Contact Information

JKrish Pvt Ltd, AIC Raise, Rathinam Techzone, Eachanari, Coimbatore. Tamilnadu - 641 021.

We Are Available 24/ 7. Call Now.

85 வயதிலும் கலக்கும் குவிஸ் மாஸ்டர் – எண்ணற்ற போட்டிகள்; கோப்பைகள் வென்ற சரண்யா ஜெயகுமார்!

தீரா ஆர்வத்துடன் கூடிய ஒரு தீவிர வாசகராக, 85 வயதான சரண்யா ஜெயக்குமார் அவரது வாழ்க்கை முழுவதும் கேள்விகளைத் துரத்துவதிலும், பதில்களைக் கண்டுபிடிப்பதிலும், கற்றல் ஒருபோதும் நிற்காது என்பதை நிரூபிப்பதிலும் கழித்துள்ளார். ஆம், 1950-களில் கல்வித்துறையிலிருந்த தடைகளை பெண்கள் உடைத்தெறிந்த நேரத்தில், சரண்யா ஒரு படி மேல் சென்று குவிஸ் உலகில் ராணியாக வலம் வந்தவர்.

இந்திய குவிஸ் வரலாற்றில் அழியாத முத்திரை பதித்துள்ள அவருக்கு கடந்த மார்ச் 16 ஆம் தேதி, இந்திய வினாடி வினா அறக்கட்டளை (QFI), ‘வாழ்நாள் சாதனையாளர் விருதை’ வழங்கியது. இந்த அங்கீகாரம் குவிஸ் உலகில் அவரது குறிப்பிடத்தக்க பயணம், அசைக்க முடியாத ஆர்வம் மற்றும் குவிஸ் சமூகத்திற்கு அவர் ஆற்றிய ஈடு இணையற்ற பங்களிப்புகளுக்கு ஒரு சான்றாகும்.

இந்தியாவின் புகழ்பெற்ற குவிஸ் மாஸ்டரான சரண்யா ஜெயக்குமார், மெட்ராஸ் பிரசிடென்சி கல்லுாரியில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். பின், குயின்மேரி கல்லுாரியில் படிப்பைத் தொடர்ந்தார். அக்காலத்தில் ​கல்லூரிகளுக்கு இடையேயான குவிஸ் போட்டி ஆரம்ப நிலையிலே இருந்தன. சென்னையில் மெட்ராஸ் மாணவர் சங்க குவிஸ் போட்டி மற்றும் அதே பெயரில் பச்சையப்பா கல்லூரி பேராசிரியர் நடத்திய மதிப்புமிக்க ஜான்சன் கோப்பை ஆகிய இரண்டு முக்கியப் போட்டிகள் மட்டுமே நடத்தப்பட்டன. அந்த நேரத்தில் சில பெண்கள் மட்டுமே வினாடி வினாவில் கலந்து கொண்டனர்.

“அப்போதெல்லாம் பெண்கள் க்விஸ் போட்டியில் பலர் பங்கேற்கவில்லை என்றாலும், நாங்கள் அதை பாலினப் போராக ஒருபோதும் பார்த்ததில்லை. நாங்கள் போட்டியிடுவதிலும் வெற்றி பெறுவதிலுமே கவனம் செலுத்தினோம்,” என்று ஹெர் ஸ்டோரியிடம் பகிர்ந்தார் பலமுறை ஜான்சன் கோப்பையை தட்டித்துாக்கி தனதாக்கியுள்ள சரண்யா.

“புத்தக வாசிப்பும், கற்றலும் – மகிழ்ச்சிக்கான ஆதாரங்கள்”

கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக குவிஸ் போட்டிகளில் பங்கேற்கும் சரண்யாவுக்கு குவிஸ் மீதான இவ்வளவு தீராத காதல் ஏற்பட காரணம் வாசிப்பு. ஆம், அவர் ஒரு புத்தகப் பிரியர். கல்லுாரி நாட்களில் அவரது பெருவாரியான நேரங்கள் நுாலகத்திலே கழிந்தன.

“நான் ஸ்டூடென்டாக இருந்தபோது, ​​யாரும் எனக்கு ‘குவிஸ்’ என்ற வார்த்தையைக் கூட சொல்லவில்லை. எப்போதும் நூலகத்திலே இருப்பேன். என் ஆங்கிலப் பேராசிரியர் சிட்டியில் நடக்கும் சில குவிஸ் போட்டிகளுக்கு எனது பெயரை பதிவு செய்ய சொன்னார். அவரின் உந்துதலிலே பதிவு செய்தேன். இந்தப் பயணம் அப்படித்தான் தொடங்கியது,” என்றார்.

ஆரம்ப காலங்களில் கொல்கத்தாவில் உள்ள ஆக்ஸ்போர்டு புத்தகக் கடை நூலகத்திற்கு சென்றது முதல் இன்றைய வாசிப்புப் பழக்கம் வரை, புத்தகங்கள் அவரது மகிழ்ச்சியின் நிலையான ஆதாரமாக இருந்து வருகின்றன.

“நான் ஒருபோதும் படிப்பதை நிறுத்தவில்லை. தொடக்கத்தில் புனைகதை மற்றும் த்ரில்லர் நாவல்கள் என்றே வாசிப்பு பழக்கம் தொடங்கியது. குவிஸ் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கியவுடன், வரலாறு, புராணம் மற்றும் கலையை அதிகமாகப் படிக்கத் தொடங்கினேன்,” என்றார்.

கல்லுாரி நாட்களில் தொடர்ச்சியாக குவிஸ் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை குவித்த நிலையில், அவருக்கு மணம் முடிக்கப்பட்டது. திருமணத்திற்குப் பிறகு, அவர் கொல்கத்தாவுக்கு குடிபெயர்ந்தார். அங்கு குடும்பத்தை நிர்வகிப்பதிலும், 4 குழந்தைகளை வளர்த்தெடுப்பதிலும் நேரமும், காலமும் ஓட, குவிஸ் என்பது அவருக்கு கடந்த காலத்தின் ஒரு விஷயமாக மாறியது. அதனால், சில காலம் குவிஸ் மீதான அவரது ஆர்வம் மறைந்திருந்தது. ஆனால், மறையவில்லை.

1978ம் ஆண்டு வாக்கில் அவரது கணவரின் சகோதரியின் மகன் ஒரு நியூஸ்பேப்பர் விளம்பரத்துடன் சரண்யாவை சந்தித்துள்ளார். அதில், நார்த் ஸ்டார் குவிஸ் போட்டிக்கான அறிவிப்பு இருந்தது. இது அவரை குவிஸ் உலகில் இரண்டாம் இன்னிங்ஸூக்கு இட்டுச் சென்றது.

மோட்லி க்ரூ‘ என்ற புதிய அணியை உருவாக்கி போட்டிகளைச் சந்தித்தார். நாளடைவில், கடுமையானப் போட்டி நிறைந்த கொல்கத்தாவின் குவிஸ் வட்டாரத்தில் இவ்வணி டஃபஸ்ட் போட்டியாளராக மாறியது. புகழ்பெற்ற குவிஸ் மாஸ்டரான நீல் ஓ’பிரையனின் வழிகாட்டுதலில், மோட்லி க்ரூ விரைவாக தரவரிசையில் உயர்ந்தது.

1986ம் ஆண்டில் அவர் சென்னைக்கு திரும்பியபின், குவிஸைத் தொடருவதில் உறுதியாக இருந்தார். அவர் ‘மெமரி பேங்க்‘ என்ற மற்றொரு அணியையும் உருவாக்கினார். இந்த முறை அவ்வணியில் அவரது மகன் மற்றும் மருத்துவக் கல்லூரியில் படித்த அவரது நண்பர்களும் இடம்பெற்றனர். பலத்த பயிற்சி மற்றும் கூட்டு முயற்சியால் 1990களின் முற்பகுதியில் இந்தியாவின் மிகப்பெரிய குவிஸ் போட்டியாக திகழ்ந்த `அகில இந்திய நார்த் ஸ்டார் டிராபி`யை வென்றனர். மதிப்புமிக்க அப்பட்டம் கொல்கத்தாவை விட்டு வெளியேறியது அதுவே முதல் முறையாகும்.

“இன்றைய வினாடி வினா என்பது கடந்த காலத்திலிருந்த நினைவாற்றல் மிகுந்த, அறிவு சார்ந்த போட்டிகளிலிருந்து வெகு தொலைவில் உள்ளது. அப்போது, ​​நீங்கள் விஷயங்களை நினைவில் வைத்திருக்க வேண்டியிருந்தது. இணையம் மற்றும் ஸ்மார்ட்போன்களின் எழுச்சி, மக்கள் அற்ப விஷயங்களை அணுகும் விதத்தை மாற்றியுள்ளது. தகவல்களை அணுகுவது முன்பை விட எளிதாகிவிட்டது. ஆனால், இந்த வகையான மாற்றம் தவிர்க்க முடியாதது. அனைத்து முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், குவிஸின் அடிப்படைகள் காலத்தால் அழியாதவை. புவியியல், வரலாறு மற்றும் கிளாசிக் இலக்கியம் போன்ற சில விஷயங்கள் மாறாது,” என்று கூறினார்.

மேலும், ரூபா பப்ளிகேஷன்ஸிற்காக ‘உலக மதங்கள்’ பற்றிய ஒரு வினாடி வினாப் புத்தகத்தையும் எழுதியுள்ளார். ஆனால், அது வழக்கமான வினாடி வினாப் புத்தகங்களைப் போலல்லாமல், அவருடையது பல தேர்வு கேள்விகளுக்கு அப்பாற்பட்டது, ஒவ்வொரு பிரிவிலும் ஈர்க்கக்கூடிய கதைகளை சுவராஸ்யமாக எழுதியுள்ளார்.

80 வயதுடைய சரண்யா, சென்னையின் வினாடி வினா வட்டாரங்களில் ஒரு பிரியமான நபர். இத்தனை வருடங்களுக்குப் பிறகும், அவர் இன்னும் கேள்விகளைக் கேட்கிறார், இன்னும் பதில்களைத் தேடுகிறார், கற்றலுக்கு ஒருபோதும் வயதாகாது என்பதை இன்னும் நிரூபித்து வருகிறார்.

“நீங்கள் ஒருபோதும் கற்றுக்கொள்வதை நிறுத்த மாட்டீர்கள்…” என்று கூறி முடித்தார்.

Share:

administrator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *