108 நாடுகள் கலந்து கொண்ட துபாய் கண்காட்சியில் கவனம் ஈர்த்த சென்னை பெண் ஓவியர் – முதல்வர் வாழ்த்து!
யுனெஸ்கோவின் ஒருங்கிணைப்புடன் ஜீ ஆர்ட்ஸ் அமைப்பு இணைந்து நடத்திய பெண்களுக்கான ஓவியக் கண்காட்சி சமீபத்தில் துபாயில் நடைபெற்றது. இதில், இந்தியா சார்பில் கலந்து கொண்ட ஒரே ஒவியர் அப்சனா ஷர்மீன் இஷாக் தான்.
சென்னையைச் சேர்ந்த பொறியாளரான இவர், Inclusive inspiration என்ற தலைப்பில் அடக்குமுறை, அத்துமீறல்களுக்கு உள்ளான பெண்களையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக ஓவியங்களை வரைந்து காட்சிப்படுத்தினார்.
அவரது ஓவியங்களுக்கு பாராட்டுகளோடு, பரிசும் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சென்னை திரும்பிய அவர், தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது அவர் தன்னுடைய புத்தகத்தில் தமிழக முதல்வரின் வாழ்த்துகளோடு, கையொப்பத்தையும் பெற்றுக் கொண்டார்.
பின்னர், சன் டிவிக்கு அளித்த பேட்டியில் அவர்,
“யாரையும் புறக்கணிக்கக்கூடாது என்ற கருத்தில் இந்த ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. ஒவ்வொருவருடைய உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் விதமாக கண்காட்சியில் இடம்பெற்றிருந்த ஓவியங்கள் அமைந்திருந்தன, என்றார்.
அந்த 9 கண்கள்
என்னுடைய ஓவியங்கள் வித்தியாசமாக இருக்கும், அடக்குமுறை மற்றும் பாலியல் அத்துமீறல் ஆகியவற்றில் பாதிக்கப்படும் பெண்களை பெரும்பாலும் மக்கள் ஒதுக்கி விடுகின்றனர். அப்படி அவர்களை ஒதுக்கக்கூடாது என்பதுதான் எனது ஓவியங்களின் கான்செப்ட். பாதிக்கப்பட்டவர்கள் வெளியில் சிரித்தாலும் உள்ளுக்குள் ஒரு சோகம் இழையோடிக் கொண்டிருக்கும். அதனைத்தான் ஒன்பது விதமான கண்களாக என் ஓவியங்களில் நான் வெளிப்படுத்தி இருந்தேன்.
பிகைண்ட் குளோஸ்டு டோர்ஸ் (BEhind closed doors) என்ற கான்செப்ட்டில் இந்த ஓவியங்களை நான் வகைப்படுத்தி இருந்தேன்.
“அடக்குமுறை மற்றும் பாலியல் அத்துமீறல் ஆகியவற்றில் பாதிக்கப்படும் பெண்கள் பொது வெளியில் சிரித்தாலும் அவர்கள் உள்ளுக்குள் அழுவதை காட்சிப்படுத்தும் விதமாக 9 உணர்வுகளை வெளிப்படுத்தும் பெண்களின் கண்களை வரைந்திருந்தேன். சில கண்கள் அழுவது மாதிரியும், சில கண்கள் சிரிப்பது மாதிரியும் அந்த ஓவியங்களை நான் உருவாக்கி இருந்தேன். இதற்கு கண்காட்சியில் பெரும் வரவேற்பு கிடைத்திருந்தது. எனது ஓவியங்களைப் பார்த்த பலர், அவர்களது சொந்தக் கதையை என்னிடம் பகிர்ந்து கொண்டார்கள். அது உணர்ச்சிகரமாக இருந்தது,” என்றார்.
முதல்வர் வாழ்த்து
மேலும், முதலமைச்சரை சந்தித்தது குறித்துக் கூறுகையில்,
“முதலமைச்சரை நேரில் சந்தித்ததை என்னால் நம்பவே முடியவில்லை. நன்றாக வரைகிறேன் என்றும், மேலும் சிறப்பாக பணியாற்றவும் முதலமைச்சர் என்னை வாழ்த்தினார்.
“நான் கையில் கொண்டு சென்றிருந்த என் புத்தகத்தில் அவர் கையெழுத்திட்டுக் கொடுத்தார். அதனை என் வாழ்நாள் பொக்கிஷமாக பாதுகாப்பேன். இதை என்னுடைய வாழ்நாள் பெருமையாக கருதுகிறேன்” என மகிழ்ச்சியுடன் அப்சனா தெரிவித்துள்ளார்.
இதுநாள் வரை சென்னையின் வளர்ச்சியை தனது ஓவியங்களின் கருவாகக் கொண்டு விதவிதமான ஓவியங்களை வரைந்துள்ளார் அப்சனா என்பது குறிப்பிடத்தக்கது. துபாய் கண்காட்சியில் தனது ஓவியங்கள் மூலம் பெரிதும் பேசப்பட்ட அப்சனாவிற்கு சமூகவலைதளங்கள் வாயிலாகவும், நேரிலும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.