ஏக்கருக்கு ரூ.6 லட்சம் லாபம் – இயற்கை விவசாயத்தில் அசத்தும் முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தில் (ISRO) விஞ்ஞானியாக இருந்து, பிறகு கர்நாடகாவின் சாகனஹள்ளி கிராமத்தில் உள்ள புதுமையான ‘கரிம பேரீச்சம்பழ’ விவசாயியாக திவாகர் சன்னப்பா மாறியது அவரது மன உறுதி மற்றும் சுற்றுச்சூழல் மீதான அவரது பற்றுதலும் அக்கறை சம்பந்தப்பட்ட உணர்வெழுச்சியூட்டும் கதையாகும்.
சமூகப் பணியில் முதுகலைப் பட்டம் பெற்ற சன்னப்பா, தும்கூர் பல்கலைக்கழகத்தில் வருகை தரும் ஆசிரியராகப் பணியாற்றியவர். 2009-ல் இந்தப் பாதைமாற்றுப் பயணத்தைத் தொடங்கினார். இவரது இந்த மாற்றத்துக்குப் பின்னால் ஒரு புத்தகம்தான் இருந்தது என்றால் நம்ப முடிகிறதா?
ஆம், புத்தகம் மனிதர்களின் நடைமுறையில், சிந்தனையில் சட்டக மாற்றங்களை உருவாக்கக் கூடியது.
மசானோபு ஃபுகுவோகாவின் ‘ஒரு வைக்கோல் புரட்சி’ (Masanobu Fukuoka’s ‘One Straw Revolution’) என்ற புத்தகம்தான் இந்த முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானிக்கும் கிரியா ஊக்கியாக திகழ்ந்துள்ளது. ரசாயன வேளாண் முறைகளுக்கு மாற்றாக இயற்கை விவசாயத்தை ஆதரிக்கும் நூலாகும் அது.
குடும்ப எதிர்ப்பை மீறி…
பெரிய விஞ்ஞானியாக இருந்து விட்டு விவசாயத்தை மேற்கொள்ளும் இவரது முடிவுக்கு இவரின் தந்தை உட்பட குடும்பத்தினர் அனைவரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். காரணம் என்னவெனில், இவரது தந்தை ராகி, சோளம் மற்றும் துவரம் பருப்பு விவசாயத்தில் தோல்வி அடைந்ததால் தன் மகனும் அந்தப் பாதையை தேர்ந்தெடுத்து விடக் கூடாது என்ற ஆதங்கம் அவருக்கு இருந்ததால் சன்னப்பாவின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டைப் போட்டார்.
ஆரம்பத்தில் வழக்கமான முறைகளைக் கடைப்பிடித்த சன்னப்பா விரைவில் பேரீச்சம்பழம் விவசாயத்தில் கவனம் செலுத்தினார். இது பெங்களூருவில் நடந்த கிருஷி மேளாவின் தாக்கத்தால் தமிழ்நாட்டில் பேரிச்சம்பழம் சாகுபடி பற்றி அறிந்தார். தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் உள்ள அவரது பகுதிக்கு இடையே உள்ள தட்பவெப்பநிலை ஒற்றுமைகள் இருந்ததால் இப்பகுதிக்கு ஒத்து வராத, வழக்கத்திற்கு மாறான பயிரை சாகுபடி செய்ய அவர் முன்வந்தார்.
2009-ஆம் ஆண்டில் 150 பர்ஹி பேரீச்சம்பழ மரக்கன்றுகளுக்கு 4.5 லட்ச ரூபாய் முதலீடு செய்து, 2.5 ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயத்தில் தனது முயற்சியைத் தொடங்கினார் சன்னப்பா.
கிடைத்த பலன்கள்…
2013-ல் அவரது முயற்சிக்கு பலன் கிடைத்தது. முதல் அறுவடையில் 650 கிலோ விளைந்தது. ஒரு கிலோ ரூ.375-க்கு விற்கப்பட்டது. இந்த ஆரம்ப வெற்றியானது அவரது பண்ணையான மராலி மன்னிகே (கன்னடத்தில் ‘மீண்டும் மண்ணுக்கு’ என்று பொருள்) பகுதியில் இயற்கை பேரிச்சை விவசாயத்தில் வெற்றிகரமான பயணத்தின் தொடக்கமாக அமைந்தது.
ஆகஸ்ட் 2023 வாக்கில், சன்னப்பாவின் பண்ணை 102 செடிகளாக வளர்ந்தது. ஒவ்வொன்றும் சுமார் 45 முதல் 50 கிலோ ஆர்கானிக் பர்ஹி பேரிச்சம்பழங்களை உற்பத்தி செய்தன. பருவத்தின் விளைச்சல் 4.2 டன். பண்ணையில் ஒரு கிலோ ரூ.310-க்கும், பெங்களூருவில் ஹோம் டெலிவரிக்கு கிலோ ரூ.350-க்கும் விற்கப்பட்டது. 60 செடிகள் கொண்ட ஒரு ஏக்கரில் 2700 கிலோ மகசூல் கிடைக்கும். அதாவது ரூ.8,10,000 வருவாய் மற்றும் கழிவுகளுக்குப் பிறகு சுமார் ரூ.6 லட்சம் நிகர லாபம் கிடைக்கும்.
சன்னப்பாவின் பண்ணையில் ஆண்டுதோறும் இரண்டு முறை அறுவடைத் திருவிழா நடத்தப்படுகிறது. இது, ஏராளமான பார்வையாளர்களை ஈர்ப்பத்தோடு நுகர்வோருக்கும் இயற்கை விவசாயத்திற்கும் இடையே நேரடி தொடர்பை வளர்க்கிறது.
ஆர்கானிக் நடைமுறைகள் மற்றும் நேரடி விற்பனையில் அர்ப்பணிப்புடனான இவரது அணுகுமுறை அவரது வெற்றிக்கு உதவியது.
சன்னப்பா தனது இயற்கை விவசாய முயற்சியில் பஞ்சகவ்யா மற்றும் ஜீவாமிர்தம் போன்ற அனைத்து பயிர் உள்ளீடுகளையும் இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தி தயாரித்து, நிலையான விவசாய மாதிரியை ஊக்குவிக்கிறார்.
பேரிச்சம்பழம் தவிர கரும்பு, ராகி, துவரம் பருப்பு, தினை மற்றும் உள்நாட்டு நெல் வகைகளையும் பயிரிடுகிறார். விவசாயத்தில் ஒரு மாறுபட்ட மற்றும் முழுமையான அணுகுமுறையை அவர் மேற்கொண்டார்.
சன்னப்பாவின் அர்ப்பணிப்பு விவசாயத்தைத் தாண்டி புதிய விவசாயத்திற்கான கல்வியிலும் சென்றது. அவர் பெங்களூரில் உள்ள உத்பவாஹா என்ற மாற்றுப் பள்ளியுடன் இணைந்து இயற்கை விவசாயக் கல்வியை அளிக்க மாணவர்களை தனது பண்ணைக்கு அழைக்கிறார். இதனால் மண்ணுக்கும் நிலையான விவசாயத்திற்கும் புதிய தலைமுறையின் தொடர்பை வளர்த்தெடுக்கிறார் இந்த முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானியான நடப்பு ஆர்கானிக் விவசாயி சன்னப்பா!