Contact Information

JKrish Pvt Ltd, AIC Raise, Rathinam Techzone, Eachanari, Coimbatore. Tamilnadu - 641 021.

We Are Available 24/ 7. Call Now.

பேக்கஜ் உணவு தரத்தை உரக்கச் சொல்லும் இன்ஃப்ளூயன்சர் ரேவந்த் வெற்றிக் கதை!

ஹெல்த் இன்ப்ஃளூயன்சர்கள் உலகில் தனது தனித்துவமான நகைச்சுவையாலும், உணவுத் துறையின் கசப்பான உண்மைகளை வெளிப்படுத்துவதன் மூலமாகவும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறார் ரேவந்த் ஹிமத்சிங்கா.

‘ஃபுட் பார்மர் (Foodpharmer) எனப் பிரபலமாக அறியப்படும் ரேவந்த், அதிகம் சம்பளம் பெறும் ஃபைனான்ஸ் வேலையை விட்டுவிட்டு பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகளின் தரத்தை இந்தியர்கள் உணர்ந்துகொள்ளும் விதத்தில் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் ஹெல்த் இன்ஃப்ளூயன்சராக மாறியுள்ளார்.

யார் இந்த ரேவந்த் ஹிமத்சிங்கா?

கொல்கத்தாவைச் சேர்ந்த ரேவந்த் ஹிமத்சிங்கா புகழ்பெற்ற வார்டன் ஸ்கூல் ஆஃப் யூனிவர்சிட்டியில் எம்பிஏ பட்டம் பெற்றவர். மேலும், சுகாதார பயிற்சியாளருக்கான சான்றிதழும் பெற்றவர். உடல் ஆரோக்கியத்தில் உணவுப் பழக்கவழக்கங்களின் ஆழமான தாக்கத்தை உணர்ந்த பிறகு வால்ஸ்ட்ரீட் ஃபைனான்ஸில் நல்ல வேலையில் இருந்த இவரின் வாழ்க்கை சுகாதார பயிற்சியாளராக மிகப் பெரிய திருப்புமுனையை கண்டது.

அதற்கு முன்னர் 2016ல் வெளியிடப்பட்ட ‘செல்ஃபினோமிக்ஸ்’ என்ற அவரது புத்தகம் உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து மீதான அவரது ஆர்வத்தின் ஆரம்ப குறியீடாக அமைந்தது. குறிப்பாக, இதில் இடம்பெற்றுள்ள உணவு லேபிள்களைப் படிப்பதன் முக்கியத்துவம் பற்றிய ஓர் அத்தியாயம் அதற்கான சான்றாக அமைந்தது.

புகழும் தாக்கமும்

ஃபுட் பார்மராக ரேவந்தின் பயணம், குழந்தைகளுக்காக விற்பனை செய்யப்படும் ஆரோக்கிய பானங்களில் அதிக சர்க்கரை இருப்பதை வெளிப்படுத்திய ஒரு வைரல் வீடியோவுடன் தொடங்கியது. இது அவருக்கான பரவலான ஊடக கவனத்தை பெற்றுக்கொடுத்த அதேவேளையில் சம்பந்தப்பட்ட நிறுவனம் அதன் உணவுகளில் சர்க்கரை அளவை குறைக்கவும் வழிவகை செய்தது. இதோடு ரேவந்தின் முயற்சிகள் நிற்கவில்லை.

சிப்ஸ் உணவுகளில் பாமாயில் அதிகமாக பயன்படுத்துவதையும், பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகளின் தவறான சுகாதாரக் கூற்றுகளையும் வெளிச்சத்துக்கு கொண்டுவந்தார்.

ரேவந்தின் அணுகுமுறை என்பது தரவுகளை சேகரித்து அதனை கட்டமைப்பதில் உள்ளது. இந்த அணுகுமுறையை அவருக்கு கற்றுக்கொடுத்தது புகழ்பெற்ற மெக்கன்சி அண்ட் கம்பெனியில் அவர் வேலைபார்த்தபோது கிடைத்த அனுபவமே. இந்த அணுகுமுறையுடன் காமெடியாக தகவல்களை வீடியோவாக கொடுக்கிறார். இந்த பாணி பார்வையாளர்களுக்கு ஊட்டச்சத்து குறித்த தகவல்களை எளிதில் புரியவைக்கிறது.

