவுக்கு தலைமை தாங்கி வருகிறார். அதுவும் முன்பைவிட உலகளாவிய தொடர்பு சேவைகளுடன் பயனர் அனுபவங்களை மேம்படுத்துவதற்கு முழு வீச்சுடன் Texts.com-ஐ வழிநடத்தி வருகிறார்.
அவருக்கு கிடைத்த இந்த மதிப்பு, அவரது நிபுணத்துவத்தை மட்டுமல்ல… டிஜிட்டல் தகவல் தொடர்புகளை எளிதில் அணுகக் கூடியதாகவும் பாதுகாப்பாகவும் மாற்றுவதற்கான அவரது தொடர்ச்சியான அர்ப்பணிப்பையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
சிறுவயதில் இருந்தே தனது மகன் கணினி மீதும், தொழில்நுட்பம் மீதும் மிகுந்த ஆர்வத்துடன் எப்பொழுதும் சிறப்பாக செயல்படுவான் என்று கிஷனின் வெற்றி குறித்து நெகிழ்கிறார் அவரது தாய். ஆம், உண்மையில் தீராத ஆர்வமே கிஷனை 26 வயத்தில் இவ்வளவு பெரிய உயரத்துக்கு கொண்டுச் சென்றுள்ளது.
ஒரு தொழில்நுட்ப ஆர்வலராக டிஜிட்டல் தகவல்தொடர்புகளில் முன்னணி நபராக கிஷன் பகாரியா உயர்ந்தது, புதுமை மற்றும் விடாமுயற்சியை தொடர நினைப்பவர்களுக்கு நிச்சயம் ஊக்கமளிக்கக் கூடியது.
ஆர்வமும் புதுமையும் இருந்தால் டிஜிட்டல் உலகம் ஒருவரின் கைக்குள் அடங்கும் என்பதை டிஜிட்டல் உலகில் சாதிக்க துடிப்பவர்களுக்கு கிஷனின் பயணம் எடுத்துக்காட்டுகிறது.
கிஷன் அடுத்து என்ன கண்டுபிடிப்பார் என்று நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது, அவரது கதை டிஜிட்டல் பரிணாமத்தின் சரித்திரத்தில் ஒரு கட்டாய அத்தியாயமாக இடம்பெறும். ஆம், கிஷன் மற்றும் டெக்ஸ்ட்ஸ்.காமின் கதை சரித்திரத்தின் தடங்களை நோக்கி நடைபோட்டு கொண்டிருக்கிறது.