Contact Information

JKrish Pvt Ltd, AIC Raise, Rathinam Techzone, Eachanari, Coimbatore. Tamilnadu - 641 021.

We Are Available 24/ 7. Call Now.

இந்தியாவைச் சேர்ந்த முன்னணி நிறுவனத்தின் சிஇஓ ஒருவர் மாதம் 15 ஆயிரம் ரூபாயை மட்டுமே சம்பளமாக பெறுகிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?…

நிறுவனத்தைப் பொறுத்தவரை தலைமைச் செயல் அதிகாரி (CEO) என்பவர் மிகவும் முக்கியமான நபராக விளங்குகிறார். குறிப்பிட்ட நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் சரிவை தீர்மானிக்கும் முக்கிய இடத்தில் உள்ளதால், ஸ்டார்ட்அப் முதற்கொண்டு பன்னாட்டு நிறுவனங்கள் வரை சிஇஓவிற்கு லட்சங்களில் தொடங்கி கோடிகளில் சம்பளம் வழங்குகின்றன. சம்பளம் மட்டுமின்றி பயணச்செலவு, வீடு, சொகுசு கார், போனஸ், பங்குகள் என பிற சிறப்பு சலுகைகளும் வழங்கப்படுகிறது.

ஆனால், இந்தியாவைச் சேர்ந்த முன்னணி நிறுவனத்தின் சிஇஓ ஒருவர் மாதம் 15 ஆயிரம் ரூபாயை மட்டுமே சம்பளமாக பெறுகிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

ஆம், இந்திய ஃபின்டெக் நிறுவனமான கிரெட்டின் (CRED) தலைமை நிர்வாக அதிகாரி குணால் ஷா சமீபத்தில் தனது சம்பள விவரங்களை வெளியிட்டது சோசியல் மீடியாவில் பெரும் விவாதத்தையே கிளப்பியுள்ளது.

குணால் ஷா சம்பளம் எவ்வளவு?

CRED CEO குணால் ஷா மாதம் ரூ.15 ஆயிரம் மட்டுமே சம்பளம் வாங்குவதாக சமீபத்தில் தெரிவித்துள்ளார். முன்னணி நிறுவனத்தில் இவ்வளவு குறைவான சம்பளத்திற்கு குணால் ஷா பணியாற்றுவது ஏன் என்ற கேள்விகள் எழுந்தன. இதுகுறித்து தெளிவான விளக்கத்தை குணால் ஷா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். தனது ஃபின்டெக் நிறுவனம் லாபகரமாக இயங்க ஆரம்பிக்கும் வரை பெரிய அளவில் சம்பளம் பெறப்போவதில்லை என முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, கிரெட் தலைமை நிர்வாக அதிகாரி குணால் ஷா தனது இன்ஸ்டாகிராம் கணக்கில், ‘என்னிடம் எதையும் கேளுங்கள்’ என்ற தலைப்பில் நெட்டிசன்களுடன் கலந்துரையாடல் நிகழ்வை நடத்தினார். அப்போது இன்ஸ்டாகிராம் பயனர்களில் ஒருவர்,

“கிரெடில் உங்கள் சம்பளம் மிகவும் குறைவாக உள்ளது. அதை வைத்து நீங்கள் எப்படி வாழ முடியும்?” என கேள்வி எழுப்பினார்.

அதற்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிலளித்துள்ள குணால் ஷா,

“நிறுவனம் லாபகரமாக இயங்கும் வரை நான் நல்ல சம்பளம் பெறுவது சரியல்ல என்று நினைக்கிறேன். அதனால்தான் கிரெடில் எனது சம்பளம் மாதம் ரூ.15,000 மட்டுமே. எனது பழைய நிறுவனமான ஃப்ரீசார்ஜ் விற்ற பணம் என்னிடம் உள்ளது. எனவே, இந்த சம்பளம் போதும்,” எனத் தெரிவித்துள்ளார்.

சோசியல் மீடியாவில் வெடித்த விவாதம்:

குணால் ஷாவின் இன்ஸ்டாகிராம் பதிவு ஸ்கிரீன் ஷாட்டை அஜித் படேல் என்பவர் தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டு, “கோடிகளில் சம்பளம் வாங்கும் சிஇஓக்கள் இருக்கிறார்கள். ஆனால் குணால் ஷா அப்படி இல்லை” எனக்குறிப்பிட்டார்.

இந்த ட்வீட் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி 1.4 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. அத்தோடு குணால் ஷாவின் இந்த பதிவு பல்வேறு கருத்துக்களை எழுப்பியுள்ளது.

“மிகவும் ஈர்க்கக்கூடியது” என்று ஒரு நெட்டிசன் கருத்து தெரிவித்துள்ளார். “குணால் ஷா ஒரு மிகப்பெரிய முதலீட்டாளர் . அவர் 500-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப்களில் முதலீடு செய்துள்ளார். அந்த முதலீடுகள் மூலம் அவருக்கு வருமானம் வந்து கொண்டிருக்கிறது,” என மற்றொருவரும் பதிவிட்டுள்ளார்.

“வரி ஏய்ப்பதற்காக குறைந்த சம்பளம் வாங்குகிறார்…” என்றும் ஒருவரும், மற்றொருவர், “தனது ஸ்டார்ட்அப் நிறுவனத்தை பல நூறு கோடிகளுக்கு விற்றுவிட்டதால், அவரிடம் பணம் குவிந்து கிடைக்கிறது,” என்றும் பதிவிட்டு விவாதத்தை சூடுபிடிக்க வைத்துள்ளனர்.

CRED ஏன் லாபகரமாக இல்லை?

மற்றொரு இன்ஸ்டாகிராம் பயனர் நிறுவனத்தின் இழப்புகளை எடுத்துரைத்து, CRED ஏன் இன்னும் லாபகரமாக இல்லை என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்துள்ள குணால் ஷா,

“பெரும்பாலான நிதியளிப்பு நிறுவனங்கள், பொதுவான வணிகங்களை மலிவாக வாங்கக்கூடிய சில விளிம்பு நிலை பொருட்களை விற்கும் நிறுவனங்களில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். தொழில்நுட்ப நிறுவனங்கள் பல ஆண்டுகளாக பெரிய விநியோகம் மற்றும் ஈடுபாட்டை உருவாக்குவதற்கு முதலீடு செய்கின்றன,” எனக்குறிப்பிட்டுள்ளார்.

2021ம் ஆண்டில் கிரெடிட்டின் வருவாய் ரூ.95 கோடியிலிருந்து ரூ.422 கோடியாக உயர்ந்த போதிலும், 2022ம் ஆண்டு ரூ.1,279 கோடி நிகர இழப்பைப் பதிவு செய்துள்ளது.

இதற்கிடையில், ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் வணிக ஊக்குவிப்பு செலவுகள் ரூ.975 கோடிக்கும் அதிகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share:

administrator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *