8000 ரூபாய் கடனில் தொடங்கி ரூ.6,000 கோடி சாம்ராஜ்ஜியம் அமைத்த வாழ்நாள் சாதனையாளர் கே.பி.ராமசாமியின் ஊக்கம் தரும் கதை!
கேபிஆர் குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் கே.பி.ராமராமி அவர்களுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கி பெருமையை அடைந்திருக்கிறது யுவர்ஸ்டோரி நடத்திய தமிழ்நாடு ஸ்டோரி 2024.
சில விருதுகள் வாங்குபவர்களை பெருமைபடுத்தும், சில விருதுகள் கொடுப்பவர்களை பெருமைபடுத்தும். வாழ்நாள் சாதனையாளர் விருதை கே.பி.ராமசாமிக்கு கொடுத்து பெருமையை அடைந்திருக்கிறது யுவர் ஸ்டோரி.
சென்னையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பங்கேற்று விருதை பெற்றுக் கொண்ட கே.பி.ராமசாமி, இளம் தொழில்முனைவர்கள் மத்தியில் தான் தொழிலில் ஜெயித்து காட்டியது எப்படி என்று பேசினார்.
“நான் வறுமை மட்டுமே இருந்த குடும்பத்தில் பிறந்தவன். எங்கள் வீட்டில் இருந்து பஸ்சில் சென்று படித்து வர காலனா காசு இல்லாமல் 11 கிலோ மீட்டர் நடந்தே சென்று படித்தேன். PUC மட்டுமே படித்தேன், அதற்கு மேல் படிக்க வசதி இல்லை. கையில் காசு கிடையாது என்னுடைய உறவினரிடம் 8000 ரூபாய் கடன் வாங்கி மில் தொழிலை தொடங்கினேன். இன்று மில், கல்வி நிறுவனம் என கேபிஆர் குழுமம் பல தொழில்களில் வளர்ந்து ரூ.6,000 கோடி பிசினஸாக வளர்ந்து இருக்கிறது,“ என்றார்.
தோல்விகளைக் கண்டு துவளாமல் வந்தால் வெற்றியை அடைய முடியும். பல சிரமங்களுக்கு மத்தியில் நான் ஒரு மில்லைத் தொடங்கினேன். அப்போது பெண்களே அதிகம் வேலைக்கு வந்தார்கள். ஒரு இளம் பெண் படிக்க வேண்டும் உதவி செய்ய முடியுமா என்று கேட்டிருந்தார். மில் வேலை செய்து கொண்டே பெண்களை படிக்க வைக்க முடியுமா என்று சிந்தித்து தொலைதூரக் கல்வியில் படிக்க வைத்தோம். 35 ஆயிரம் பெண்களை இதுவரையில் படிக்க வைத்து அவர்களின் வாழ்க்கை நிலையை உயர்த்தி இருக்கிறேன் என்று சொல்வதில் மகிழ்ச்சியடைகிறேன்,” என்று சுருக்கமாக தன்னுடைய பேச்சை முடித்துக் கொண்டார்.
ஏழை விவசாயி மகன்
எளிமையே உருவான கேபிராமசாமி forbes-இன் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழர். கையில் சொந்தமாக காசு இல்லை, பொருளாதார ரீதியில் ஆதரவு கொடுக்கக் கூடிய நிலையில் அவருடைய குடும்பம் இல்லை. எனினும், அவர் சாதித்து இன்றைய தலைமுறைக்கான வாழும் உதாரணமாக இருக்கிறார்.
ஈரோடு மாவட்டம் கலியம்புதூர் கிராமத்தில் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் கேபிராமசாமி. அவருடைய ஊரில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் இருந்த பெருந்துறைக்கு அப்போதைய கட்டணமான காலனா கொடுத்து பயணிக்க முடியாமல் நடந்தே சென்று பள்ளிப் படிப்பை முடித்தவர். உயர்கல்வியை தொடரும் நிலையில் குடும்பப் பொருளாதாரம் இல்லாததால் PUC வரை மட்டுமே படித்தவர், இரண்டு ஆண்டுகள் விவசாயம் செய்து வந்தார்.
அதன் பின்னர், அவருடைய ஆர்வம் ஆடை உற்பத்தி பக்கம் திரும்ப உறவினர் ஒருவரிடம் இருந்து ரூ.8000 கடன் வாங்கி, ஒரு ஆடை தயாரிப்பு மில்லை நடத்தத் தொடங்கினார். 1996ல் 6 ஆயிரம் spindle-களோடு தொடங்கிய ஆடை உற்பத்தித் தொழில் இன்று 3லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட Spindles ஓடு மிக வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. மில் தொழில் லாபமில்லாத காலத்தில் கேபிஆர் மில் தொடங்கப்பட்டாலும் முழு மனதோடு கடினமாக உழைத்ததால் ஒரே ஆண்டில் வெற்றியை பார்த்தது.
புதுமைகள் வேண்டும்
இலங்கை, வங்கதேசம், சிங்கப்பூர் உள்ளிட்ட அயல்நாடுகளுக்கு துணிகளை ஏற்றுமதி செய்யும் தொழிலை முதலில் செய்தவர், 1989ல் ஆடைகள் ஏற்றுமதியைத் தொடங்கி இருக்கிறார். காட்டனில் தொடங்கி கார்ட்டூன் வரை அனைத்திலும் தனிக்கவனம் செலுத்த வேண்டும். அயல்நாடுகளுக்கு மட்டுமே ஆடைகள் ஏற்றுமதி செய்துகொண்டிருந்த நிறுவனம். இந்தியர்களை குறிவைத்து FASO என்கிற பிராண்ட் பெயரில் தொடங்கப்பட்ட உள்ளாடை விற்பனையும் கேபிஆர்க்கு வெற்றியை தந்திருக்கிறது. ஆடை தயாரிப்பைத் தொடர்ந்து 2013ல் சர்க்கரை ஆலையையும் தொடங்கி அதிலும் வெற்றி கண்டிருக்கிறார்.
ஒரு தொழில் வெற்றியடைந்துவிட்டது என்று அதோடு நின்றுவிடாமல் அந்த வெற்றியை தக்கவைத்துக்கொள்ள அடுத்தடுத்து என்னென்ன புதுமைகளை கொண்டு வரலாம் என்பதை திட்டமிட்டு, அந்தச் சவாலை தைரியமாக எதிர்கொண்டதாலேயே இன்று பல கோடி சாம்ராஜ்யத்திற்கு சொந்தக்காரராக இருக்கிறார் இந்த விவசாயியின் மகன்.
மில் தொழிலில் பெண்களே அதிகம் ஈடுபட்டனர், சுமார் 24 ஆயிரம் பெண்கள் கேபிஆர் மில்ஸில் வேலை செய்கின்றனர். படிக்க முடியாத குடும்பப் பின்னணியில் இருந்து வரும் பெண்களுக்கு 8 மணி நேரம் வேலை 2 மணி நேரம் கல்வி என்று பெண்களுக்கு படிக்கும் வாய்ப்பையும் ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார் ராமசாமி. விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளுக்காக நூலகம், படித்து உயர்நிலைக்கு வரும் பெண்களுக்கு அவர்களின் தகுதிக்கு ஏற்ப வேலை என்று பெண்கள் முன்னேற்றத்தில் முக்கியப் பங்காற்றி வருகிறார்.
கேபிஆர் வளர்ச்சி ஒரே நாளில் வந்ததல்ல 40 ஆண்டு கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி இது. சரியான நேரத்தில் சரியான முடிவு எடுத்தாலும் தொழிலில் மிகவும் முக்கியம் என்பதே ராமசாமியின் வெற்றிக்கான தாரக மந்திரம். நிச்சயம் இந்தத் தொழிலில் வெற்றியடைய முடியும் என்று நம்பிய ராமசாமியின் கேபிஆர் மில்ஸ்-ன் பங்குகள் இன்று ஷேர்மார்க்கெட்டில் அசூர வளர்ச்சியடைந்துள்ளது. தான் வாழ்வதோடு மட்டுமல்ல மற்றவர்களையும் வாழவைத்து அழகு பார்க்கிறார் ராமசாமி.