Contact Information

JKrish Pvt Ltd, AIC Raise, Rathinam Techzone, Eachanari, Coimbatore. Tamilnadu - 641 021.

We Are Available 24/ 7. Call Now.

உங்கள் வீடு, அலுவலக இடத்துக்கு ஏற்ப தேவையான பொருட்களை அடுக்கி அழகுப்படுத்தும் SortStory: மாற்றி யோசித்த டிசைனர் ஸ்மிருதி!

நம்மைச் சுற்றி இருக்கும் இடங்களை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றுதான் எல்லோரும் ஆசைப்படுவார்கள். ஆனால், வீட்டையோ, நம் அலுவலகத்தையோ சுத்தமாக வைத்துக் கொள்வது என்பது எல்லோருக்கும் கை வந்த கலையாக இருப்பதில்லை. குறிப்பாக வீட்டில் அலமாரிகள், சமையலறை போன்றவற்றை எவ்வளவுதான் சுத்தப்படுத்தினாலும், அது ஒரே வாரத்தில் மீண்டும் பழைய நிலைக்கே வந்து விடும். இதனால் மீண்டும் அதனை சுத்தப்படுத்த வேண்டும் என நினைத்தாலே அலுப்பாகத்தான் இருக்கும்.

இப்படி, தங்களைச் சுற்றியுள்ள இடங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள நினைத்தும், போதிய நேரம் அல்லது திட்டம் இல்லாமல் அவதிப்படுபவர்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது தான் ‘சார்ட் ஸ்டோரி’ ‘SortStory’

வித்தியாசமான யோசனை

பெங்களூரு NIFTல் பேஷன் டெக்னாலஜி முடித்துள்ள ஸ்மிரிதி பாட்டியா தான் இந்த ’சார்ட் ஸ்டோரி’யின் நிறுவனர். படித்து முடித்து ஐந்து வருடம் முன்னணி பிராண்ட் ஒன்றில் நல்ல பதவியில் இருந்த ஸ்மிரிதி, தொழில்முனைவோராக ஆசைப்பட்டு உருவாக்கியதுதான் இந்த சார்ட் ஸ்டோரி எனப்படும் வீடு, ஹாஸ்டல் மற்றும் அலுவலங்களை சீர்படுத்தி (declutter) மற்றும் பொருட்களை ஒழுங்குபடுத்தித் தரும் நிறுவனம். 

பேஷன் டெக்னாலஜி முடித்து விட்டு, புதுமையான இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தது குறித்து ஸ்மிருதி கூறுகையில்,

“சிறுவயதில் இருந்தே பொருட்களை நேர்த்தியாக, தூய்மையாக வைத்துக் கொள்வது எனக்கு மிகவும் பிடிக்கும். நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள் சீர்குலைந்து கிடந்தால், நமது மனதும் குழப்பமாக, எதிர்மறையான எண்ணங்களுடன் இருக்கும் என்பது எனது நம்பிக்கை. அதனாலேயே எப்போதும் என் பொருட்களை சீராக நிர்வகிப்பேன்,” என்கிறார்.

அதனாலேயே எனது தோழிகள், அவர்கள் வீடு மாற்றும் சூழல் ஏற்படும் போதெல்லாம் என்னை உதவிக்கு அழைப்பார்கள். நானும் அவர்களுக்குச் சென்று உதவுவேன். பேஷன் டெக்னாலஜி முடித்துவிட்டு, வேலை பார்த்து வந்தபோதும், நிறைய பேருக்கு இலவசமாக இந்த வேலையை நான் செய்து கொடுத்துள்ளேன்.

தேவை அதிகம்

நான் இந்த நிறுவனத்தை தொடங்குவதற்கு முன் ஆராய்ச்சி மேற்கொண்டபோது, என்னைச் சுற்றி இருந்தவர்கள் பெரும்பாலும் இந்தச் சேவையை தேடியது எனக்குத் தெரிய வந்தது. நாம் தங்கி இருக்கும் மற்றும் புழங்கும் இடங்களை சுத்தமாக, அழகாக நிர்வகிக்க யாராவது உதவ மாட்டார்களா என அவர்கள் தேடியது எனக்குப் புரிந்தது.

அதிலும் கடந்த சில ஆண்டுகளாக வீட்டில் இருந்தே வேலை செய்யும் சூழல் அதிகரித்துள்ள நிலையில், வீடு சுத்தமாக இல்லாவிட்டால் அது அலுவலக பணி தரும் அழுத்தத்தைவிட அதிக அழுத்தத்தை இளம் தம்பதிகளுக்குத் தருகிறது. அலுவலக வேலையையும் பார்த்துக் கொண்டே, அவர்கள் வீட்டையும் நிர்வகிக்க சிரமப்படுகின்றனர். அதோடு, இருக்கும் இடத்தில் பொருட்களை எப்படி அடுக்குவது என தெரியாமல் முழித்தவர்களுக்கு இந்த சேவை தேவை எனப் புரிந்தது.

அப்போதுதான் ஒரு கட்டத்தில் இதனையே நாம் ஒரு தொழிலாக மாற்றினால் என்ன என்ற எண்ணம் தோன்றியது. அதன் தொடர்ச்சியாக சிறிய அளவில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘சார்ட் ஸ்டோரி’யை ஆரம்பித்தேன். இப்போது தனியாக வெப்சைட் வைத்துள்ளோம், என்றார்.

”அதனால்தான், எனது வாடிக்கையாளர்களின் வாழ்க்கை முறை முடிந்தளவு முன்பைவிட சிறப்பாக அமைய என்னென்ன தேவையோ அதனை எங்கள் டீம் செய்து தருகிறது. இதன்மூலம், அவர்கள் தங்கள் இருப்பிடங்களில் மகிழ்ச்சியாக வசிப்பதோடு, நேர்மறையான மனநிலையையும் பெற முடிகிறது,” என்கிறார் ஸ்மிருதி.

ரீல்ஸ்கள் மூலம் நல்ல ரீச்

தனது தொழில் இந்தளவிற்கு மக்களைச் சென்றடைந்ததில், நிச்சயம் சமூகவலைதளங்களின் பங்கு அதிகம் என ஸ்மிருதி கூறுகிறார். குறிப்பாக ரீல்ஸ்கள்தான் நுகர்வோரை தான் எளிதாக சென்றடைய உதவியதாக அவர் குறிப்பிடுகிறார்.

“எனது வாடிக்கையாளர்களுக்கு நான் வீடு சார்டிங்கில் எப்படி அவர்களுக்கு உதவுவேன் என்பதை கற்பனை செய்து பார்க்க எனது ரீல்ஸ்கள் ரொம்பவே உதவியாக இருக்கிறது. வெறும் புத்தக அறிவை மட்டும் வைத்துக் கொள்ளாமல், எங்கள் வாடிக்கையாளரின் வாழ்க்கைமுறையைப் பற்றி ஆராய்ந்து, அதனை மனதில் வைத்துக் கொண்டு எங்களது வேலையை நாங்கள் மேற்கொள்கிறோம். இதுவே வாடிக்கையாளருக்கும், எங்களுக்குமான பிணைப்பை மேலும் வலுவாக்குகிறது.”

”எனது வாடிக்கையாளர்களுக்காக நான் செய்து தரும் ஒவ்வொரு இட நிர்வாக மாற்றமும் என்னைப் பெருமிதம் கொள்ளத்தான் வைக்கிறது. அவர்கள் எதிர்பார்த்தது மாதிரியே, அவர்கள் விரும்பும் வகையில் அவர்களது இடத்தை நாங்கள் மாற்றித் தருவதால் அவர்கள் திருப்தி அடைவதைப் பார்க்கும்போது, மகிழ்ச்சியாக இருக்கும்,” என்கிறார் ஸ்மிருதி.

சென்னை, மும்பை மற்றும் பெங்களூரு, ஹைதராபாத் என இந்தியாவின் முக்கிய நகரங்களில் முழு வீடு மற்றும் அலுவலக மறுசீரமைப்பு மற்றும் இடமாற்றங்களை சார்ட் ஸ்டோரி நிறுவனத்தினர் சிறப்பாக செய்து வருகின்றனர். இதுதவிர உலகத்தின் எந்த மூலையில் வாடிக்கையாளர் இருந்தாலும், நேரடியாக மட்டுமின்றி அவர்களது தேவைக்கேற்ப மெய்நிகர் (Virtual) ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர்.

கடினமான வேலை

இது மாதிரியான வித்தியாசமான தொழிலை தொடங்க நினைக்கும் ஒவ்வொருவரும் பின்வரும் மூன்று முக்கியமான விசயங்களை மனதில் கொள்ள வேண்டும் என ஸ்மிருதி கூறுகிறார்.

அதாவது, ‘ஒரு புதிய தொழிலை தொடங்கும்முன், அதற்கு சந்தையில் உள்ள தேவையைப் பற்றி முதலில் தெளிவான மற்றும் ஆழமான ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டும். இரண்டாவதாக, ஒரு இடத்தை நமக்காக தூய்மைப்படுத்தி, வரிசைப்படுத்துவதற்கும், மற்றவர்களுக்காக அதையே செய்வதற்கும் இடையில் பெரிய வித்தியாசம் உண்டு, அதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். மூன்றாவதாக, இந்த வேலை எந்த அளவுக்கு திருப்தி தரக்கூடிய ஒன்றோ, அதே அளவு கடினமானது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்,’ என்கிறார் ஸ்மிருதி.

Share:

administrator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *