8-வது ஃபெயில்; இன்று நிகர மதிப்பு $1 பில்லியன் – வங்கித்துறையில் சஞ்சய் அகர்வால் சாதித்தது எப்படி?
பள்ளிப் படிப்பில் கடும் போராட்டத்தை சந்தித்த ஒரு ராஜஸ்தான் சிறுவன் இன்று ரூ.43,000 கோடி மதிப்பு கொண்ட ஏயு வங்கி (AU Bank) தலைமை நிர்வாக அதிகாரி என்றால் நம்ப முடிகிறதா? ஆம், கற்பனையை நிஜமாக்கி இருக்கிறார் சஞ்சய் அகர்வால்.
இது வெறும் கதையல்ல. இது விடாமுயற்சிக்கான ஒரு பாடம். இதன் ஒவ்வொரு அத்தியாயமும் கடின உழைப்பாலும், உடைக்க முடியாத உறுதியாலும் எழுதப்பட்டுள்ளது.
ஒரு காலத்தில் பள்ளி வகுப்பறைகளில் தடுமாறியது முதல் தற்போது அவர் வழிநடத்தும் வங்கி அலுவல்கள் வரை, சஞ்சய்யின் பயணம் ‘எந்தப் பின்னடைவும் கடக்க முடியாத அளவுக்குப் பெரியது அல்ல’ என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
சஞ்சய் அகர்வால் ‘பள்ளிப் போராட்டம்’
சஞ்சய் அகர்வால் ராஜஸ்தானில் பிறந்தவர். அங்கு அவரது தந்தை ராஜஸ்தான் மாநில மின்சார வாரியத்தில் பொறியாளராகப் பணியாற்றினார். அவரது குடும்பத்தினர் அவருக்கு ஆதரவளித்தாலும், படிப்பு ஒருபோதும் அவருக்கு எளிதாக இருக்கவில்லை.
பள்ளி வாழ்க்கை சஞ்சய்க்கு ஒரு போர்க்களமாக இருந்தது. 8-ஆம் வகுப்பில் தோல்வியடைந்தபோது, அது அவருக்கு பெரும் இக்கட்டான சூழலாக மாறியது. அது பலருக்கு, முடிவாக இருந்திருக்கும். ஆனால், சஞ்சய்க்கு அப்படி இல்லை. பின்வாங்காமல், தனது மதிப்பெண்களை மேம்படுத்துவதற்காக அகர்வால் துணிச்சலுடன் ஆங்கிலத்தில் இருந்து இந்தி வழிக் கல்விக்கு மாற முடிவு செய்தார்.
பல்வேறு சவால்கள் இருந்தபோதிலும், அவர் முன்னேறுவதை ஒருபோதும் நிறுத்தவில்லை. அவர் அஜ்மீரில் உள்ள ஓர் அரசு கல்லூரியில் தனது உயர் கல்வியை முடித்தார். மேலும், ஒரு பட்டய கணக்காளராக வேண்டும் என்ற கனவை கொண்டிருந்தார்.
ஆனாலும், சிஏ தேர்வில் இரண்டு முறை தோல்வியடைந்தது, அவரை மனவேதனைக்கு உள்ளாக்கியது. வாழ்க்கை அவருக்கு மேலும் சவால்களைத் தந்தது. எனினும், சஞ்சய் இந்த பின்னடைவுகளை படிக்கற்களாகப் பயன்படுத்தினார்.
தொழில் முனைவுப் பயணம்
25 வயதில், ஒரு துணிச்சலான முடிவை எடுத்தார் சஞ்சய் அகர்வால். மும்பையில் வேலை செய்வதற்குப் பதிலாக, அவர் தனது சொந்த ஊரான ஜெய்ப்பூருக்குத் திரும்பிச் சென்று சொந்தமாகத் தொழில் தொடங்க முடிவு செய்தார். 1996-ம் ஆண்டில், மூலதனம் எதுவும் இல்லாமல், ஏயு பைனான்சியர்ஸ் (இந்தியா) லிமிடெட் என்ற ஒரு சிறிய நிதி நிறுவனத்தை தொடங்கினார்.
சிறிய வாகனங்களுக்கு கடன்களை வழங்கத் தொடங்கினார். இருப்பினும், புதிதாக ஒரு தொழிலை உருவாக்குவது அவ்வளவு எளிதானதல்ல இல்லையா? சஞ்சய்க்கு பெரிய நிதி ஆதரவு எதுவும் இல்லை. உள்ளூர் தொழிலதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெற அவர் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. இருப்பினும், அவரது உறுதியும் தொலைநோக்குப் பார்வையும் கொஞ்சம் கொஞமாக பலனளிக்க தொடங்கின.
தனது தொழிலை படிப்படியாக வளர்ப்பதில் கவனம் செலுத்திய அவர், வாடிக்கையாளர் சேவையில் தொடர்ந்து கவனம் செலுத்தினார். அவரது நிறுவனம் வளரும்போது, கூடவே அவரது கனவுகளும் வளர்ந்தன. அவரது விடாமுயற்சி மனப்பான்மை அவரை ஹெச்டிஎஃப்சி வங்கியுடன் இணையவும், பெரும் தொழிலதிபரான மோதிலால் ஓஸ்வாலிடமிருந்து நிதியுதவி பெறவும் வழிவகுத்தது.
சஞ்சய் அகர்வாலின் பெரும் பாய்ச்சல்
சஞ்சய் அகர்வாலின் பயணத்தில் அடுத்த பெரிய பாய்ச்சல் 2015-ஆம் ஆண்டு ஏயு பைனான்சியர்ஸ் நிறுவனத்துக்கு ரிசர்வ் வங்கியிடமிருந்து வங்கி உரிமம் கிடைத்ததன் மூலம் நிகழ்ந்தது. இது அவருக்கு ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
2017-ஆம் ஆண்டுக்குள் ஒரு சிறு நிதி நிறுவனத்தை முழு அளவிலான வங்கியாக இது மாற்றியது.
இன்று, ஏயு ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியின் (AU Small finance bank) மதிப்பு ரூ.43,000 கோடிக்கு மேல். இது இந்தியாவின் மதிப்புமிக்க வங்கிகளில் ஒன்றாக மாறியுள்ளது. வங்கியின் 2017 ஐபிஓ ரூ.1,912.51 கோடிகளை திரட்டியது. இது முதலீட்டாளர்கள் அந்த வங்கியின் எதிர்காலத்தில் வைத்திருந்த நம்பிக்கையைக் காட்டுகிறது.
ஃபோர்ப்ஸ் அறிக்கையின்படி, சஞ்சய் அகர்வாலின் தற்போதைய நிகர மதிப்பு சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். அவரது தலைமையின் கீழ், ஏயு ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி இந்தியா முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட கிளைகளுடன் வளர்ந்துள்ளது. 30 லட்சத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குகிறது.
தொலைநோக்குப் பார்வையும் புதுமையும் எவ்வாறு வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதற்கு சஞ்சயின் கதை ஓர் எடுத்துக்காட்டு.
சவால்களை எதிர்கொள்வதிலிருந்து ஒரு கோடீஸ்வர தொழிலதிபராக மாறுவது வரை, சஞ்சயின் பயணம் நமது கடந்த காலம் நமது எதிர்காலத்தை தீர்மானிக்காது என்பதைக் காட்டுகிறது.