Byju’s வாதத்தை நிராகரித்த அமெரிக்க கடன் நிறுவனங்கள் குழு: மொத்த கடனையும் செலுத்த வலியுறுத்தல்!
பைஜூஸ் நிறுவனம் 30 கோடி அளவே கடன் தொகை செலுத்த வேண்டும் என பைஜூ ரவீந்திரன் கூறுவது தவறானது என்றும், நிறுவனம் மொத்த டெர்ம் கடன் 1.2 பில்லியன் டாலர்களை வட்டியோடு செலுத்த வேண்டும், என அமெரிக்க கடன் நிறுவனங்கள் சார்பிலான கிலாஸ் டிரஸ்ட் (GlasTrust) தெரிவித்துள்ளது.
பைஜூஸ் பிராண்டின் உரிமையாளர் மற்றும் திங்க் அண்ட் லேர்ன் நிறுவனர் பைஜு ரவீந்திரன், திவால் செயலாக்கத்தின்படி, சரி பார்க்கப்பட்ட கடன் தொகை ரூ.20 கோடி தான் என்றும் நிறுவனம், கிலாஸ் டிரஸ்ட் பின்னே உள்ள அமெரிக்க கடன் நிறுவனங்களுக்கு எந்த தொகையும் வழங்க வேண்டியதில்லை, என கடந்த வாரம் கூறியிருந்தார்.
“பைஜு அல்லது திவால் செயல்முறை அதிகாரி யாருக்கும், டெர்ம்-பி கடன் வழங்கியவரை தகுதியழக்கச் செய்யும் அதிகாரம் இல்லை, அப்படியே செய்தாலும், முழு கடனை வட்டியோடு பைஜுஸ் செலுத்தியாக வேண்டும். இதற்கு எதிரான எந்த வாதமும் செல்லாது, பைஜு ரவீந்திரனுக்கும் இது தெரியும்,” என பைஜூஸ் ஆல்பா நிறுவனத்திற்கு கடன் வழங்கிய நிறுவனங்களின் சார்பிலான குழு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது,
பைஜூஸ் 1.2 பில்லியன் டாலர் கடனை பைசல் செய்தாக வேண்டும் எனக் கோரி கிலாஸ் டிரஸ்ட் அமெரிக்கா மற்றும் இந்தியாவில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த கடன் தொகையை சட்ட நடவடிக்கை மூலம் திரும்ப பெறுவதற்கான நடவடிக்கையை அமெரிக்க கடன் நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளது நிறுவனத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
பைஜூஸ் குழுமத்தின் பைஜூஸ் ஆல்பா, நிதிகழக முதலீட்டாளர்களிடம் இருந்து 1.2 பில்லியன் டாலர் டெர்ம் பி கடன் பெற்றதாகவும், இதிலிருந்து 500 மில்லியன் டாலரை விலக்கிக் கொண்டதாகவும் கடன் நிறுவனங்கள் சார்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதை பைஜுஸ் மறுத்துள்ளது.
சி.இ.ஓ, நிதி அதிகாரி மற்றும் ஆலோசகர் பைஜூஸ் நிறுவனத்தை விட்டு வெளியேறியுள்ளதாகவும், இப்போது இரண்டாவது ஆடிட்டர் நிறுவனமும் வெளியேறியுள்ளதாகவும், 500 மில்லியன் டாலர் தொடர்பாக விளக்கம் அளிக்க முடியாததே இதற்குக் காரணம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கிலாஸ் டிரஸ்ட், 2026 நவம்பரில் வழங்க வேண்டிய கடனுக்கான செயல்முறையை 2023 மார்ச்சிலேயே மேற்கொண்டதாக பைஜூஸ் குற்றம் சாட்டியுள்ளது. நிறுவனத்திற்கு எதிரான திவால் செயல்முறை வழக்கில், திவால் அதிகாரி, கிலாஸ் டிரஸ்ட் கூறும் 1.35 பில்லியன் டாலர் கடன் கோரிக்கையை ஏற்கவில்லை.
எந்த கடன் நிறுவனத்தையும் தகுதி இழக்கச்செய்யும் அதிகாரம் பைஜூஸ் நிறுவனத்திற்கு இல்லை என்றும், பைஜூஸ் ஆல்பா இயக்குனர் டிமோதி ஆர்.போகுக்கு மட்டுமே இதற்கான அதிகாரம் உள்ளது என்றும் அவர் யாரையும் தகுதி இழக்கச்செய்யவில்லை என்றும் கடன் நிறுவனங்கள் குழு தெரிவித்துள்ளது.
500 மில்லியன் டாலர் தொகையை வெளியே எடுத்துச் சென்றிருக்கலாம் என்பதை மறைக்கவும், நிறுவனத்தை தவறாக நிர்வகித்ததை மறைக்கும் வகையில் பைஜு ரவீந்திரன் தொடர்ந்து தவறான தகவல்களை அளித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
எனினும், கிலாஸ் டிரஸ்ட், கடன் தொகையை கோர அதிகாரம் அற்றது என பைஜூ ரவீந்திரன் மறுத்திருக்கிறார்.
“கடன் ஒப்பந்தப்படி, கடன் நிறுவனம் மட்டும் அல்ல, தாய் நிறுவனம், திங்க் அண்ட் லேர்ன் கடன்தாரரை தகுதியிழக்கச்செய்யலாம். டிம் போல் வெறும் நாமினி தான். அவருக்கு யாரையும் தகுதியிழக்கச்செய்யும் அதிகாரம் இல்லை. தாய் நிறுவனத்தின் தகுயிழக்கச்செய்யும் ஆற்றலையும் அவரால் ரத்து செய்ய முடியாது,” என ரவீந்திரன் கூறியுள்ளார்.
இந்த கோரிக்கையை வலியுறுத்த கடன் நிறுவனங்கள் நியூயார்க் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட நிதி என்பதை நிருபிக்க வேண்டும் இது கடினமானது என ரவீந்திரன் கூறியதையும் கடன் நிறுவனங்கள் குழு மறுத்துள்ளது.
“நியூயார்க் வழக்கில் இந்த கேள்வி எழவில்லை. மேலும், இந்த கோரிக்கையை மேற்கொள்ள இந்த கேள்வி அவசியம் இல்லை,“ என்றும் தெரிவித்துள்ளது.
“டெர்ம் கடனில் விலை, கிலாஸ் டிரஸ்ட் கோரிக்கை மீது அல்லது பைஜூஸ் வழங்க வேண்டிய தொகை மீது தாக்கம் செலுத்தாது. பைஜுஸ் 1.2 பில்லியன் டாலர் கடன் பெற்றது. விலை அதிகமானால் கூடுதலாக செலுத்த வேண்டாம், விலை குறைந்தால், குறைவாக செலுத்த வேண்டாம் என்பதே நிதி சந்தை செயல்முறை,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.