Contact Information

JKrish Pvt Ltd, AIC Raise, Rathinam Techzone, Eachanari, Coimbatore. Tamilnadu - 641 021.

We Are Available 24/ 7. Call Now.

இல்லத்தரசிகளை புகைப்படக் கலைஞர்கள் ஆக்கி வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் ‘கனவு’ பயிற்சி திட்டம்!

இல்லத்தலைவிகள், இளம் பட்டதாரிகள், வீட்டில் இருக்கும் அம்மாக்கள் என விளிம்பு நிலை பின்னணியைச் சேர்ந்தவர்களை தேர்வு செய்து அவர்களை கேமராவை கையாள வைத்து புகைப்படக்கலைஞர்கள் ஆக்குகிறது ‘கனவு’ திட்டம்.

சில ஆண்டுகளுக்கு முன் வரை சென்னையைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் அமர் ரமேஷ் தமிழ்நாடு முழுவதும் உரைகள் மற்றும் பயிலரங்குகள் நடத்திய போது, வரக்கூடிய 300 பேர்களில் 2 பேர் மட்டுமே பெண்களாக இருப்பதைக் கவனித்துள்ளார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன், அவரது ஸ்டூடியோ ஏ, Chennai Photo Biennale (CPB)) உடன் இணைந்து, இந்த பாலின இடைவெளியை சரி செய்ய தீர்மானித்தது. முதல் கட்டமாக பெண்கள் பங்கேற்பு குறைவாக உள்ள தமிழ்நாட்டின் சிறிய நகரங்களில் வசிக்கும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களில் உள்ள பெண்களை அடையாளம் கண்டு தங்கள் திட்டத்தை செயல்படுத்தத் திட்டமிட்டனர்.

கனவு ஊக்கத்தொகை திட்டம் 2021ல் துவங்கியது. இல்லத்தலைவிகள், இளம் பட்டதாரிகள், வீட்டில் இருக்கும் அம்மாக்கள் என விளிம்பு நிலை பின்னணியைச் சேர்ந்தவர்களை தேர்வு செய்து அவர்களை கேமராவை கையாள வைத்து விரும்பிய கதைகளை சொல்ல வைத்தனர்.

பங்கேற்பாளர்களின் சிலர் தங்கள் நகரங்களில் முதல் பெண் புகைப்படக் கலைஞர்களாக உருவாயினர். அவர்கள் ஆவணப்படம், திருமணம் மற்றும் பிறந்த குழந்தை படமெடுப்பதில் ஈடுபட்டனர்.

கனவு குழு மூலம் உருவானவர்களில் தேனி மாவட்டம் லட்சுமிபுரம் பகுதியைச்சேர்ந்த ஐந்து வயது குழந்தையின் தாயான சாந்தினி ரமேஷ் (33) ஒருவர். இவர் நகரில் பிறந்த குழந்தைகளை படம் பிடிக்கும் சிறந்த புகைப்பட கலைஞராகக் கருதப்படுகிறார்.

திருமணமானவுடன் சாந்தினி வீட்டை பார்த்துக்கொள்வதற்காக வேலையை விட்டுவிட்டார்.

“என் மகள் பிறந்ததும், வீட்டில் இருந்த சாதாரண டிஜிட்டல் கேமராவில் குழந்தையை படம் எடுத்துக்கொண்டிருப்பேன். யூடியூப் வீடியோக்களை பார்த்து மேலும் நன்றாக படம் எடுக்கக் கற்றுக்கொண்டேன். என்னுடைய பிரேமிங் மற்றும் புகைப்பட அமைப்பை கவனித்த தோழிகள் தங்கள் குழந்தைகளை படம் எடுக்க என்னை அழைத்தனர்,” என்கிறார்.

இதனிடையே, கனவு பெலோஷிப் பற்றி ஆன்லைனில் அறிந்த போது தொழில்முறை பயிற்சிக்கான வாய்ப்பு என உணர்ந்தார்.  

“அப்போது சமூக ஊடகத்தில் நான் அதிக இருப்பு கொண்டிருக்கவில்லை. ஆனால், இப்போது ஆன்லைனில் பகிரும் படங்கள் மூலமே எனக்கு அதிக வாய்ப்புகள் வருகின்றன. இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் கருவிகள், லைட்கள் வாங்குகிறேன்,” என்கிறார்.

2021 முதல் 50 பெண்கள் இந்த பயிற்சி திட்டத்தில் பங்கேற்றிருக்கின்றனர். இவர்களில் ஐந்து பேர் சாதி, பாலின அடையாளம், சமூகப் பின்னணி என எல்லாவற்றிலும் மிகவும், விளிம்பு நிலையைச் சேர்ந்தவர்கள்.  

இந்தியாவில் வர்த்தக புகைப்படக் கலை மற்றும் திரைப்படம் ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் துறைகளாகவே இருக்கின்றன. இவர்கள் உருவாக்கும் கலையில் மட்டும் அல்லாமல் பின்னே உள்ள கலைஞர்களிலும் இதே நிலை தான்.

“சென்னையில் வர்த்தக மற்றும் வணிக புகைப்படக் கலையில் நல்ல வாய்ப்புகள் இருந்தாலும், இதில் நுழையும் பெண்கள் ஒவ்வொரு கட்டத்திலும் தடைகளை சந்திக்க வேண்டும்,” என்கிறார் இந்த திட்டத்தில் ரமேஷுடன் இணைந்து வழிகாட்டியாக செயல்படும் சிபிபி பவுண்டேஷனின் காயத்ரி நாயர்.

அப்படியென்றால் சிறிய நகரங்களைச் சேர்ந்த பெண்கள் இங்கு எப்படி நுழைய முடியும் என நீங்கள் கற்பனை செய்து கொள்ளலாம், என்கிறார். 2012ல் ரமேஷ் அமர்த்திக்கொண்ட முதல் பெண் புகைப்படக் கலைஞர் காயத்ரி என்பது குறிப்பிடத்தக்கது.

பெண் புகைப்படக் கலைஞர்கள்

ஆண்டு முழுவதும் நடைபெறும் இந்தத் திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் பயிற்சியாளர்களுக்கு கேமரா மற்றும் கருவிகள் அளிக்கப்பட்டு தொழில்முறை பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஆர்.ஆர் டோனல்லே மற்றும் போட்டோ சவுத் ஆசியா இதற்கு ஆதரவு அளிக்கின்றன. தொழில்நுட்பப் பயிற்சி கிடைத்த பிறகு அவர்களுக்கு வர்த்தக மற்றும் திட்ட நிர்வாகம் அளிக்கப்பட்டு புகைப்பட தொகுப்பும் உருவாக்கப்படுகிறது. துறையில் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளவும் வழிகாட்டுகின்றனர்.

“பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக வளர்ந்து வரும் புகைப்படக் கலை பிரிவுகளில் அறிமுகம் அளிக்கப்படுகிறது. இதன் பயனாக அவர்கள் தாங்கள் விரும்பிய வகையில் புகைப்பட இதழியல், பேஷன், ஆவணப்படம் என தேர்வு செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தின் போது உருவாக்கிக் கொள்ளும் தொடர்புகளும் அவர்கள், பின்னர் வாய்ப்புகள் பெற உதவுகின்றன,” என்கிறார் காயத்ரி.

“உள்ளூர் பெண்களால் சொல்லப்படும் உள்ளூர் விஷயங்கள் தொடர்பான குரலில் பெரிய போதாமை இருப்பதாகவும் அறிந்தோம். இந்தத் திட்டத்தின் வாயிலாக தேர்வானவர்கள் மீனவர்களின் இன்னல்களை அல்லது பழங்குடியினரின் பிரச்னைகளை அடையாளம் காட்டுவதை கண்டு வருகிறோம்,” என்கிறார் ரமேஷ்.

’கனவு’ திட்டம் மூன்றாம் பதிப்பில் அடியெடுத்து வைக்கும் நிலையில் தொடர்ந்து வளர்ச்சியை கண்டு வருகிறது.  

“முதலாண்டு புகைப்படக் கலை மற்றும் வீடியோ எடுப்பதில் மட்டும் கவனம் செலுத்தினோம். இரண்டாவது ஆண்டு ஸ்டூடியோவுக்கு வெளியே சென்று மற்ற பெண் புகைப்படக் கலைஞர்களோடு இணைந்து வகுப்புகளை நடத்தினோம். தகவல் தொடர்பு திறன் மற்றும் சமூக ஊடகத்திலும் கவனம் செலுத்துகிறோம்,” என்கிறார் ரமேஷ்.

திட்டத்தின் நிறைவுக்கு பிறகு, சிபிபி பவுண்டேஷன் மற்றும் ஸ்டூடியோ ஏ பயிற்சியாளர்கள் வேலை வாய்ப்பு பெற உதவியுள்ளதோடு, தேவை எனில் கருவிகளையும் இலவசமாக வாடகைக்கு அளித்துள்ளது.

“எங்கள் முதல் பிரிவு மாணவர்களில் ஒருவர் சென்னை தட்சின சித்ராவின் பாரம்பரிய அருங்காட்சியகத்தில் வேலை பெற்றார். இரண்டாவது ஆண்டு மாணவர்களில் ஒரு மாணவர் சென்னையின் புகழ் பெற்ற ஜவுளிக் கடையில் புகைப்படக் கலைஞராக சேர்ந்தார்,” என்கிறார் அமர்.

இரண்டாம் ஆண்டு பயிற்சி மாணவரான ராமநாதபுரம் மண்டபத்தைச் சேர்ந்த செளந்தர்யா மகேஷ் குமார், சதுப்பு நில காடுகள் மற்றும் உள்ளூர் பெண் கைவினைக் கலைஞர்கள் பற்றி கேமராவில் பதிவு செய்து வருகிறார்.

தற்போது இந்தத் திட்டத்தை மேலும் விரிவாக்கி, பயிற்சி அளிக்கும் பெண்களில் ஒவ்வொருவரையும் தொழில்முறை கலைஞராக்கும் வகையில் முழுமையான பாடத்திட்டமாக உருவாக்க விரும்பினாலும், பெருந்தொற்றுக்குப் பிறகு நிதி கிடைப்பது சிக்கலாக இருப்பதை குழு உணர்ந்துள்ளது.

“ஸ்டூடியோ வேலைவாய்ப்பில் துவங்கி நம்பிக்கையோடு முழு திரைப்படத்தை எடுப்பது வரை அவர்கள் விரும்பியதை உடனடியாக செய்யும் வகையில் எங்கள் பயிற்சியாளர்களுக்கு வரும் ஆண்டுகளில் பயிற்சி அளிக்கத் திட்டமிட்டுள்ளோம்,” என்கிறார்.

ஆங்கிலத்தில்: சரண்யா சக்ரபாணி | தமிழில்: சைபர் சிம்மன்

Share:

administrator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *