மூட்டு வலி பிரச்சனைக்கு சிகிச்சை தீர்வை வழங்கும் ரத்த பரிசோதனை – இளம் நிறுவனரின் மருத்துவ ஸ்டார்ட்-அப்!
பிசியோதெரபி எனப்படும் இயன்முறை சிகிச்சை பெற சென்றவர்கள் எவரும், முதல் சில நாட்கள் ஈர்ப்பிற்கு பிறகு, இந்த சிகிச்சை கடினமான ஒன்றாகிவிடுகிறது என்பதை சொல்வார்கள்.
அதிலும் குறிப்பாக நீங்கள் தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருக்கிறீர்கள் என்பதை உணரக்கூடிய வகையில் எந்த சோதனையிலும் எண்ணிக்கையை பார்க்காத போது நிச்சயம் இவ்வாறு உணர்வார்கள்.
தற்போதுள்ள இயன்முறை சிகிச்சை மையங்கள் மற்றும் மூட்டு மறுவாழ்வு மையங்கள், கொலஸ்ட்ரால் அல்லது வைட்டமின் குறைப்பாட்டை அளந்து அறிவதற்கான காரணிகள் இருப்பது போல் அல்லாமல், தொடு உணர்வை சார்ந்தே இயங்குகின்றன.
இந்தியா போல வேகமாக வயதானவர்கள் அதிகமாகி வரும் தேசத்தில், தசை மற்றும் மூட்டு காயங்களுக்கான சிகிச்சை பலனை அளவிடுவதற்கான முறை இல்லாதது மிகப்பெரிய சவாலாகிறது. அதிலும் குறிப்பாக osteoarthritis போன்ற மிதமான அளவிலே கூட நோயாளிகளை படுக்க வைத்துவிடும் பாதிப்புகளில் இது இன்னும் கண்கூடாக தெரிகிறது.
இந்திய விவசாயிகளின் சராசரி வயது 57-61 எனும் நிலையில், அவர்களே குடும்பத்திற்கான வருவாய் ஈட்டுபவர் எனும் நிலையில் osteoarthritis (OA) நோய் பாதிப்பு அவர்களை மட்டும் அல்ல சார்ந்துள்ள குடும்பத்தையும் முடங்க வைத்துவிடும்.
எனினும், பொறியாளரும், முன்னாள் போர்டு நிறுவன ஊழியருமான அன்மோல் சக்சேனா, இந்த நோய் பாதிப்பு மற்றும் அதற்கான அளவீடு காரணிகள் இல்லாதது குறித்து யோசிக்கத்துவங்கிய போது, அவர் இந்தியாவின் வயதானவர்கள் அல்லது விவசாயிகளை நினைக்கவில்லை.
அவரது அம்மா பல ஆண்டுகளாக மூட்டு வலியால் அவதிப்பட்ட நிலையில், இந்த நோயால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டு, முடிவில்லா இயன்முறை மருத்துவ சிகிச்சைக்கு உட்பட்டு எந்தவித பலனும் பெறமால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார்.
இதையடுத்து, அவர் பல இயன்முறை சிகிச்சை வல்லுனர்கள் மற்றும் மூட்டுவலி வல்லுனர்களை சந்தித்து பேசிய போது அவர்கள் ரூ.7 கோடிக்கும் அதிக மதிப்புள்ள இயந்திரங்கள் கொண்ட மருத்துவமனைக்கு பரிந்துரைத்தனர். இந்த மருத்துவமனைகள் தான் அவரது அம்மாவுக்கு விரிவான சிகிச்சை அளிக்கும் தன்மை கொண்டிருந்தாலும், எந்த மருத்துவமனையும் சோதனைக்குத் தேவையான அனைத்து இயந்திரங்களையும் கொண்டிருக்கவில்லை.
எல்லாவற்றுக்கும் மேல், பரிசோதனைகள் செலவு மிக்கதாகவும், இயன்முறை மருத்துவ சிகிச்சையின் முன்னேற்றத்தை கண்காணிக்க தொடர்ந்து மேற்கொள்ள வேண்டியதாகவும் இருந்தன.
தாயின் சிகிச்சை முன்னேற்றம் தொடர்பாக தரவுகளைத் தேடி அங்கும் இங்கும் அலைந்தது, இந்த பொறியாளரை இதற்குத் தகுந்த மாற்று வழி இருக்கிறதா என யோசிக்க வைத்தது.
தனது தாயின் நிலையை மேம்படுத்த விரும்பியவர், மூட்டு வலிக்கு தேவையான ஏழு இயந்திரங்களின் சோதனைகளை மேற்கொள்ளக்கூடிய அணியக்கூடிய ஒற்றை சாதனத்தை உருவாக்க தீர்மானித்து, பெங்களூருவை தலைமையகமாக கொண்ட ’அஷ்வா வியர் டெக்’ (Ashva Wear Tech) நிறுவனத்தை 2019 ல் துவக்கினார்.
இன்று மூட்டு வலிக்கான டாக்டரிடம் சென்றால், அவர் உடனே உங்களை படுத்துக்கொண்டு காலை வளைத்து, எழுந்து உட்கார்ந்து, முகவாயை அவரது கை மீது அழுத்தி, தசைகளின் ஆற்றலை பரிசோதிப்பது வழக்கம். இது மிகவும் அடிப்படை சோதனை.
“இந்த முறையிலான பரிசோதனையில் இரண்டு பிரச்சனைகள் என்னவெனில் இது டாக்டரின் அனுபவம் சார்ந்தது மற்றும் பரிசோதனை அல்லது சிகிச்சையின் முன்னேற்றத்தை எப்படி அளவிடுகிறீர்கள் என்பதை சார்ந்தது. இருதய ஆரோக்கியத்திற்கான இசிஜி சோதனை போல இதற்கு என தனியே ஒரு சோதனை இல்லை,” என்கிறார் அன்மோல்.
“இந்தியாவில் மூட்டு வலி பரிசோதனைக்கான முறையை வரையறுக்க முயன்றோம் என்று கூறுகிறார். அவரது நிறுவனம், Gofrugal Technologies, குமார் வேம்பு, லெட்ஸ் வென்சர், BIRAC-IKP Fund மற்றும் பிற முதலீட்டாளர்களிடம் இருந்து நிதி திரட்டியுள்ளது.
முழங்காலுக்கான இரத்த பரிசோதனை
‘அஷ்வா நிறுவனம் தற்போது இரண்டு சாதனங்களை கொண்டுள்ளது:
- பிட்னீஸ் (Fitknees): ஆஸ்டியோஆர்த்ரிடிஸ், விளையாட்டு காயம், மூட்டு வலி அறுவை சிகிச்சைக்கு பிந்தைய சிக்கல்கள் உள்ளிட்ட முழங்கால் வலிக்கான இயன்முறை சிகிச்சை பெறும் நோயாளிகளின் முன்னேற்றத்தை கண்காணிக்க உதவும் ஏஐ சென்சார் கொண்ட சாதனம்.
- பிட்மஸ்ட் (Fitmust): ஒருவரின் மேல் மற்றும் கீழ் தசைகளின் ஆற்றலை அளவிடும் கையடக்க சாதனம்.
இரண்டு சாதனங்களையும் பொருத்தமாக பயன்படுத்தினால், இயன்முறை சிகிச்சையின் முன்னேற்றத்தை அளவிட்டு, உடற்பயிற்சிகள் நோயாளிகளுக்கு உதவுகின்றனவா என்பதை அறியலாம்.
“இயன்முறை சிகிச்சை போன்றவை மூலம் தங்கள் பிரச்சனையை எதிர்கொள்வதா அல்லது மூட்டு மாற்று அறுவை சிகிச்சை போன்றவை தேவையா என்பதை நோயாளிகள் புரிந்து கொள்ள எங்கள் சாதனங்கள் உதவும்,” என்று அன்மோல் யுவர்ஸ்டோரியிடம் தெரிவித்தார்.
மூட்டு மாற்று அறுவை சிகிச்சை தேவையா என்பதை முடிவெடுக்க உதவும் முழங்காலுக்கான இரத்த பரிசோதனை போன்றது இது, என்கிறார் அவர். நிறுவனத்தின் இரண்டு சாதனங்கள் தற்போது, பெங்களூருவில் உள்ள 50 இயன்முறை மருத்துவ மையங்களில் பயன்படுத்தப்படுகின்றன. மூத்த குடிமகன்களுக்கான மையங்கள் மற்றும் சானியா நெய்வால், லியாண்டர் பயஸ் போன்ற விளையாட்டு நட்சத்திரங்களுக்கான மையங்களும் இதில் அடங்கும்.
நிறுவனம் இரண்டு ஆண்டுகள் ஆய்வு செய்து இந்த காலத்தில் 5 காப்புரிமைகள் பெற்றுள்ளன. 2022ல் இந்த சாதனங்கள் அறிமுகம் ஆயின. பெங்களூரு புனித ஜான் மருத்துவமனையில் ஓராண்டு பரிசோதிக்கப்பட்டது.
”நிறுவனம் இதுவரை 1500 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 45 சதவீத நோயாளிகள் சிகிச்சையின் பல்வேறு கட்டங்களில் பிட்னஸ் சோதனை எடுத்துக்கொண்டுள்ளனர்”.
இந்த சோதனை பொதுவாக 20- 30 நிமிடங்கள் தேவைப்படுபவை. இயக்கத்தின் அளவு, தசை ஆற்றல், சமநிலை, விழுவதன் இடர் ஆகிய அம்சங்களை பரிசிலீக்கிறது என்கிறார் அன்மோல்.
எதிர்கால திட்டம்
பெங்களூருவின் பரபரப்பான சூழலில் இருந்து 30 கிமீ தொலைவில் பல்வேறு நிலைகளில் உள்ள பல்வேறு மாநில விவசாயிகள் பணியாற்றிக்கொண்டிருக்கும் நிலப்பரப்பை காணலாம். குடும்பத்திற்கான பிரதான வருமானம் ஈட்டுபவர்கள் என்ற முறையில் இந்திய விவசாயிகளுக்கு அதிக நிவாரணம் இல்லை.
வயோதிகத்தின் கடினமான நிஜமாக மூட்டு வலி உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனினும், இந்திய விவசாயிகளுக்கு பெரும்பாலும் எட்டாமல் இருக்கும் அறுவை சிகிச்சையை விட வரும்முன் காப்பது சிறந்தது.
அஷ்வா நிறுவனம் பெங்களூருவைச்சுற்றியுள்ள கிரமாப்புற மருத்துவமனைகளுடன் இணைந்து விவசாயிகளுக்கு மானிய விலையில் பரிசோதனை வசதி அளிக்கிறது.
“முடங்கி போய் அறுவை சிகிச்சையை நாட வேண்டிய அளவுக்கு மோசமாகும் வரை காத்திருக்காமல் மூட்டுவலியின் ஆரம்ப நிலையை கண்டறிய விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது எங்கள் நோக்கம்,” என்கிறார் அன்மோல்.
“விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு போன்றவர்கள். அவர்கள் எலும்பை கவனிக்க விரும்புகிறோம்” என்கிறார்.
அஷ்வா, பிட்னீஸ் சாதனத்தின் சோதனை பரப்பை, காயத்தில் இருந்து மீண்டு வந்து களத்திற்கு திரும்பும் விளையாட்டு வீரர்கள் நிலையை சோதிக்க விரிவாக்கம் செய்ய உள்ளது. ஓட்டம் தொடர்பான, எதிர்கால காயம் தொடர்பான தகவல்களை இது அளிக்கும்.
எதிர்காலத்தில் இந்த ஸ்டார்ட் அப், சோதனையை ஒரே மாதிரியாக்கி, இயன்முறை பலன்களை, தங்களுக்கான தனிப்பட்ட கவனம் தரும் சிகிச்சையாளர் பெற முடியாத அனைத்து இந்திய தடகள வீரர்களுக்கும் அளிக்க விரும்புகிறது.
2013 இறுதிக்குள், பெங்களூரு, ஐதராபாத், மும்பையில் 150 மையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. அடுத்த சுற்று நிதி திரட்டும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளது. அதிக வயதானவர்கள் மக்கள்தொகை கொண்ட இந்தியா, 2050ல் அதிக osteoarthritis நோயாளிகளை கொண்டிருக்கும் என உலக சுகாதார அமைப்பு அறிக்கை தெரிவிக்கிறது.
நிறுவனத்தின் தனி கணிப்பு படி, இந்தியாவில் அணியக்கூடிய முழங்கால் சோதனை சாதங்களுக்கான சந்தை 25 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பலர் ஸ்மார்ட் சாதனங்களை நாடும் நிலையில் இது ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆங்கிலத்தில்: அபராஜிதா சக்சேனா | தமிழில்: சைபர் சிம்மன்