லேபிள் பதேகா இந்தியா

‘லேபிள் பதேகா இந்தியா’ என்பது வெளிப்படைத் தன்மைக்காக கொண்டுவரப்பட்ட இயக்கம். விரிவாக சொல்வதென்றால் பாக்கெட் உணவுகளின் லேபிள்களை படிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை பொதுமக்களுக்கு கற்பிப்பதை நோக்கமாக கொண்டு ‘லேபிள் பதேகா இந்தியா’ இயக்கம் ரேவந்தின் முயற்சியால் ஆரம்பிக்கப்பட்டது.

பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆரோக்கியமானவை என நுகர்வோர்களை நம்ப வைப்பதற்கு தற்போது இருக்கும் சந்தை நடைமுறைகளின் ஏமாற்று வேலைகளையும் இந்த இயக்கம் மக்கள் முன் நிறுத்துகிறது. ஒற்றை ஆளாக இல்லாமல், மற்ற இன்ப்ஃளூயன்சர்கள் மற்றும் செலிபிரிட்டிகள் மூலம் தனக்கு தெரிந்த தகவல்களை மக்களுக்கு கொண்டுசென்று ஆரோக்கிய உணர்வுள்ள சமூகத்தை உருவாக்க முனைந்து வருகிறார் ரேவந்த்.

சட்டப் போராட்டம்

ஒற்றை ஆள் பல பெரிய நிறுவனங்களின் பொருட்களை பற்றி புகார் கூறினால் என்னவாகும்?

நீங்கள் நினைப்பதுதான் ரேவந்துக்கும் நடந்தது. பல நிறுவனங்கள் ரேவந்துக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பின. அவருக்குக் கிடைத்த நோட்டீஸ் அனைத்தும் பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் அனுப்பியவை. இப்படி சட்டரீதியான சவால்களை எதிர்கொண்ட போதிலும், ரேவந்த் தயங்காமல் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை தொடர்ந்து வருகிறார்.

மக்களிடம் உடல்நலம் குறித்து கல்வியறிவை மேம்படுத்துவதற்கும் தவறான விளம்பரங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் ரேவந்த் எடுத்த முயற்சியின் பலனாக இன்ஸ்டாகிராமில் 2 மில்லியனுக்கும் அதிகமாகவும், யூடியூப்பில் 1 லட்சத்துக்கு அதிகமாகவும் அவரை ஃபாலோ செய்கிறார்கள்.

அடிப்படையில் ரேவந்த், சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர் என்றாலும், அவர் ஏற்படுத்திய தாக்கம் என்பது சோஷியல் மீடியாவை தாண்டி உள்ளது. குறிப்பாக, அவரின் முயற்சிகள் தவறான சுகாதார பானங்களை பட்டியலிட இந்திய அரசாங்கம் இ-காமர்ஸ் தளங்களை இயக்க வைத்ததில் முக்கியப் பங்கு வகித்தது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) போன்ற அரசு நிறுவனங்களும் ரேவந்த் முயற்சிகளை ஆதரித்து, பேக்கேஜ் உணவு லேபிளிங்கில் வெளிப்படைத் தன்மையின் முக்கியத்துவத்தை வலுப்படுத்த முன்வந்துள்ளன.

ஃபுட் பார்மராக ரேவந்த் ஹிமத்சிங்காவின் பணியானது இன்ஃப்ளூயன்சரை என்பதை தாண்டி இந்திய உணவுத் துறையில் ஆரோக்கியம் மற்றும் வெளிப்படைத் தன்மை கொண்டுவருவதற்கான ஓர் அறப்போர்.

சீரியஸான அட்வைஸ்களை மக்களுக்கு புரியும் நையாண்டியுடன் சொல்லும் ரேவந்தின் திறமையானது அவரின் கன்டென்டை கல்வி சார்ந்தது என்பதை தாண்டி எங்கேஜிங்காகவும் மாற்றுகிறது.

ஆரோக்கியம் பிரதானமாக இருக்கும் இக்காலகட்டத்தில், தவறான தகவல்களும் பரவி கிடக்கின்றன. இப்படியான தருணத்தில் ஃபுட் பார்மரிடம் இருந்து எழும் வலுவான குரலானது உண்மை மற்றும் மாற்றத்தின் கலங்கரை விளக்கமாக நிற்கிறது என்றால் மறுப்பதற்கில்லை.

நீங்கள் பெற்றோராக இருந்தாலும் சரி, ஆரோக்கிய விரும்பியாக இருந்தாலும் சரி, அல்லது ஃபுட்டீஸ் ஆக இருந்தாலும் சரி, ரேவந்த் போல இன்ஃப்ளூயன்சர்களின் கன்டென்ட்களில் உங்கள் கவனத்தை திருப்புவது ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நோக்கிய உங்கள் முதல் படியாக அமையும்.

மூலம்: Nucleus_AI

Share:

administrator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *