Contact Information

JKrish Pvt Ltd, AIC Raise, Rathinam Techzone, Eachanari, Coimbatore. Tamilnadu - 641 021.

We Are Available 24/ 7. Call Now.

Naturals ஐஸ்கிரீம் நிறுவனர் ரகுநந்தன் மரணம்- மாம்பழ வியாபாரி மகன் இந்தியாவின் ஐஸ்க்ரீம் மனிதராக உருவான கதை!

‘இந்தியாவின் ஐஸ்க்ரீம் மனிதர்’ என அழைக்கப்படும், நேச்சுரல்ஸ் ஐஸ்க்ரீம் நிறுவனத்தின் நிறுவனர் ரகுநந்தன் ஸ்ரீனிவாஸ் காமத் கடந்த வாரம் காலமானார்.

கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள முல்கி கிராமம் ஒன்றில் பிறந்தவர் ரகுநந்தன் ஸ்ரீனிவாச் காமத். இவரது தந்தை ஒரு மாம்பழ வியாபாரி என்பதால், சிறுவயது முதலே இயற்கையுடன் இணைந்து வாழும் வாழ்க்கை முறை இவருக்கு வாய்த்தது. தனது தந்தையின் வியாபாரத்தில் அவருக்கு உறுதுணையாக இருப்பது ரகுநந்தனுக்கு மிகவும் பிடித்தமான விசயம்.

மாம்பழங்களைப் பறிப்பது, அவற்றை ஒழுங்குபடுத்துவது, பின்னர் அவற்றை முறையாக பதப்படுத்துவது என தன் தந்தையின் வியாபாரத்தில் எல்லா நுணுங்கங்களும் அவருக்கு கை வந்த கலையாக இருந்தது.

மாற்றி யோசித்த ரகுநந்தன்

தனது 14 வயதில் பள்ளிப் படிப்பை நிறுத்திக் கொண்டு, தன்னை முழுமையாக தொழிலில் ஈடுபடுத்திக் கொள்ளத் தொடங்கினார் ரகுநந்தன். இதற்காக மங்களூருவில் இருந்து மும்பை சென்ற அவர், அங்கு தனது சகோதரரின் உணவகத்தில் வேலை பார்க்கத் தொடங்கினார். அங்குதான் சொந்த ஐஸ்கிரீம் தயாரிக்கும் தொழிலின் அறிமுகம் அவருக்குக் கிடைத்தது. அந்த ஐஸ்கிரீம்களில் பழ எசன்ஸ்களைக் கலக்காமல், நிஜ பழங்களையே சேர்த்து வாடிக்கையாளர்களுக்கு புதிய சுவையை அவர் அறிமுகப்படுத்தினார்.

அதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே, ஒரு கட்டத்தில் தானே இந்த உணவுத் தொழிலில் தனித்து இயங்க முடியும் என்ற நம்பிக்கை அவருக்கு உண்டானது. அதன் தொடர்ச்சியாக, 1984ம் ஆண்டு ஜூஹுவில் தனியாக ஐஸ்கிரீம் பார்லர் ஒன்றைத் தொடங்கினார். ஆறு ஊழியர்களுடன் தொடங்கப்பட்ட அந்தக்கடையின் ஆரம்பகால மெனுவிலேயே சுமார் 12 சுவைகளோடு கூடிய ஐஸ்கிரீம்கள் இடம்பெற்றிருந்தன.

“ஐஸ்க்ரீம்களில் பழங்களின் சுவையைச் சேர்க்கும் நாம், ஏன் உண்மையான பழங்களையே சேர்க்கக் கூடாது என யோசித்தேன். அப்படி உருவானவைதான் எனது ஐஸ்கிரீம்கள். இந்த யோசனை நன்றாக இருந்தாலும், வாடிக்கையாளர்கள் வருவார்களா என்ற குழப்பம் ஆரம்பத்தில் இருக்கத்தான் செய்தது. எனவே, பாவ்-பாஜியை முக்கிய உணவாகவும், ஐஸ்க்ரீமைக் கூடுதல் உணவாகவும் வழங்கத் தொடங்கினேன்” என தனது ஆரம்பகால வாழ்க்கை குறித்து பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் ரகுநந்தன்.

ஐஸ்கிரீம் சாம்ராஜ்ஜியம்

அவர் எதிர்பார்த்தது போலவே, அவரது இந்த நிஜ பழங்கள் கலந்த ஐஸ்கிரீம் என்ற ஐடியா நல்ல லாபத்தைக் கொழிக்கும் தொழிலாக மாறியது. முதல் கிளையில் நன்றாக வியாபாரம் நடந்த போதிலும், உடனடியாக அவர் அடுத்தடுத்த கிளைகளை ஆரம்பிக்கவில்லை. சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 1994ம் ஆண்டு அடுத்தடுத்து நான்கு கிளைகளை அவர் ஆரம்பித்தார்.

தற்போது மகாராஷ்டிரா, கர்நாடகா என பல மாநிலங்களில், சுமார் 40 நகரங்களில் 150-க்கும் மேற்பட்ட ‘நேச்சுரல்ஸ் ஐஸ்க்ரீம்’ அவுட்லெட்டுகள் செயல்படுகின்றன. நேச்சுரல்ஸ் ஐஸ்க்ரீம் நிறுவனத்தின் மதிப்பு ரூ.400 கோடி ரூபாய் என மதிப்பிடப்படுகிறது.

மாம்பழ வியாபாரியின் மகனாகப் பிறந்து, போதிய படிப்பறிவு இல்லாத போதும், தனது அனுபவ அறிவால் தனக்கென ஒரு ஐஸ்கிரீம் சாம்ராஜ்ஜியத்தை அமைத்த, ரகுநந்தனின் வெற்றிக் கதையை மும்பையைச் சேர்ந்த பத்திரிகையாளர் பூஜா ஃபூலா `Intelligent Fanatics of India’ என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார். ஐஸ்கிரீம் உலகின் புதிய புரட்சியைக் கொண்டு வந்ததால், அவரை இந்தியாவில் ஐஸ்கிரீம் மனிதர் என மக்கள் இன்றளவும் கொண்டாடி வருகின்றனர்.

தற்போது 74 வயதான ரகுநந்தன், சமீபகாலமாக வயோதிகம் காரணமாக உடல்நலப் பிரச்சினைகளில் அவதிப்பட்டு வந்தார். இதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த அவர், சிகிச்சைப் பலனின்றி கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதனை அவரது நேச்சுரல்ஸ் ஐஸ்க்ரீம் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த சோக செய்தி கேட்ட ஐஸ்கிரீம் பிரியர்கள், ரகுநந்தனின் மறைவுக்கு தங்களது ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

ரகுநந்தனின் மறைவு குறித்து பூஜா கூறுகையில்,

“ரகுநந்தன் ஸ்ரீனிவாஸ் காமத் அவர்களின் மறைவு வருத்தமளிக்கிறது. குல்ஃபிகள் ஆட்சி செய்தபோது, ​ஐஸ் க்ரீம்கள் உணவகங்களில் ஆடம்பரமாக இருந்தன. மேலும், இயற்கையான பழங்கள் கலந்த ஐஸ்க்ரீம்கள் அரிதானவையாகவே இருந்தன. அதைப் பெருவாரியான மக்களிடம் கொண்டு சேர்த்த பெருமை கொண்டவர்,” எனத்  தெரிவித்துள்ளார்.

Share:

administrator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *