பிளாஸ்டிக் ஒழிப்பு, வனவிலங்கு பாதுகாப்பு – தமிழ்நாட்டில் மாற்றங்களுக்கு வித்திடும் சுப்ரியா சாஹூ ஐஏஎஸ்!
நெகிழி பயன்பாட்டுக்கு அடிமையாகிப் போன மக்களை மீட்டெடுக்க, 20 ஆண்டுகளுக்கு முன்பே, ப்ளாஸ்டிக் ஏற்படுத்தும் தீங்கினை உணர்ந்தவர் ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாஹு. அவர் வித்திட்ட பல மாற்றங்கள் இன்று தமிழ்நாட்டில் முன்னோடியாக திகழ்கின்றது
நெகிழி..! எங்கும் நீக்கமற நிறைந்து, மனிதர்களின் அன்றாட வாழ்வில் ஒன்றிணைந்த பொருள்களுள் ஒன்றாகி விட்டது. இதன் பயன்பாட்டுக்கு அடிமையாகி போன மக்களை அதிலிருந்து மீட்டெடுக்க இன்று பலரும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்துகின்றனர். ஆனால், 20 ஆண்டுகளுக்கு முன்பே, பிளாஸ்டிக் ஏற்படுத்தும் தீங்கினை உணர்ந்தவர் ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாஹு. ஆம், அக்காலத்தில் நீலகிரி மாவட்ட கலெக்டராக அவர் பதவியேற்றபோதே, நெகிழி பயன்பாட்டிற்கு எதிரான பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார்.
அங்கு தொடங்கி சமீபத்திய மீண்டும் ’மஞ்சப்பை’ பிரச்சாரம் வரை நெகிழி பயன்பாட்டிற்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளரும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தலைவருமான சுப்ரியா சாஹூ.
மனித-விலங்கு மோதல், வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரம் என 32 கால வாழ்க்கையில் கடந்து வந்த சுவடுகளை யுவர் ஸ்டோரிக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார் சுப்ரியா.
“இருபத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கை தடை செய்ய வேண்டும் என்று யாரும் குரல் எழுப்பவில்லை. அப்போது, பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீங்கினை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதனை நடைமுறைப்படுத்தவும் தன்னார்வலர்கள் மற்றும் அதிகாரிகள் குழுவுடன் பிரச்சாரத்தைத் தொடங்கினேன். பல ஆண்டுகளுக்குப் பிறகு இன்றும், நீலகிரியில் அதைப் பின்பற்றுவது மகிழ்ச்சியை அளிக்கிறது,” என்று யுவர் ஸ்டோரியிடம் பகிர்ந்து நினைவு கூர்ந்தார் அவர்.
1999ம் ஆண்டு முதல் 2002 வரையிலான காலகட்டத்தில் நீலகரியில் பணிபுரிந்ததை மறக்க இயலாது என்று கூறி அந்த அனுபவங்களை பகிரத் தொடங்கினார்.
“இயற்கையை அதனுடைய அழகிய வடிவில் பார்க்கும் வாய்ப்பை இந்த மாவட்டம் எனக்கு வழங்கியது. இது ஒரு பல்லுயிர் ஸ்தலமாகவும். பல பழங்குடியினரும், பூர்விக மக்களும் அங்கு வசிக்கின்றனர். அங்குள்ள மக்களிடையே கலாச்சாரம் மற்றும் மொழி வேறுபாடுகள் இருந்தபோதிலும் எளிமையானவர்களாகவும் பணிவானவர்களாகவும் இருந்தனர். அங்கு பணிபுரிந்தது ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது, என்றார்.
அச்சமயத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் நீலகிரி மக்களின் கூட்டு முயற்சியால், குருத்துக்குளி கிராமத்தில் 42,182 மரக்கன்றுகளை நட்டு கின்னஸ் சாதனை படைத்தோம். அங்கிருந்த காலகட்டத்தில் தான் அவர் இயற்கை, வனவிலங்குகள் இவை எல்லாவற்றிற்கும் மேலாக, குழுப்பணியின் சக்தியால் ஈர்க்கப்பட்டதாகக் கூறினார்.
இந்தியாவில் முதன்முறையாக நீலகிரி மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று கணக்கெடுக்கும் முயற்சியையும் சாஹு தலைமையேற்று நடத்தினார்.
“நாங்கள் ஒரு பட்டியலைத் தயாரித்து, வீடு வீடாகச் சென்று கணக்கெடுத்து மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் வீட்டு வாசலிலே சான்றிதழ்களை வழங்கினோம். இதனால் அவர்கள் நன்மைகளைப் பெற முடியும். பிளாஸ்டிக் எதிர்ப்பு பிரச்சாரமும் இந்த திட்டமும் ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டத்தால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன,” என்றார்.
1991ம் ஆண்டு முதல் தமிழ்நாடு கேடரின் ஒரு பகுதியாக இந்திய நிர்வாகப் பணியில் இணைந்தார். மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். பின்னர், வேலூர் மாவட்டத்தின் கூடுதல் ஆட்சியராகவும், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் நிர்வாக இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளார்.
வனவிலங்கு பாதுகாப்புக்கான புதிய பாதைகள்
2021ம் ஆண்டில், சாஹுவின் வாழ்க்கை முழுமை பெற்றது. ஆம், அவர் ஆர்வமாக இருக்கும் துறைகளான தமிழக சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறை துறயைின் கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்றதும், பாதுகாப்பிற்கான புதிய பாதைகளை பட்டியலிடுவது மற்றும் அதிக கவனம் பெறாத பகுதிகளின்மீது சாஹு கவனம் செலுத்தினார்.
பலமுறை களத்தை நேரில் சந்தித்துடன், முன்னணி தொழிலாளர்கள் மற்றும் நிபுணர்களுடன் பணிபுரிந்த பிறகு, அவர் ஒரு புதிய பாதுகாப்பு சகாப்தத்தை உருவாக்க விரும்பினார். இரண்டு ஆண்டுகளில் அது நம்பமுடியாத விளைவுகளை அளித்தது. வலுவான அரசியல் விருப்பம் மற்றும் செயலூக்கமான உத்தியோகபூர்வ இயந்திரத்தின் காரணமாக மட்டுமே இது சாத்தியமானது என்று அவர் கூறுகிறார்.
“20 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய யானைகள் காப்பகமான அகஸ்தியமலை யானைகள் காப்பகத்தை உருவாக்க முடிந்தது. நம் ராம்சார் தளங்களின் எண்ணிக்கையும் ஒன்றிலிருந்து 13ஆக அதிகரித்துள்ளது” என்றார் அவர்.
அவரது பதவிக்காலத்திலே அழிந்து வரும் உயிரினங்களான கடற்பசு மற்றும் தேவாங்கு உயிரினத்தை காக்க மன்னார் வளைகுடாவின் பால்க் விரிகுடா பகுதியில் இந்தியாவின் முதல் துகோங் பாதுகாப்புக் காப்பகமும், கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களை உள்ளடக்கிய லோரிஸ் சரணாலயமும் அறிவிக்கப்பட்டன. நீலகிரி தஹ்ரின் பாதுகாப்பிற்காக இந்தியாவிலேயே முதன்முதலில் திட்டத்தைத் தொடங்கினார்.
மேலும், சட்டவிரோத விலங்கு வணிகம், வேட்டையாடுதல் மற்றும் பாதுகாக்கப்பட்ட விலங்குகள் பற்றிய பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழ்நாடு வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டுப் பணியகத்தை உருவாக்கினார்.
மனித-விலங்கு மோதலை குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இது ஒரு சவாலான பணி எனும் சாஹு மேற்கொண்டு கூறுகயைில்,
“வாழ்விடங்கள் பாதிக்கப்படுதல், நீர் பற்றாக்குறை, அதிகரித்த உயிரியல் அழுத்தம், சாலைகளின் வளர்ச்சி மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றால் மட்டுமே மோதல்கள் அதிகரிக்கும். ஏற்கனவே ஏற்பட்டுள்ள பாதிப்பை மாற்றியமைப்பதுதான் முதல் படி. நாங்கள் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வேளாண் வங்கியுடன் இணைந்து நீர்நிலைகளை மறுசீரமைத்தல், நீர்நிலைகளை உருவாக்குதல், மரங்கள் மற்றும் புற்களை நடுதல், வாழ்விடங்களைப் பாதுகாத்தல் மற்றும் வேட்டையாடுவதை எதிர்த்துப் போராடுவதற்கான ரூ.490 கோடி திட்டத்தில் பணிபுரிந்து வருகிறோம்,” என்று அவர் விவரித்தார்.
இரண்டாவது படி, தொழில்நுட்பத்தை திறம்பட பயன்படுத்தி சமூகத்தை முன்கூட்டியே எச்சரித்து, மனித இறப்புகளை தடுப்பதாகும்.
“நாங்கள் உள்ளூர் சமூகங்களுக்குள் வாட்ஸ்அப் குழுக்களை அமைத்துள்ளோம். அதில் வேட்டையாடுதல் தடுப்பு கண்காணிப்பாளர்களும், வன அதிகாரிகளும் செய்திகளை வெளியிடுகிறார்கள். வால்பாறையில், சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து, சென்சார்-ஆக்டிவேட் செய்யப்பட்ட எச்சரிக்கை விளக்குகளை பொருத்தியுள்ளோம். விலங்குகள், மனித-விலங்கு மோதல்கள் பற்றி பேசுகையில் அவற்றின் உயிர் இழப்புகள் பற்றி பேசுவதும் அவசியம்.
”கோயம்புத்தூரில் உள்ள மதுக்கரை போன்ற இடங்களில் யானைகள் ரயில் தண்டவாளத்தில் தவறி விழுந்து அடிபடும் இடங்களில் ஏஐ மற்றும் எம்எல் அடிப்படையிலான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறோம். ரயில்வேயுடன் இணைந்து, யானைகள் தண்டவாளத்தில் வராத வகையில் நிலத்தடி பாதைகளை உருவாக்கி வருகிறோம். ரயில் ஓட்டுனரை முன்கூட்டியே எச்சரிக்கும் கண்காணிப்பு பொறிமுறையையும் அமைத்து வருகிறோம்,” என்றார்.
கூடுதலாக, ட்ரோன்கள் மற்றும் சங்கிலி இணைப்பு வேலிகளும் செயல்பாட்டில் பயன்படுத்தப்படுகின்றன. பயிர் இழப்பு மற்றும் விலங்குகளால் ஏற்பட்ட உயிர் இழப்பிற்காக கடந்த ஆண்டு இழப்பீடாக ரூ.11.5 கோடி வழங்கப்பட்டதாகவும் அவர் பகிர்ந்தார்.
வேண்டாம் பிளாஸ்டிக் பை; மீண்டும் மஞ்சப்பை!
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக நிலையானதும், பாரம்பரியமானதுமான மஞ்சள் பைகளை பயன்படுத்த வைக்க ‘மீண்டும் மஞ்சள் பை’ திட்டம் முன்னெடுக்கப்பட்டது. கடந்த ஆண்டு சென்னை கோயம்பேடு மொத்த விற்பனை சந்தையில் மஞ்சப்பை விற்பனை இயந்திரங்களை நிறுவிய போது, மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரத்தை அவர் தொடங்கினார். இன்று, மஞ்சள் பை ஏடிஎம் நாடு முழுவதும் பிரபலமடைந்து நாட்டின் பல மாநிலங்களிலும் தைலா ஏடிஎம் அல்லது துணிப் பை ஏடிஎம் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
“மஞ்சள் பை நிகழ்காலத்திற்கு ஏற்ற சரியான யோசனை என்று நினைக்கிறேன். மீண்டும் மஞ்சள் பை திட்டமானது ‘குறைத்தல், மறுசுழற்சி செய்தல், மீண்டும் பயன்படுத்துதல்’ என்ற கருத்தை ஊக்குவிப்பதுடன், இது ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கின் கலாச்சாரத்திற்கு எதிரான வலுவான அடையாளமாகும். பல நூற்றாண்டுகளாக தமிழக மக்கள் மஞ்சப்பையினை பயன்படுத்தி வருகின்றனர். இது ஒரு எளிய ஆனால் தாக்கத்தை ஏற்படுத்தும் தீர்வாகும்,” என்றார்.
பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதிலும், நிலைத்தன்மையை மேம்படுத்துவதிலும் பெண்கள் பெரும் பங்கு வகிக்கிறார்கள் என்று சாஹு நம்புகிறார்.
“தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பெருக்கத் தளமான அரிட்டாப்பட்டியில் உள்ள பஞ்சாயத்துத் தலைவரான 80 வயதான வீரம்மாள் பாட்டியாக இருந்தாலும் சரி, அல்லது பெருமையுடன் மஞ்சப்பை வைத்திருக்கும் பெண்களாக இருந்தாலும் சரி, பெண்களே வழி நடத்துகிறார்கள். ஒவ்வொரு முறையும், அத்தகைய நம்பமுடியாத பெண்களைப் பார்க்கிறேன் அல்லது அவர்களைப் பற்றி கேள்வி படுகிறேன். அவர்களை பற்றி சமூக ஊடகங்களிலும் பதிவிடுகிறனே், அதனால் மற்றவர்களும் உத்வேகம் பெற முடியும்,” என்று கூறி முடித்தார் சாஹு.