Contact Information

JKrish Pvt Ltd, AIC Raise, Rathinam Techzone, Eachanari, Coimbatore. Tamilnadu - 641 021.

We Are Available 24/ 7. Call Now.

இளம் தலைமுறைக்கு சுற்றுச்சூழலுடன் இணைந்த வாழ்வை கற்பிக்கும் வேளாண் ஆசிரியை!

38 வயதில் சுற்றுச்சூழல் துறையில் பணியாற்றுவதற்காக ஒரு லாபகரமான கார்ப்பரேட் வாழ்க்கையை விட்டு வெளியேறிய மாயா கணேஷ் இன்று, ஒரு பள்ளித் தோட்டத்திற்கு தலைமை தாங்குகிறார். அரிதான மற்றும் பூர்விக பழங்கள் மற்றும் காய்கறிகளை இயற்கை முறையில் வளர்க்க மாணவர்களுக்கு வழிகாட்டி அவர்களை மாற்றியமைப்பவர்களாக மாற ஊக்குவிக்கிறார். மறுஉற்பத்தி விவசாயத்தின் மூலம் தமிழக மாணவர்களிடம் நிலைத்தன்மை உணர்வை வளர்த்து வருகிறார்.

பள்ளி வளாகத்தில் வழக்கமாக மாணவ, மாணவிகள் என்ன செய்வார்கள்? பிரேக்கில் அங்கும் இங்கும் ஓடி திரிவார்கள்… அமைதியாக அமர்ந்து படிப்பார்கள்… அல்லது ஏதேனும் படிப்பு சார்ந்த செயலை செய்யும் மாணவர்களைதானே பள்ளி வளாகத்தில் காண முடியும். ஆனால்,ஏபிஎல் குளோபல் பள்ளி மற்ற பள்ளிகளைப் போல் இல்லை. கேம்பிரிட்ஜ் IGCSE பாடத்திட்டத்திற்காக அறியப்படும் இப்பள்ளி, அதன் மாணவர்களுக்கு வாழ்க்கை திறன்களை கற்பிப்பதில் கவனம் செலுத்துகிறது. அதன் ஒரு பகுதியாக வேளாண்மை மேற்கொள்ளும் வளாகத்தை கொண்டுள்ளது. மாணவர்கள் அங்கு விவசாயம் செய்கிறார்கள்.

ஜப்பானிய இயற்கை விவசாயி மசனோபு ஃபுகுவோகாவின் தத்துவத்தை பின்பற்றி, ஆசிரியர் மாயா கணேஷின் வழிகாட்டுதலால் விவசாய கலன்கள் ஏந்திய மாணவர்கள் பள்ளி வளாகத்தில், 200க்கும் மேற்பட்ட வகையான தாவரங்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட நாட்டு பல்லுயிர் மரங்கள் மற்றும் புதர்களை வளர்த்துள்ளனர்.

தோட்டத்தின் நன்மைகள் வசதியற்றவர்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலும், மாணவர்களுக்கு பகிர்வின் முக்கியத்துவத்தை கற்பிக்கவும், பள்ளி இப்போது அதன் விதைகள், செடிகள் மற்றும் மரக்கன்றுகளை சென்னையில் உள்ள அங்கன்வாடிகளுக்கு வழங்குகிறது. அங்கு மாயா தன்னார்வலர்களுடன் இணைந்து தோட்டங்களை உருவாக்குகிறார்.

கணினி டூ கலப்பை…

எம்பிஏ பட்டம் பெற்று, 38 வயது வரை ஒரு வெற்றிகரமான கார்ப்பரேட் வாழ்க்கையை தொடர்ந்த மாயா கணேஷிற்கு சுற்றுசூழல் மீது எப்போதும் குறையா ஆர்வம் இருந்தது. 1995-ம் ஆண்டு இளங்கலைப் படிப்பை முடித்தபோது தான் மாயா அவருக்குள் இருந்த ஆர்வத்தை கண்டறிந்தார். அதற்கு காரணம் ஐக்கிய நாடுகள் சபையின் துணை அமைப்பான சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டுக்கான உலக ஆணையத்தின் அறிக்கை. ப்ரூண்ட்லேண்ட் கமிஷனால் 1987ம் ஆண்டில் ‘எங்கள் பொதுவான எதிர்காலம்’ என்ற தலைப்பில் வெளியாகிய அறிக்கை உலகளாவிய சமூகத்திற்கான நிலையான வளர்ச்சியின் வரையறையை முன்வைத்தது.

“அந்த சமயத்தில் சுற்றுசூழல் துறை தொழில்ரீதியாக லாபகரமானதாக பார்க்கப்படவில்லை. அதனால், என்னால் அத்துறையில் தொழிலை அமைத்து கொள்ள முடியவில்லை. அனைவரும் செய்து கொண்டிருந்த ஒன்றையே நானும் செய்தேன். அது எம்பிஏ பட்டம். விளைவாய், கார்ப்பரேட் உலகுக்குள் முழ்கடித்து போனேன்” என்று சோஷியல் ஸ்டோரியிடம் கூறி நினைவு கூர்ந்தார் மாயா.

ஒரு வெற்றிகரமான கார்ப்பரேட் வாழ்க்கையை தொடர்ந்தபோதிலும், சுற்றுச்சூழல் பணியின் மீதான அவரது ஆர்வம் நீடித்தது. அதற்கு உயிரூட்டிது அவரது தாய் அளித்த ஊக்கம். “எனக்கு 38 வயதாக இருந்தபோது ‘நீ இப்போது அதைச் செய்தால் என்ன?’ என்று அம்மா கேட்டார்” என்ற மாயா அதுவே அவரது வாழ்க்கையின் திருப்புமுனை என்றார்.

ஆரம்பத்தில் இருந்து தொடங்க வேண்டும் என்பதால் முதலில் தயக்கம் காட்டினார். இறுதியில் இங்கிலாந்தில் சுற்றுச்சூழல் மற்றும் நிலையான வளர்ச்சியில் முதுகலைப் பட்டம் பெற்றார். நகர்ப்புற விவசாயம் மற்றும் அரசியல் சூழலியல் பாடமும், லண்டனில் செயல்பட்டுவந்த, குடியிருப்பாளர்கள் அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட நிலங்களில் அவர்களுக்கான உணவை வளர்த்துகொள்ள வழிவகுக்கும் அரசின் ஒதுக்கீட்டு முறை அவரை வெகுவாக கவர்ந்து அவரது ஆர்வத்தை மேலும் தூண்டியது. பின், கிழக்கு லண்டனில் சமூகம் சார்ந்த நிலையான முயற்சிகளில் மாயா தன்னை மூழ்கடித்தார்.

மாற்றத்தின் விதைகள்…!

கர்ப்பரேட் துறையிலிருந்து சுற்றுசூழல் துறைக்கு தொழில்ரீதியாக மாற்றம் செய்தபோது ஏற்பட்ட நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்த மாயா, ​​அவரது நண்பரது ஆலோசனையின் பேரில் 2016ம் ஆண்டு APL குளோபல் பள்ளியின் முதல்வர் கீதா ஜெகநாதனை சந்தித்தார். பள்ளித் தோட்டம் ஒரு இடைநிலைக் கற்றல் இடமாக இருக்கும் என்ற யோசனையை முன்மொழிய ஜெகநாதனின் அலுவலகத்திற்குள் நுழைந்தார்.

“இது ஒரு சிகிச்சை முறையாகவும், சமூகம் சார்ந்ததாகவும், மறுஉற்பத்தி விவசாய நடைமுறைகள் மூலம் நிலைத்தன்மை குறித்து கற்பிப்பதற்கான வாய்ப்பாகவும் இருக்கும்” என்று அவரிடம் மாயா விரிவாக எடுத்துரைத்தார்.

ஆறு மாதங்களுக்குப் பிறகு, கீதாவிடமிருந்து மாயாவுக்கு அழைப்பு வந்தது. அவருடைய வளாகம் மாற்றப்படுவதாகத் தெரிவித்தார். மாயா அவர்களிடம் பள்ளியின் நிலப்பரப்பில் எவ்வித மாற்றமும் செய்ய வேண்டாம், பள்ளித் தோட்டத்தை மாணவர்களே உருவாக்கட்டும் என்றார். அதன்படி, இயற்கை வேளாண்மை குறித்து மாணவர்கள் கற்றுக்கொள்ளும் வகையில் “மறுஉற்பத்தி விவசாயத்தினை”- பாடநெறிக்கு அப்பாற்பட்ட பாடமாக கற்றுக் கொடுக்கும் திட்டத்தினை வடிவமைத்தனர்.

மறுஉற்பத்தி வேளாண்மை என்பது மண்ணின் ஆரோக்கியம், உணவுத் தரம், பல்லுயிர் மேம்பாடு, நீர் தரம் மற்றும் காற்றின் தரம் ஆகியவற்றை மேம்படுத்தல், இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டைக் குறைத்தல், உழவைக் குறைத்தல், கால்நடைகளை ஒருங்கிணைத்தல் மற்றும் மூடிப் பயிர்களைப் பயன்படுத்துதல் போன்ற முறைகள் மூலம் மேற்கொள்ளும் ஒரு முழுமையான வேளாண்மை முறையாகும்.

நிலைத்தன்மைக்கான கல்வி, திறந்த மகரந்தசேர்க்கை பயன்பாட்டை வலியுறுத்துதல், அதிக பல்லுயிர் பெருக்கத்திற்கு உதவும் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்க்கும் பரம்பரை விதைகளின் பயன்பாட்டை வலியுறுத்துதல் ஆகியவற்றை குறிக்கோளாக கொண்டு இம்முயற்சியை தொடங்கினர்.

“நாங்கள் ஏழாவது வகுப்பில் தொடங்கினோம். தற்போது மழலையர் பள்ளி முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்த செயல்பாடு இப்போது திறக்கப்பட்டுள்ளது. புதிதாகத் தொடங்கியதால் நிறைய வேலையாக இருந்தது, ஆனால் கொஞ்சம் உழைப்பால், தோட்டம் வடிவம் பெறத் தொடங்கியது.

2018ம் ஆண்டு ஜூலை மாதத்துக்குள், மாணவர்கள் இரண்டு வனத் திட்டுகளை உருவாக்கி, குழிகளைத் தோண்டி, உயிரிப்பொருட்களைச் சேர்த்து, பல்வேறு பயிர்களை நடவு செய்தனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த மாணவர்கள் அவர்களது வேலையின் பலனைப் பார்த்து பெருமிதம் அடைந்தனர்” என்று அவர் தெரிவித்தார்..

“ஊதா பீன்ஸ் மற்றும் புஷ் பீன்ஸ் உட்பட பல வகையான பீன்ஸ் வகைகளை வளர்க்கிறோம். தமிழகத்தில், கருங்காணி பருத்தி மற்றும் இன்னும் தனித்துவமான பழுப்பு மற்றும் பச்சை நிற பருத்தி வகைகள் இருக்கின்றன. விதை சேமிப்பின் மூலம் இந்த பாரம்பரிய ரகங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தினை மாணவர்களுக்குக் கற்பித்து, பல்லுயிர் பெருக்கத்தின் மதிப்பை அவர்கள் புரிந்துகொள்ள செய்கிறோம்.

2019ம் ஆண்டு முதல், தோட்டம் விரிவடைந்துள்ளது. மேலும், திட்டம் நிதி ரீதியாகவும் தன்னிறைவு பெற்றுள்ளது. மாணவர்கள் தங்கள் வகுப்புகளின் ஒரு பகுதியாக பயிர்களை அறுவடை செய்கிறார்கள். குழந்தைகள் அறுவடை செய்ததில் சிலவற்றை வீட்டிற்கு எடுத்துச் செல்கிறார்கள். அவர்களது தாய்மார்களும் மகிழ்ச்சியடைகிறார்கள். மேலும், விளைபொருட்களை பள்ளி சமூகத்திற்குள் விற்கின்றனர். ஆனால், இத்தோட்டமானது உற்பத்திக் கூடம் அல்ல. இது ஒரு கற்றல் இடம்” என்றார்.

மறு உற்பத்தி விவசாயம்; முன்னோக்கி செல்வதற்கான வழி!

“யூகலிப்டஸ் அல்லது ஆப்பிள்கள் மட்டுமே உள்ள இயற்கை காடுகளை நீங்கள் ஒருபோதும் காண முடியாது. மறுஉற்பத்தி விவசாயம், ஒற்றைப்பயிர் வளர்ப்பைப் போலன்றி, பல பயிர்களை ஒன்றாக வளர்ப்பதை உள்ளடக்கியது, இது மண்ணின் ஆரோக்கியத்தையும் பூச்சிகள் மற்றும் நோய்களுக்கு எதிராக மீள்தன்மையையும் பராமரிக்க உதவுகிறது.

ஒரு ஏக்கரில், உங்களால் 20 அல்லது 30 வெவ்வேறு பயிர்களை வளர்க்க முடியும். இந்த அணுகுமுறையால் ஒரே பயிரினை பெரிய அளவில் விளைச்சலை எடுக்க முடியாது என்றாலும், ஒட்டுமொத்த உற்பத்தித்திறன் அதிகமாக இருக்கும். மேலும் இது ஒரு நிலையான சுற்றுச்சூழல் அமைப்பை ஊக்குவிக்கிறது.

மறுஉற்பத்தி விவசாயத்தை லாபகரமானதாக மாற்ற பாரம்பரிய விநியோகச் சங்கிலிகளை விஞ்சுவதன் முக்கியத்துவத்தையும் மாயா வலியுறுத்துகிறார். “விளைபொருட்களை நுகர்வோருக்கு நேரடியாக விற்பனை செய்வதன் மூலம், விவசாயிகள் சிறந்த வருவாயை அடைய முடியும்” என்றார்.

Share:

administrator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *