பல்கலைக்கழகங்களில் பாடமாகும் கேரள தூய்மைப் பணியாளரின் புத்தகம்!
கேரளாவை சேர்ந்த துப்புரவுப் பணியாளரான தனுஜா குமாரி எழுதிய “செங்கல்சூலையில் என் வாழ்க்கை” எனும் புத்தகம், கோழிக்கோடு மற்றும் கண்ணூர் பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்டுள்ளது. அவர் தனது வாழ்க்கை மற்றும் போராட்டங்கள் பற்றி ஹெர்ஸ்டோரியிடம் பகிர்ந்தார்.
“எங்கள் மீது காட்டப்பட்ட பாகுபாடு
இன்று பல்கலைகழகங்களில் பாடம்…”
திருவனந்தபுரத்தில் உள்ள குடிசைப் பகுதியான செங்கல் சூலா காலணியில் (தற்போது ராஜாஜி நகர் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) பிறந்து வளர்ந்தவர் தனுஜா குமாரி. திடக் கழிவு மேலாண்மைக்காக கேரளாவின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு, கேரள உள்ளூர் நிர்வாகக் கழகத்துடன் இணைந்து நடத்தும் ‘ஹரித கர்மா சேனா’வில் தூய்மை பணியாளராக பணியாற்றுகிறார்.
ஒன்பதாம் வகுப்பை பாதியில் நிறுத்திய தனுஷாவிற்கு, வார்த்தைகளுடனோ அல்லது இலக்கியங்களுடனான தொடர்பு வெகுகுறைவு. ஆனால், அவருக்கு எழுதும் பழக்கம் உண்டு. கொல்லத்தில் உள்ள CSI குடியிருப்புப் பள்ளியில் 4 முதல் 6 ஆம் வகுப்பு வரை படிக்கும் போதே, அவருடைய நாளைப் பற்றி எழுதி வந்தார். அங்கு தொடங்கிய அவரது எழுத்து பழக்கம் அவரை ஒரு எழுத்தாளராக்கியுள்ளது.
ஆம், செங்கல் சூலாவில் அவரது வாழ்க்கையையும், அவரது அனுபவங்களையும் தொகுத்து புத்தகமாக எழுதியுள்ளார். ‘செங்கல்சூலைவில் என் வாழ்க்கை’ (Chenkalchoolayile Ente Jeevitham) எனும் அவருடைய புத்தகம் வெவ்வேறு உணர்ச்சிகளின் மொத்த குவியல். அவரது வாழ்க்கையின் அனுபவங்கள் இன்றைய தலைமுறையினருக்கான ஊக்கமிகு கதை. அதனால் தான், அவருடைய புத்தகம் கேரளாவின் மிகப்பெரிய பல்கலைக்கழகமாக விளங்கும் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில், எம்ஏ பாடத்திட்டத்தில் ஒரு பகுதியாகவும், கண்ணூர் பல்கலைக்கழகத்தில் பிஏ பாடத்திட்டத்தில் ஒருபகுதியாகவும் சேர்க்கப்பட்டுள்ளது.
“எங்கள் மீது காட்டப்பட்ட பாகுபாட்டை இன்று பல்கலைகழகங்களில் பாடமாக படிக்கின்றன. இது சற்று ஆறுதல் அளிக்கிறது. என்னுடைய நாளில் நிகழ்வதை எழுத ஆரம்பித்தேன். என் கஷ்டங்கள், துக்கங்கள், மகிழ்ச்சியின் வழிதவறிய தருணங்களைப் பற்றி எழுதுவேன். நான் என்ன உடுத்தினேன், என்ன சாப்பிட்டேன், எங்கு சென்றேன் என்று எழுதுவேன். 15 வயதில் என் கணவருடன் ஓடிப்போன தருணத்தைப் பற்றி எழுதுவேன்.“
தொடர்ந்து எழுதிக்கொண்டே இருந்தேன். புத்தகங்களின் பின்புறம், செய்தித்தாள்கள் அல்லது கையில் எந்த காகிதத் துண்டு கிடைக்கிறதோ அதில் எழுதுவேன். ஆனால், அதை எதையும் நான் சேமித்து வைக்கவில்லை. எழுதி முடித்தவுடன் எழுதிய அனைத்தையும் தூக்கி எறிந்துவிடுவேன் அல்லது எரித்துவிடுவேன். ஏனென்றால், நான் அவற்றை வைத்திருக்க வேண்டும் என்றோ, என்றாவது ஒரு புத்தகம் எழுதுவேன் என்றோ எனக்குத் தெரியாது,” என்று அவர் நினைவு கூர்ந்தார்.
வார்த்தைகளாக உருவெடுத்த கோபம்…
செங்கல் சூலா வாழ்க்கை எல்லையற்ற துன்பங்கள் நிறைந்தது. சாதி, நிறம், மதம் ஆகியவற்றின் அடிப்படையிலான பாகுபாடு அதிகமாக இருந்தது. திருவனந்தபுரம் நவீன வசதிகளுடன், காலத்திற்கு ஏற்ப மாறுதல்களைப் பெற்றாலும், செங்கல் சூலாவிற்கு விடிவு காலம் பிறக்கப்படாமலே இருந்தது.
குடிசைப்பகுதிக்கு ஆராய்ச்சிக்காகவும், திட்டங்களுக்காகவும் வருபவர்கள், வந்து போன பின்னும் எவ்வித முன்னேற்றமும் அடையாமல் அப்படியே இருந்தால், அப்பகுதிவாசிகளுக்கு கோபம் உண்டாகுவது இயல்பு தானே. தனுஜாவிற்கும் அதே ஆத்திரமும் கோபமும் தான்.
இந்நிலையிலே, செங்கல் சூலாவில் ஏற்பாடு செய்யப்பட்ட எழுத்தாளர்கள் சந்திப்பின் போது, தனுஜா மலையாள எழுத்தாளர் பி.பி. சத்யனைச் சந்தித்தார். அவர் தனுஜாவின் கோபத்தை வார்த்தைகளில் மொழிபெயர்க்கும்படி வலியுறுத்தினார்.
“செங்கல் சூலாவில் எனது வாழ்க்கை அனுபவங்களைப் பற்றி ஒரு புத்தகம் எழுதச் சொன்னார். காலனியைப் பற்றி மக்கள் படிக்கும்போது, அது ஒரு சமூக விவாதத்திற்கு வழிவகுக்கும். மேலும், மாற்றத்திற்கு வழிப்பிறக்கும் என்றார்,” என்றார்.
அவருடைய முறைசாரா எழுத்துகளை புத்தகமாக வடிவமைக்க விசிலா என்ற எடிட்டரின் உதவியைப் பெற்றார். ஆனால், தனுஜா தன் குரலை – ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே படித்த ஒருவரின் மொழியிலே பிரதிபலிக்க வேண்டும் என்று தெளிவாகக் கூறினார்.
2014 ஆம் ஆண்டு சிந்தா புக்ஸ் மூலம் செங்கல்சூலையில் என் வாழ்க்கை என்ற பெயரில் புத்தகம் வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கிடையே, சுதந்திர தினத்தன்று கேரள ஆளுநர் ஆரிப் முகம்மது கான், தனுஜா குமாரி மற்றும் அவரது குடும்பத்தினரை ராஜ்பவனுக்கு விருந்தினர்களாக அழைத்தார்.
“கேரள ஆளுநரை சந்தித்தது பெருமையாக இருக்கிறது. அவர் என்னை ‘சக்திவாய்ந்த பெண்மணி’ என்று அழைத்து வரவேற்றார்,” என்று உற்சாகமாக பகிர்ந்தார்.