‘இப்போ அவசரம் இல்ல’ – boAT ஐபிஓ குறித்து இணை நிறுவனர் அமன் குப்தா அறிவிப்பு!
பங்குச் சந்தை ஏற்ற இறக்கம் காரணமாக பங்கு விற்பனைத் திட்டங்களை ஒத்திவைத்துள்ளதாக boAt நிறுவனத்தின் இணை நிறுவனர் அமன் குப்தா கூறியுள்ளார்.
பங்குச் சந்தை ஏற்ற இறக்கம் காரணமாக பங்கு விற்பனைத் திட்டங்களை ஒத்திவைத்துள்ளதாக boAt Lifestyle நிறுவனத்தின் இணை நிறுவனர் அமன் குப்தா கூறியுள்ளார்.
டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஆடியோ மற்றும் எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பாளரான ’போட்’ (boat) நிறுவனத்திற்கு இந்தியாவில் மிகப்பெரிய வாடிக்கையாளார்கள் உள்ளனர். இந்நிறுவனம் கடந்த ஆண்டு 2,000 கோடி அளவிற்கு நிதி திரட்டுவதற்காக பங்குகளை வெளியிடத் தயாரானது.
இதற்காக boat-இன் தாய் நிறுவனமான இமேஜின் மார்க்கெட்டிங் பிரைவேட் லிமிடெட், ஐபிஓவை எளிதாக்கும் வகையில் பொது நிறுவனமாக மாற்றப்பட்டு அதன் வாரியம் ஐபிஓ திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. ஆனால், பங்குச்சந்தையில் ஏற்பட்ட ஏற்ற, இறக்கம் காரணமாக ஐபிஓ வெளியீட்டை போட் நிறுவனம் நிறுத்திவைத்திருந்தது.
இந்நிலையில், நடப்பு ஆண்டும் ஐபிஓ-வை வெளியிடும் திட்டமில்லை என போட் நிறுவனத்தின் இணை நிறுவனர் அமன் குப்தா தெரிவித்துள்ளார். PTI-க்கு அளித்த பேட்டியில்,
“ஸ்டார்ட்அப் ஐபிஓ-க்கள் நாகரீகமாக இருந்த ஒரு கட்டம் இருந்தது. ஆனால், பின்னர் சந்தை நிலவரத்தால் அந்த நிலை மாறியது. இப்போதைக்கு பொது வெளியீடு தேவையில்லை. ஐபிஓ வெளியிட்டை சில ஆண்டுகள் கழித்து மேற்கொள்ள உள்ளோம். எனவே, FY25-FY26ம் ஆண்டில் தான் ஐபிஓவை வெளியிடலாம் என பார்க்கிறோம்,” எனத் தெரிவித்துள்ளார்.
ஸ்டார்ட்அப் நிறுவனமான ’போட்’ ஐபிஓ வெளியிட்டிற்கு முன்னதாக வேறு ஏதேனும் நிதி திரட்டும் ஐடியாவில் ஈடுபட உள்ளதா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர்,
“தற்போது போட் நிறுவனத்திற்கு நிதி தேவையில்லை. விஷயங்கள் எவ்வாறு நகர்கிறது, அதன் சொந்த வளர்ச்சியைப் பொறுத்தே அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்படும்,” எனக்கூறினார்.
கடந்த ஆண்டு அக்டோபரில் போட் நிறுவனம் பங்குதாரர், Warburg Pincus துணை நிறுவனம் மற்றும் புதிய முதலீட்டாளரான Malabar Investments ஆகியோரிடமிருந்து 500 கோடி ரூபாய் திரட்டியது.
“மேலும், நடப்பு ஆண்டில் போட் நிறுவனம் போதுமான நிதியுதவி மற்றும் நல்ல மூலதனத்துடன் இருப்பதால் இப்போதைக்கு ஐபிஓ-வை வெளியிடத் தேவையில்லை. பணம் வந்தால் வேண்டாம் என்று சொல்ல மாட்டோம், ஆனால் நமக்கு இது தேவையா? என ஆலோசித்து வருகிறோம்.”
கடந்த 2022ம் ஆண்டு ரூ.2,000-கோடி ஆரம்ப பொது வழங்கலுக்கான (ஐபிஓ) சந்தைக் கட்டுப்பாட்டாளரான செக்யூரிட்டீஸ் எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியாவிடம் (செபிஐ) வரைவு ப்ராஸ்பெக்டஸை தாக்கல் செய்தது. ஆனால், நிறுவனம் அதன் வரைவு ரெட் ஹெர்ரிங் ப்ராஸ்பெக்டஸை (டிஆர்ஹெச்பி) முன்கூட்டியே திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது.