‘ஒலிம்பிக் தங்க நாயகன்’ – பாக் கிராம மக்களின் நிதி உதவியுடன் ஒலிம்பிக்கை வென்ற தொழிலாளி மகன் அர்ஷத் நதீம்!
பாரீஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்டவர் நீரஜ் சோப்ரா. கடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ், இந்த முறையும் கோல் அடிப்பார் என இந்திய ரசிர்கள் காத்திருந்தனர்.
ஆனால், இந்திய ரசிகர்களின் தங்கப் பதக்கக் கனவை தனது ராட்சத த்ரோ மூலம் தகர்த்த பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம், 92.97 மீட்டர் தூரம் ஈட்டியை எரிந்து நேற்று ஒலிம்பிக் ரெக்கார்ட்டையும் பதிவு செய்தார். இத்தகைய மாபெரும் வெற்றியை தொட நதீம் போட்டிகளுக்குள் வந்த கதை சுவாரஸ்யமானது.
யார் இந்த அர்ஷர் நதீம்?
அர்ஷத் நதீம் 1997 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி மியான் சன்னு என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார். இந்த ஊர் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் பகுதியில் உள்ளது. இது லாகூரில் இருந்து சுமார் 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
அர்ஷத்தின் தந்தை ஒரு கட்டுமானத் தொழிலாளியாக குடும்பத்தை தனி ஆளாக நடத்தி வந்தார். அதனால் அவர்கள் பொருளாதார ரீதியாக பின் தங்கி இருந்தனர். தனது விதியை மாற்றுவதற்கு அர்ஷத் எதிர்கொண்ட சவால்களிலிருந்தே உத்வேகத்தையும் ஊக்கத்தையும் பெற்றார். இந்த நிலைக்கு வருவதற்கு தான் கடினமான காலங்களைக் கடந்து வர வேண்டியிருந்தது என்று பலமுறை பேட்டிகளில் வெளிப்படுத்தி இருக்கிறார் இந்த வீரர்.
“நான் ஒரு விவசாயக் கிராமத்திலிருந்து வருகிறேன், மேலும் நான் ஒவ்வொரு முறை பதக்கம் வெல்லும்போதும், எனது பின்னணியை பற்றி நினைக்கிறேன், அது என்னை மேலும் சிறப்பாகச் செய்ய ஊக்குவிக்கிறது. அதனால்தான் நான் பணிவாக இருந்திருக்கிறேன், நான் மேலும் வெற்றியடைய விரும்புகிறேன். இந்த நிலைக்கு வருவதற்கு நான் மிகவும் கடினமான காலங்களைக் கடந்து வர வேண்டியிருந்தது,” என்று அர்ஷாத் நதீம் கூறி இருக்கிறார்.
பாகிஸ்தானும் இந்தியா போல் கிரிக்கெட் மோகம் கொண்ட நாடு. அர்ஷத்தும் இதற்கு விதிவிலக்கல்ல. பள்ளி நாட்களில் அவர் பல விளையாட்டுகளில் ஈடுபட்டார், கிரிக்கெட் வீரராக வேண்டும் என்ற ஆர்வமும் கொண்டிருந்தார். ஆனால், ஒருமுறை நடந்த தடகளப் போட்டியில் அவரது செயல்திறன் பயிற்சியாளர் ரஷீத் அகமது சாகியின் கவனத்தை ஈர்த்தார் நதீம். அவர் அர்ஷதை தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டு அவரது திறமையை வளர்த்தார். ஈட்டி எறிதலில் நதீமின் ஓட்டம் மற்றும் வீச்சு, பவுளிங் திறமையால் வந்ததாக உணர்ந்திருக்கிறார்.
தொடக்கத்தில் நதீம், ஜாவ்லின் த்ரோவை தன் கையில் எடுத்த போது அவருக்கு பெரிய நிதி ஆதாரங்கள் கிடையாது. அவர் தந்தையின் கூற்றுப்படி, மக்கள் திரட்டிக் கொடுத்த பணத்தில்தான் அர்ஷத் நதீம் பயிற்சியே செய்ய முடிந்துள்ளது. போட்டிக்காக பல ஊர்களுக்கு செல்லவும் அவரது கிராம மக்களே நிதியை திரட்டி உதவியுள்ளனர்.
