இந்திய இ-காமர்ஸ் துறையின் லாஜிஸ்டிக் செயல்பாடுகளை மாற்றிய ஸ்டார்ட் அப் நிறுவனமான ‘டெல்ஹிவரி’யின் மலைக்கத்தக்க பயணத்தில் நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை ஏராளம்.
பிசினஸ் உலகில் தற்போது இருக்கும் ஸ்டார்ட் அப் அலை என்பது இந்தியாவின் பொருளாதாரத்தை உயர்த்தியது மட்டுமல்லாமல், பல்வேறு துறைகளில் உள்ள பல பிரச்சனைகளையும் தீர்த்துள்ளது. இன்று நாம் உணவு, மருந்துகள், உடைகள், எலக்ட்ரானிக் பொருட்கள் என அனைத்தையும் ஒரு அப்ளிகேஷன் மூலமாக ஆர்டர் செய்ய முடியும். ஆனால், ஆன்லைன் ஆர்டரின் மிக முக்கியமான அம்சம் டெலிவரி ஆகும்.
ஆர்டர் செய்த பொருட்கள் வீட்டு வாசலில் டெலிவரி செய்யப்படும்போது, பெரும்பாலும் நம்மில் பலர் ‘டெல்ஹிவரி’ (Delhivery) என்ற ஒரு பெயர் பொறித்த நீல நிற சீருடையில் பெரிய பையுடன் டெலிவரி பாய்கள் வந்திருப்பதை கவனித்திருக்கக் கூடும். ஆம், இந்த யூனிகார்ன் அத்தியாத்தில் நாம் பார்க்கப்போவது, லாஜிஸ்டிக்ஸ் துறையில் புரட்சியை உருவாக்கிய ‘டெல்ஹிவரி’ நிறுவனம் பற்றிதான்.
டெல்ஹிவரி தொடங்கப்படுவதற்கு முன்பும், லாஜிஸ்டிக்ஸ் வணிகம் ஒரு முக்கியத் துறையாக இருந்தாலும், எந்த நாட்டிலும் இந்த வணிகம் ஒரு பெரிய புரட்சிகரமான மாற்றத்தைக் கண்டதில்லை. டெல்ஹிவரி அப்படியான புரட்சியை இத்துறையில் செய்துள்ளது என்பதை இந்த அத்தியாயம் முடியும்போது உணர்வீர்கள்.
Delhivery founders
இந்திய இ-காமர்ஸ் துறையின் லாஜிஸ்டிக் செயல்பாடுகளை மாற்றிய ஸ்டார்ட் அப் என்றால் கண்ணைமூடிக் கொண்டு டெல்ஹிவரியை கைகாட்டலாம். இந்தியாவின் கடைக்கோடி வரை ஒரு பில்லியனுக்கும் அதிகமான டெலிவரிகளை செய்துள்ள நிறுவனமே டெல்ஹிவரி.
குர்காவில் உள்ள 250 சதுர அடி அறையில் 4 டெலிவரி நபர்கள் உட்பட மொத்தம் 10 பேர் கொண்ட ஒரு சிறிய வணிகமாகத் தொடங்கியது, இப்போது 15,000-க்கும் அதிகமானோருடன் 2,521 நேரடி விநியோக மையங்கள் உதவியுடன் 18,000 பின்கோடுகளுக்கு 24 மணி நேரமும், வாரத்தில் 7 நாட்களும் டெலிவரி செய்யும் திறன் கொண்ட சாம்ராஜ்ஜியமாக வளர்ந்துள்ள ‘டெல்ஹிவரி’யின் ஸ்டார்ட் அப் ஐடியா இரவு 11.30 மணியளவில் பசித்தபோது உருவானது என்றால் சற்று வியப்பாக இருக்கலாம்.
வியப்புடன் இதன் முழு பின்னணியை தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், முதலில் ‘டெல்ஹிவரி’யின் காரணகர்த்தாவாகிய சாஹில் பருவாவின் கதையை தெரிந்துகொள்ள வேண்டும்.
சாஹில் பருவா அண்ட் கோ…
சிறு வயதிலேயே லட்சியத்துக்காக தேடலை தொடங்குபவர்கள், வாழ்க்கையில் மிகப் பெரிய வெற்றியை அடைவார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை. இந்தக் கதையின் நாயகனின் சாஹில் பருவா விஷயத்திலும் அதுவே நடந்துள்ளது.
டெல்லியை அடுத்த குர்கானில் பிறந்த சாஹில், கர்நாடகாவின் என்ஐடியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்தவர். மேலும், பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் (IIM-B) நிதித்துறை முதுகலை பட்டப்படிப்பில் கோல்டு மெடலிஸ்ட். சாஹில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துக் கொண்டிருந்த நாட்களில் ‘ரிசர்ச் இன்டர்ன்’ ஆக கிட்டத்தட்ட 4 மாதங்கள் பணியாற்றுவதற்காக, 2005-ல் அமெரிக்காவில் உள்ள மேரிலாந்து பல்கலைக்கழகத்திற்குச் சென்றிருந்தார். கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்து, அவர் ஐஐஎம்-பியில் படித்தபோதும் லண்டனில் இன்டர்ன்ஷிப் கிடைக்க மீண்டும் வெளிநாட்டிற்கு பறந்தார்.
பெயின் & கம்பெனியில் சுமார் 3 மாதங்களுக்கு மேலாக இன்டர்ன் ஆக பணிபுரிந்தார். பெயின் & கம்பெனி எங்கோ கேட்டதுபோல் உள்ளதா? பாலிசி பஜார் நிறுவனர் யாஷிஷ் தாஹியா பணிபுரிந்த அதே கம்பெனியில்தான் சாஹிலும் இன்டர்னாக இருந்தார். அங்கு சாஹில் பெற்ற அறிவு விலைமதிப்பற்றது. அதனால், ஐஐஎம்-பியில் படிப்பை முடித்ததும் 2008-ல் பெயின் & கம்பெனியில் முழுநேர ஆலோசகராக பணியில் சேர்ந்தார்.
அடுத்த ஒரு வருடத்தில் மூத்த ஆலோசகராக பதவி உயர்வோடு அவரது பொறுப்புகளும் விரிவடைந்தது. 2010-ல் மீண்டுமொரு பதவி உயர்வு என ஜெட் வேகத்தில் தொழில் வாழ்க்கையை நகர்த்திய சமயத்தில் தனது கம்பெனியில் தன்னுடன் பணிபுரிந்த சூரஜ் சஹாரன் மற்றும் மோஹித் டான்டன் உடன் நட்பு ஏற்பட்டது. மூவரும் வெகுசீக்கிரமாகவே நெருங்கிய நண்பர்கள் ஆகினர். அவர்களின் நட்பை இன்னும் ஆழப்படுத்திய ஒரு விஷயம், அவர்கள் மூவரும் ஒரே மாதிரியான மனநிலையைக் கொண்டிருந்தனர்.
அதாவது, சொந்தமாக ஒரு பிசினஸ் தொடங்க வேண்டும் என்பதே அவர்களின் மனநிலை. ஒரேயொரு பிரச்சனை என்னவென்றால், என்ன பிசினஸ் தொடங்குவது என்பதுதான் அவர்களுக்குத் தெரியவில்லை. ஆனால், எதாவது ஒன்று தொடங்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் அவர்களை விட்டு அகலவில்லை. ஐடியாவைக் கண்டுபிடிப்பதற்காகவே தங்கள் வேலைகளில் இருந்து மூவரும் ஆறு மாதம் ஓய்வு எடுத்துக் கொண்டனர். இறுதியாக அவர்களுக்கு உதவியது ‘ஜொமாட்டோ’ நிறுவனர்களான பங்கஜ் சத்தா மற்றும் தீபிந்தர் கோயல் ஆகியோருடனான நட்புதான்.
Delhivery and Volvo
அந்த சமயத்தில் ஜொமாட்டோ (Zomato) தனது பயனர்களுக்கு உணவகங்கள் குறித்த தகவல்களை வழங்கும் ஆன்லைன் ஊடகமாக இருந்தது. இது சாஹில் பருவா அண்ட் கோ-க்கு அற்புதமான யோசனையைக் கொடுத்தது. இணையம் உலகெங்கும் பரவத் தொடங்கிய அக்காலத்தில், மூவருக்குமே இணையத்தில் மூழ்கியிருப்பது பிடித்த விஷயமாக இருந்தது.
இந்திய இணைய சந்தையில் உணவகங்கள் குறித்த தகவல்கள் கொட்டிக்கிடந்ததாலும், அது டெலிவரி சேவையில் பின்தங்கியே இருந்தது. உணவகங்களுக்கான டெலிவரி நெட்வொர்க் என்பது ஆன்லைன் மூலமாகவும் இல்லை, நேரடியாகவும் இல்லை. அப்போது ஜொமாட்டோவின் அவசியமான தேவையாகவும் டெலிவரி இருந்தது.
இந்த யோசனை உதிக்க, அவர்கள் ஆலோசிக்கவும் திட்டமிடவும் தொடங்கினர். ஒரு யோசனை மற்றொன்றுக்கு வழிவகுத்தது. இப்போது செய்ய வேண்டிய ஒரே விஷயமாக அவர்கள் முன் இருந்தது டெலிவரி பாய்ஸ்.
பசியால் கிடைத்த வாய்ப்பு…
ஒரு குறிப்பிட்ட நாளில் இரவில் தாமதமாக சாஹிலுக்கும் சூரஜ்ஜுக்கும் பசியெடுக்க, அருகிலுள்ள உணவகத்தில் உணவை ஆர்டர் செய்திருந்தனர். உணவை கொண்டுவந்த டெலிவரி பாயுனுடானான நீண்ட நேர உரையாடலில், அவர்களின் உணவகம் நிரந்தரமாக மூடவிருப்பதை அறிந்துகொள்ள உதவியது. அதை அறிந்ததும், இருவரும் விரைவாக உணவக உரிமையாளரை சந்தித்தனர்.
“இரவு 11.30 ஆகிவிட்டது, எனக்கு இன்னும் நினைவிருக்கிறது, நாங்கள் எங்கள் பைக்கை எடுத்துக்கொண்டு அதன் உரிமையாளரான அனுஜ் பஜாஜை சந்திக்கச் சென்றோம். உணவகத்தை மூடப்போவதை உறுதியப்படுத்திய அவரின் வருத்தம் அவருடைய ஊழியர்கள் எங்காவது இடமாற்றுவதில் இருந்தது. அவரை சந்தோஷப்படுத்தும் விதமாக நாங்கள் ஊழியர்கள் அனைவரையும் வேலைக்கு எடுத்துக்கொள்கிறோம் என்றோம்,” – சாஹில் பருவா
அதிகம் யோசிக்காமல், ஊழியர்கள் அனைவரையும் சாஹிலும் சூரஜும் வேலைக்கு அமர்த்தியது தங்களின் யோசனையை செயல்படுத்துவதற்காகதான். குர்கானில் 250 சதுர அடி அறையில் 4 டெலிவரி பாய்ஸ் உட்பட மொத்தம் 10 பேர் கொண்ட குழுவுடன் அவர்கள் தங்கள் முதல் அலுவலகத்தை அமைத்தனர். ஆரம்பத்தில் உணவகங்களுக்கான டெலிவரி. “ஒரு மணி நேரத்திற்குள் டெலிவரி” என்கிற நோக்குடன் தொடங்கி அரை மணி நேரத்திற்குள் உணவுப் பொருட்களை டெலிவரி செய்தனர். விரைவில், அவர்கள் குர்காவ் பகுதியில் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 100 ஆர்டர்களை டெலிவரி செய்தனர்.
“நன்றாக நினைவிருக்கிறது, எங்களின் முதல் ஆர்டர் ஒரு கஃபேவுக்காக இருந்தது. அப்போது எங்களிடம் பைக் இல்லை. காரில்தான் முதல் டெலிவரியை முடித்தோம். அப்படி ஆரம்பித்ததுதான் இது. ஒரு டெலிவரியை 20 நிமிடத்தில் முடித்தோம். இ-காமர்ஸ் நிறுவனங்களை சேர்ந்த சில நபர்களுக்கு நாங்கள் டெலிவரி செய்திருப்போம் என நினைக்கிறேன். அவர்களில் சிலர் ‘அரை மணி நேரத்தில் உங்களால் உணவை டெலிவரி செய்ய முடிந்தால், ஏன் நீங்கள் எங்கள் பேக்கேஜ்களை டெலிவரி செய்யக்கூடாது?” எனக் கேட்டனர்.
அப்படி கேட்டது எங்களை யோசிக்க வைத்தது. இந்தியாவில் கூரியர் நிறுவனங்களுக்கு பஞ்சமில்லை. ஆனாலும் நாங்கள் ஏன் இவர்களுக்கு தேவைப்படுகிறோம் என்பது எங்களுக்குப் புரியவில்லை. இதனால் ஒருநாள் அருகில் உள்ள ப்ளு டார்ட் கூரியர் சென்டருக்கு சென்று, சூரஜுக்கு புத்தகம் ஒன்றை கூரியர் அனுப்ப வேண்டும் என்று கேட்டேன். கூரியர் சென்டருக்கு அருகிலேயே வசிக்கும் அவனுக்கு அனுப்ப இரண்டு நாட்கள் ஆகும் என்றார்கள். இதற்கு கட்டணமாக ரூ.300 கேட்கப்பட்டது.
“அன்றுதான் இந்தியாவில் கூரியர் நிறுவன கட்டமைப்பில் உள்ள பிரச்சனைகளை புரிந்துக்கொள்ள முடிந்தது,” என்கிறார் சாஹில்.
delhivery
உருவானது Delhivery
மோஹித் டன்டன், பவேஷ் மங்லானி மற்றும் கபில் பாரதி ஆகியோர் சாஹில் மற்றும் சூரஜுடன் இணைந்துகொள்ள 2011-ல் டெல்ஹிவரி சேவை தொடங்கப்பட்டது. உணவு டெலிவரி செய்தபோது முதலீடு செய்த அபிஷேக் கோயல் என்பவரின் urbantouch.com என்ற ஆன்லைன் ஃபேஷன் மற்றும் அழகு விற்பனை நிறுவனம்தான் டெல்ஹிவரி சேவையின் முதல் இ-காமர்ஸ் வாடிக்கையாளர். படிப்படியாக லாஜிஸ்டிக் டெலிவரியில் கண்ட முன்னேற்றத்தால் டெல்ஹிவரிக்கு ஹெல்த்கார்ட் என்ற நிறுவனம் இரண்டாவது வாடிக்கையாளராக வந்தது.
இதில் சிந்திக்க வைத்தது என்னவென்றால் இவர்கள் செய்வதை ப்ளூ டார்ட் ஏன் செய்ய முடியவில்லை? இதை புரிந்துகொள்ள சாஹிலும் சூரஜும் தங்களின் போட்டி நிறுவனங்களை சோதிக்கத் தொடங்கினர். அவர்கள் வெவ்வேறு டெலிவரி சேவைகளைப் பயன்படுத்தி ஒருவருக்கொருவர் பார்சல்களை அனுப்பினர். டெலிவரி நெட்வொர்க்குகளின் மையத்தைப் புரிந்துகொள்ள ஆன்லைனில் பல தயாரிப்புகளை ஆர்டர் செய்தனர்.
விரைவாகவே, ப்ளூ டார்ட் மற்றும் பிற பாரம்பரிய டெலிவரி நிறுவனங்கள் இ-காமர்ஸை முழுமையாக புரிந்து கொள்ளவில்லை என்ற உண்மையை இருவரும் உணர்ந்தனர். இ-காமர்ஸ் டெலிவரியின் செயல்பாடு வழக்கமான டெலிவரியில் இருந்து அடிப்படையில் வேறுபட்டது என்பதையும், இ-காமர்ஸை ஒரு மாபெரும் வாய்ப்பு என்பதையும் புரிந்துகொண்டு டெல்ஹிவரி சேவைக்கான முழு உழைப்பையும் கொடுத்தனர்.
ஆரம்பத்தில் டெல்ஹிவரி குறைந்த கட்டணங்களையே டெலிவரிக்கு வசூலித்தது. தலைநகர் டெல்லி பகுதியில் 500 கிராம் எடைகொண்ட பொருட்களை டெலிவரி செய்ய ரூ.30 – ரூ.35 வரையும், அதுவே மெட்ரோ நகரங்கள் என்றால் ரூ.40 – ரூ.45 வரையும் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களுக்கு ரூ.50-ஐயும் சேவைக் கட்டணமாக வசூலித்தனர்.
முதல்முறை வாடிக்கையாளர்களுக்கு இலவச சேவை உள்ளிட்ட சலுகைகளை வழங்க, ஆண்டின் இறுதியில், டெல்ஹிவரி டெல்லி NCR பகுதியில் உள்ள 5 இ-காமர்ஸ் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளைக்கு 500 ஷிப்மென்ட்களை வழங்கியது.
மேலும், பணியாளர்களின் எண்ணிக்கையும் 25 ஆக அதிகரித்ததுடன் டெல்லியில் மட்டும் மூன்று கிளைகளைத் தொடங்கினர். 2012 தொடக்கத்தில் டைம்ஸ் இன்டர்நெட் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து முதலீடு கிடைக்க டெல்லியிலும் சென்னையிலும் கிளைகள் பரவின.
அடுத்தடுத்து முதலீடுகள் கிடைக்க நான்காண்டுகளில் மிகப் பெரிய வளர்ச்சியை கண்டது. 2019ல் நடந்த நிதி திரட்டலில் 413 மில்லியன் டாலர் முதலீடுகளை ஈர்த்து இந்தியாவின் 22-வது யூனிகார்ன் ஸ்டார்ட் அப்பாக உருவெடுத்தது. சாஃப்ட் பேங்க், ஃபோசன் இன்டர்நேஷனல் மற்றும் கார்லைல் குழுமம் என பெரும்தலைகள் டெல்ஹிவரியில் முதலீடு செய்துள்ளன.
2020 நிதியாண்டில், டெல்ஹிவரியின் டர்ன் ஓவர் ரூ.2800 கோடி. இதனை 2023-க்குள் 7000 கோடி ரூபாய் அளவுக்கு உயர்த்த வேண்டும் நோக்கத்துடன் 2300-க்கும் மேற்பட்ட நகரங்களில் ஒரு நாளைக்கு 15 லட்சத்திற்கும் அதிகமான ஆர்டர்களை டெலிவரி செய்துவருகிறது.
சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை, டெல்லி மற்றும் பெங்களூரில் நாட்டின் மிகப்பெரிய டிரக் டெர்மினல் ஒன்றை உருவாக்குகிறது. 5000க்கும் மேற்பட்ட டிரக்குகள் மற்றும் 7000 ஓட்டுநர்களை கொண்ட மிகப் பெரிய நெட்வொர்க்கும் உண்டு.
Delhivery CBO Sandeep Barasia
இந்தியா முழுவதும் 250-க்கும் மேற்பட்ட முதல்கட்ட நகரங்கள், மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியா என இந்தியாவை தாண்டியும் டெலிவரி சேவையை விரிவுபடுத்தியுள்ள டெல்ஹிவரி 2019-ஆம் ஆண்டின் ஸ்டார்ட்அப் ஆஃப் தி இயர் விருதையும் வென்றது. Amazon, Flipkart, Jabong, Paytm மற்றும் Uber உள்ளிட்ட பல பெரிய நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து இந்தியாவில் லாஜிஸ்டிக்ஸ் விளையாட்டை மாற்றியமைத்த பெருமை டெல்ஹிவரிக்கு உண்டு.
2022ல் ஐபிஓ வெளியிட்ட டெல்ஹிவரி முன்னதாக 2021ல், பெங்களூருவை தளமாகக் கொண்ட ஸ்பாட்டன் லாஜிஸ்டிக்ஸை வாங்கியது. முந்தைய ஆண்டில், எக்ஸ்பிரஸ் டிரக்கிங்கிற்காக வோல்வோ டிரக்குகளுடன் கூட்டு சேர்ந்தது. 2019-ல், துபாயை தளமாகக் கொண்ட Aramex-இன் இந்தியப் பிரிவை வாங்கியது.
“வெற்றியை உங்கள் சொந்த விதிமுறைகளில் எழுதுங்கள்.”
- இது சாஹில் எப்போதும் உதிர்க்கும் வாக்கியம். அதற்கேற்ப எந்த ஒரு கனவும் சிறியது அல்ல, சாதிக்க முடியாதது அல்ல என்பதை டெல்ஹிவரியின் கதை நமக்கு உணர்த்திக்கொண்டே இருக்கும்.