‘ட்ரோனில் ஓய்வூதியம்’, ‘பாத்திர வங்கி’ – கிராம பஞ்சாயத்தை வளர்ச்சியடைய வைத்த பெண்தலைவர்!
ஒடிசாவின் நுவாபாடா மாவட்டம் பாலேஸ்வர் பஞ்சாயத்து பகுதியில் இருக்கும் பூட்கபாடா கிராமத்தில் உள்ள மாற்றுத்திறனாளி ஒருவரது வீடு தேடி வந்த ஒரு ட்ரோன் அவருடைய ஓய்வூதியத்தை பத்திரமாக அவரிடம் ஒப்படைத்துவிட்டு சென்றது.
இச்சம்பவம் மாநிலம் முழுக்க பரவவே பாலேஸ்வர் பஞ்சாயத்து பிரபலமாகியது. ‘ட்ரோனில் ஓய்வூதியம்’, ‘பாத்திர வங்கி’, ‘வீட்டு வாசலில் பஞ்சாயத்து அலுவலகம்’ உட்பட பல “முதன் முறையாக” செயல்பாடுகளை செய்த பஞ்சாயத்தாக விளங்குவதற்கு பின்னாளுள்ள முகம் சரோஜ் தேவி அகர்வால். அப்பஞ்சாயத்தின் தலைவர்.
ஒடிசாவில் உள்ள எஃகு நகரமான ரூர்கேலாவில் பிறந்து வளர்ந்த சரோஜ் தேவி அகர்வால், திருமணமான பிறகு ஒடிசாவின் நுவாபாடா மாவட்டத்தில் உள்ள அமோதி கிராமத்தின் (பாலேஸ்வர் கிராம பஞ்சாயத்து) குடியிருப்பாளரானார்.
இந்நிலையில், 2006ம் ஆண்டில், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியாவின் 250 மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றாக நுவாபாடா மாவட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டது. அவரது கிராமம் மற்றும் அதைச் சுற்றியுள்ளவர்களின் அவலநிலை சரோஜ் தேவியை உள்ளூர் நிர்வாகத்தில் பணியாற்றத் தூண்டியது.
“கிராம பஞ்சாயத்து சபைகளில் தவறாமல் கலந்து கொள்வேன். பஞ்சாயத்தோ அந்த பகுதியின் வளர்ச்சிக்கு எதுவும் செய்யவில்லை. கிராம பஞ்சாயத்தில் உள்ள கிராமங்கள் பின்தங்கிய நிலையில், உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமாலும், மக்கள் பிடிவாதமாகவும் மாற்றத்தை எதிர்க்கும் தன்மையுடனும் இருந்தனர். கிராமங்களின் வளர்ச்சிக்கு பஞ்சாயத்தில் உறுப்பினராவதே சிறந்த வழி என்று நினைத்தேன்,” என்று கூறினார் சரோஜ் தேவி.
துணை பஞ்சாயத்து தலைவர், கவுன்சிலர் என பல பதவிகளுக்குப் பிறகு, அவர் 2022ம் ஆண்டில் பாலேஸ்வர் கிராம பஞ்சாயத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த கிராம பஞ்சாயத்தின் கீழுள்ள நுவாபாடா மாவட்டமானது 10,000 மக்கள் வசிக்கும் ஒன்பது கிராமங்களை உள்ளடக்கியது.
“கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளாட்சி நிர்வாகத்தில் துணை பஞ்சாயத்து தலைவராகவும், கவுன்சிலராகவும் பணியாற்றி உள்ளேன். இப்போது பாலேஸ்வர் பஞ்சாயத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். சவால்கள் எனக்கு புதிதல்ல.”
கிராம பஞ்சாயத்துக்கு வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை கொண்டு வருவதற்கும், மக்களின் மனநிலையை மாற்றுவதற்கும் நான் பல தடைகளை எதிர்கொண்டுள்ளேன். உதவிக்காக என்னை அணுகும் மக்களுக்காக என் வீட்டுகதவு எப்போதும் திறந்தே இருக்கும். செய்ய நிறைய இருப்பதால் நாள் முழுவதும் ஓடிக்கொண்டே இருக்கிறேன்,” என்று அவர் சோஷியல் ஸ்டோரியிடம் கூறினார்.
ஓராண்டுக்கு முன்பு, கிராமத்தில் சட்டவிரோத மது விற்பனையை கட்டுப்படுத்த முடிவு செய்தார். உள்ளூர் காவல்துறையினரிடம் கோரிக்கை அளித்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாததால், அவர் கிராம மக்கள் குழுவை வழிநடத்தி மதுவை கைப்பற்றினார்.
மேலும், அவர் பஞ்சாயத்து தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு, பழங்குடியின கிராமமான பூட்கபாடாவில் உள்ள மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய நேரத்தில் ஓய்வூதியம் கிடைப்பதில்லை என்பது தெரிய வந்துள்ளது. கிராமத்தில் சாலை வசதிகள் ஒழுங்காக இல்லாததால் இப்பகுதியானது பிற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டது.
அதனால், கிராமத்தினர் தொலைதுாரம் பயணித்து ஓய்வூதியம், மருந்து போன்ற வசதிகளை பெரும் நிலையில் இருந்தனர். இதனை கவனித்து வந்த சரோஜ் தேவி, ட்ரோன் மூலம் முதியவர்கள் மற்றும் உடல் ஊனமுற்றோருக்கான ஓய்வூதியங்களையும், மருந்துகளையும் விநியோகித்தார்.
“ட்ரோன் மூலம் ஓய்வூதியம் வழங்கிய சம்பவம் உள்ளூர் மற்றும் தேசிய ஊடகங்களில் வெளியான பிறகு, அரசு அக்கிராமத்தில் சாலை சாலையை அமைத்தது. ஒரு அங்கன்வாடியை அமைக்கப்பட்டது. குடிநீர் வசதியினை ஏற்பாடு செய்தது. இதன்மூலம் கிராமத்தில் வசிக்கும் 100 பேரின் வாழ்க்கை பெரிதும் மேம்பட்டுள்ளது,” என்று பெருமிதத்துடன் கூறினார் சரோஜ் தேவி.
சரோஜ் தேவி பதவியேற்றதும் அவர் எதிர்கொண்ட மற்றொரு சவால், அரசுப் பதிவேடுகளில் கிராமங்களில் உள்ள முதியவர்களின் பெயர்களும் அவர்களது வயதும் பொருந்தாதிருந்துள்ளது. இதனால் முதியோர் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம் உட்பட பல்வேறு அரசுத் திட்டங்களின் மூலம் கிடைக்கும் நிதியுதவி கிடைப்பது தடைபட்டது.
அவரது தொடர் முயற்சியால், 200க்கும் மேற்பட்டோர் இப்போது வழக்கமான மாதாந்திர ஓய்வூதியத்தைப் பெறுகின்றனர். மேலும், கிராம சபை கூட்டங்களில் மிகக் குறைவானவர்களே கலந்துகொள்வதையும், அதனால், பல பிரச்சனைகள் மற்றும் சவால்கள் கவனிக்கப்படாமல் போவதையும் கவனித்தார். அதற்கு, தீர்வு காண எண்ணிய சரோஜ் தேவி பஞ்சாயத்து அலுவலகத்தை வீட்டு வாசலுக்கு கொண்டு செல்ல முடிவு செய்தார்.
“கிராம சபை கூட்டங்களுக்கு மக்கள் குறைவாகவே கலந்து கொள்வதால், 20 குடும்பத்தார் கூடும் வகையில் கிராம சதுக்கத்தில் கூட்டங்களை ஏற்பாடு செய்தோம். ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று, ‘வாசலில் பஞ்சாயத்து தலைவர்’ எனும் முயற்சியில் ஒவ்வொரு குடும்பத்தின் பிரச்சனைகளையும் கேட்டறிந்து புரிந்துகொள்கிறோம்,” என்று கூறினார் அவர்.
கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உரிய நேரத்தில் அங்கன்வாடி பொருட்கள் கிடைக்கப் பெறுவதற்காக அங்கன்வாடி ஊழியர்களுடன் மாதாந்திர கூட்டங்களை நடத்துகிறார். பஞ்சாயத்தில் பத்தாம் வகுப்பு வரை மட்டும் இருந்த அரசுப் பள்ளியினை பன்னிரெண்டாம் வகுப்பு வரை நீட்டிப்பதற்காக பிரச்சாரம் செய்தார்.
மேலும், கிராமத்தில் யாருக்கெனும் ஒரு பெண் குழந்தை பிறந்தால், அக்குடும்பத்தின் நிலத்திலோ அல்லது அக்குடும்பத்தின் பெயரில் நிலம் இல்லை என்றால், பஞ்சாயத்தின் வளாகத்திலோ 50 பழ மரங்களை பஞ்சாயத்து சார்பில் நடப்படுகிறது. முன்னதாக, கிராம மக்கள் அவர்களது ஓய்வூதியத்தை எடுக்க 50 கி.மீ தூரம் பயணித்து வங்கிக்கு செல்ல வேண்டியிருந்தது. பின், சரோஜ் தேவியின் தலையீட்டால் பஞ்சாயத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் மினி கிளை திறக்கப்பட்டது.
சுற்றுசூழலுக்கு கேடுவிளைவிக்கும் பிளாஸ்டிக்கின் பயன்பாட்டை குறைப்பதற்கான முயற்சியில் இறங்கிய சரோஜ் தேவி, கிராம மக்கள் மற்றும் பஞ்சாயத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட நிதியில், ‘பாத்திர வங்கி’யை தொடங்கினார்.
“கிராமத்தார் வீட்டில் விசேஷம் என்றால் மக்கள் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் ஒருமுறை தூக்கி எறியும் தட்டுகள் மற்றும் கரண்டிகளை மக்கள் பயன்படுத்தி வந்தனர்.
“ஒருமுறை, கால்நடை மருத்துவர் பசுவின் வயிற்றில் இருந்து 2 கிலோ பிளாஸ்டிக்கை அகற்றினார். அந்த தாக்கித்தினால் பாத்திர வங்கியை திறக்க முடிவெடுத்தோம். பாத்திர வங்கி மூலம், கிராம மக்கள் 1,000 பேர் வரையிலான விழாக்களுக்கு தேவையான பரிமாறும் பாத்திரங்கள் மற்றும் சமையல் பாத்திரங்களை கடனாக பெறலாம்,” என்றார்.
கிராம பஞ்சாயத்து அதன் குடியிருப்பாளர்களுக்கு, குறிப்பாக முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக இ-ரிக்ஷாவை இயக்குவதற்கான அனுமதி தற்போது பெற்றுள்ளது. இது அவர்கள் வங்கி, பஞ்சாயத்து அலுவலகம் அல்லது பொது சுகாதார மையத்திற்கு செல்ல உதவியாக இருக்கும். இது அவர்கள் வங்கி, பஞ்சாயத்து அலுவலகம் அல்லது பொது சுகாதார மையத்திற்கு (PHC) செல்ல உதவும். அவரது பயணத்தில் உள்ள சவால்களைப் பற்றி கேட்டபோது,
“பேசுபவர்கள் பேசிக் கொண்டே இருப்பார்கள். நான் கேட்டுக் கொண்டே இருந்தால், மக்களுக்கு எப்படி சேவை செய்ய முடியும்?,” என்று பதிலளித்தார்.
சரோஜ் தேவியின் பணிகளுக்கு அவரது குடும்பத்தாரும் முழு உதவி அளித்துள்ளனர். அவரது மகனும் மகளும் அவருடன் களப்பயணங்களுக்கு செல்கிறார்கள் மற்றும் அவருக்கு டுவிட்டர் தளத்தை இயக்க உதவுகிறார்கள். விரைவான தீர்வுக்களுக்காக அரசாங்க அதிகாரிகளின் கணக்கை இணைத்து ட்வீட் செய்கிறார்.
“நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவர் இல்லை. எனது மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்வதே எனது நோக்கம்,” என்று கூறிமுடித்தார் சரோஜ்தேவி.