அர்ஷத் நதீமின் தந்தை முகமது அஷ்ரப் கூறும்போது,
“அர்ஷத் இன்று இந்த உச்சத்தில் இருக்கிறார் என்றால் அது எப்படி என்பது பலரும் அறியாதது. சக கிராமத்தினரும் உறவினர்களும் திரட்டிக் கொடுத்த நன்கொடைகள் மூலம்தான் அர்ஷத்பல நகரங்களுக்குச் சென்று பயிற்சியில் ஈடுபட முடிந்தது,” என்றார்.
27 வயதான நதீமின் உடல் பலம் அளப்பரியது. அதுதான் அவரது 92.97 மீட்டர் தூர எறிதலுக்குப் பிரதான காரணம், அனைத்தையும் மீறி தன்னை வளர்த்தெடுத்த கிராம மக்களுக்காக வெல்ல வேண்டும் என்ற மன உறுதி கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கிறார்.
நீரஜ் சோப்ரா – அர்ஷத் நதீம்
நீரஜ் சோப்ராவுக்கு இருந்த அதரவு அமைப்புகள் அர்ஷத் நதீமுக்குக் கிடையாது. நீரஜ் சோப்ராவுக்கு ஒரு மேட்டுக்குடி அமைப்பே பின்னணியில் இருந்தது, ஆனால், பாகிஸ்தானின் நதீமுக்கு அவரது கிராம மக்கள்தான் பலம். சக கிராமத்தினர் திரட்டிய நிதியினால்தான் அர்ஷத் நதீம் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்று வர முடிந்தது.
அர்ஷத் நதீமின் தங்கப்பதக்கத்தை பாகிஸ்தானே எதிர்பார்த்தது என்பதை விட தன்னை அனுப்பிய கிராம மக்களுக்காக அவர் வென்று கொடுத்து அவர்கள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்துள்ளார் என்பதுதான் முக்கியம். நீரஜ் சோப்ராவை இதுவரை அவர் வீழ்த்தியதே இல்லை, ஆனால், நேற்று 92.97 மீ தூரம் எறிந்தது புதிய ஒலிம்பிக் சாதனையை படைத்தார்.
மேலும், நீரஜ் சோப்ராவின் டோக்கியோ தூரம் இந்த முறை 8 தடவை கடந்து செல்லப்பட்டது என்றால் இதன் தரநிலையைப்புரிந்து கொள்ளலாம், அதில் பாகிஸ்தானிலிருந்து வந்து ஒருவர் உலகை ஆட்கொண்டுள்ளார் என்பது மிகப்பெரிய விஷயம். 32 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு ஒரு ஒலிம்பிக் பதக்கத்தை வென்று தந்து பெருமை சேர்த்துள்ளார் அர்ஷத் நதீம்.
பாகிஸ்தானுக்கு தனிப்பட்ட தங்கம் என்பது 1960-ல் ரோம் நகரில் நடந்த ஒலிம்பிக்ஸில் மல்யுத்தத்தில் கிடைத்தது, பிறகு, சியோலில் 1988-ம் ஆண்டு குத்துச்சண்டை தங்கம் கிடைத்ததுதான். இப்போது நதீம் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் நதீம் ஒலிம்பிக்கிர்கு பயிற்சி செய்ய புதிய ஈட்டி வேண்டும் என்று நிதி உதவி கோரியிருந்தார், சமூக ஊடகம் மூலம் நீரஜ் சோப்ரா நதீமுக்கு உதவி புரிந்துள்ளார். இது எல்லைதாண்டிய நட்பின் இலக்கணம், பலருக்கும் பாடமாக, பாலமாக அமையும் நட்பின் அன்பின் இணைப்பு. நதீமுக்கு முழங்கால் அறுவை சிகிச்சை கடந்த ஆண்டு நடந்தது. இப்படி நிறைய கஷ்டங்களை பணக்கஷ்டத்துடன் நதீம் எதிர்கொண்டார்.
இன்று ஒலிம்பிக் தங்கப்பதக்கம் என்னும் உச்சம் தொட்டு, கிரிக்கெட்டை மதமாக வழிபடும் பாகிஸ்தான் ரசிகர்களை தன் பக்கம் இழுத்துள்ளார் அர்ஷத் நதீம்.