வறுமையில் இருந்து ‘ராயல்’ வாழ்க்கை வரை – பர்னீச்சர் துறையில் ரூ.400 கோடி பிரான்ட் உருவாக்கிய இளைஞர்!
பர்னீச்சர் நிறுவனமான ராயல் ஓக்கின், பயணம் மூடப்படும் நிலையில் இருந்து மீண்டு, இந்தியா முழுவதும் அறியப்படும் ரூ.400 கோடி பிராண்டாக வளர்ச்சி அடைந்து வியக்க வைக்கிறது.
2010ல் நிறுவப்பட்ட உள்நாட்டு பர்னீச்சர் பிராண்டான ‘ராயல் ஓக்’ (Royal Oak) இந்தியாவின் முன்னணி பர்னீச்சர் பிராண்ட்களில் ஒன்றாக விளங்கும் பாதையில் முன்னேறி வருகிறது.
இந்தியாவின் ஸ்டார்ட் அப் தலைநகரும், தொழில்நுட்ப முதலீட்டில் உலக அளவில் ஐந்தாவது இடம் வகிக்கும் பெங்களூருவில் துவக்கப்பட்டாலும், நிறுவனம் சுயமாக திரட்டிய நிதி கொண்டு செயல்பட்டு வருகிறது. பெப்பர்பிரை, அர்பன்லேடர்,வேக்பிட் போன்ற வேகமாக வளர்ந்த பிராண்ட்களுடன் போட்டியிட வேண்டிய நிலையிலும் நிறுவனம் இந்த பாதையை பின்பற்றி வருகிறது.
ராயல் ஓக் நிறுவனமும், எப்போதோ வெளி நிதியை ஏற்றுக்கொண்டிருக்கலாம் என்றாலும், ஸ்டார்ட் அப்கள் செயல்படும் விதமே தடையாக இருந்ததாக நிறுவனர் விஜய் சுப்பிரமணியம் கூறுகிறார்.
“நான் வறுமையில் வளர்ந்தவன். ஒரு வர்த்தகத்தை உருவாக்குவதில் உள்ள கஷ்டங்களும், சவால்களும் தெரியும். ஸ்டார்ட் அப்கள் சந்தை மதிப்பில் கவனம் செலுத்துகின்றன. நான் அடிப்படை விழுமியங்களில் கவனம் செலுத்தி என் வர்த்தகத்தை நடத்த விரும்புகிறேன்,” என விஜய் எஸ்.எம்.பி ஸ்டோரியிடம் கூறினார்.
ஸ்டார்ட் அப்கள் தள்ளுபடி விற்பனையில் கவனம் செலுத்தும் நிலையில், ராயல் ஓக் இந்த அணுகுமுறையை கொண்டிருக்கவில்லை என்கிறார். மாறாக, தாங்கள் வழங்கும் பொருட்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தேவை பற்றிய புரிதலே முக்கியமாக அமைகிறது என்கிறார்.
“வாடிக்கையாளர்களை தள்ளுபடி அறிவிப்பால் ஈர்ப்பதில்லை. அவர்களுக்கு தேவையானதை கொடுக்கிறோம்,” என்கிறார். எனினும், அவரது வெற்றி ஓரிரவில் உண்டாகிவிடவில்லை. 20 ஆண்டுகள் கஷ்டப்பட்டு, ரூ.401 கோடி விற்றுமுதல் நிறுவனத்தை உருவாக்கியிருக்கிறார்.
வறுமையில் இருந்து..
கேரளாவின் மூணாறு பகுதியைச்சேர்ந்த விஜய், சாதாரண குடும்ப பின்னணியை கொண்டவர். 1995ல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த போது, உள்ளூர் கடைகளில் தேயிலை விற்று தன் படிப்பிக்கான பணத்தை சம்பாதித்தார்.
படிப்பை முடித்ததும் முதுகலை படிப்பில் சேர்ந்தாலும், குடும்பத்திற்கு வருமானம் ஈட்டுவதற்காக அதை விட்டுவிட்டார்.
“என்னிடம் கொஞ்சம் தான் பணம் இருந்தது. உறவினர் ஒருவர் சிங்கப்பூரில் வேலை வாங்கித்தருவதாக கூறி ஏமாற்றினார். என் பணம் எல்லாம் தொலைந்து போனது,” என்கிறார்.
அப்போது தான் விஜய் சிறிய நகரமான மூணாறை விட்டு வெளியேரிட தீர்மானித்து, பாலக்காட்டிற்கு சென்றார். ஸ்டாண்டர்டு சாட்டர்டு வங்கியில் கிரெடிட் கார்டு ஏஜென்ட்டாக வேலை பார்த்தார். நன்றாக வேலை செய்தாலும் சக ஊழியர்களை அதிருப்தியில் ஆழ்த்தியதால், அங்கிருந்து சென்னைக்கு வந்தார்.
“1997ல் சென்னை வந்தேன். வாடகை இடம் எடுத்திருந்தாலும் வேலை இல்லை. ஆனால், வாழ்க்கை ஒரு திட்டம் வைத்திருந்தது” என்கிறார்.
அரசு கண்காட்சி ஒன்றில் இருந்த காலி அரங்கை வாடகைக்கு எடுக்கத் தீர்மானித்தார். பணம் குறைவாக இருந்தாலும், அந்த அரங்கை 10 நாட்களுக்கு ரூ.2,800க்கு வாங்கினார். அங்கு பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தார். அவை விற்றுத்தீர்ந்தன.
தென்னிந்தியா முழுவதும் சென்று அரசு கண்காட்சிகளில் பங்கேற்கத்துவங்கினார். இப்படி தான் பெங்களூருவில் தங்க தீர்மானித்தார்.
“அப்போது நான் 20-களின் இறுதியில் இருந்ததால் குடும்பத்தினர் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினர். என்னிடம், சீரான வருமானம், அடையாளம் மற்றும் வீடு இல்லை,” என்கிறார்.
2001ல் பெங்களூரு சபினா பிளாசாவில் ஸ்டால் அமைத்தது திருப்பு முனையாக அமைந்தது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிரபலமாக இருந்த பேஷன் டெகார்ஸ் எனும் பெயரில் செயல்பட்டார்.
அப்போது, பிக்பாசார் தங்கள் சூப்பர் மார்க்கெட்டில் கடை அமைக்க அழைப்பு விடுத்தது.
“இது பெரிய வாய்ப்பு. ஆனால் வாடகையும் அதிகம். எனினும் துணிந்து ஏற்றுக்கொண்டேன். பிக்பசாருடன் வணிகம் செய்வது கடினமாக இருந்தாலும், அது என் தொழில் வாழ்க்கைக்கு உதவியது. இதற்குள், கார், வீடு வாங்கி திருமணமும் செய்து கொண்டேன். சொந்தமாக கடை துவக்கும் எண்ணமும் இருந்தது,” என்கிறார்.
ராயல் ஓக் துவக்கம்
2004ல், விஜய் ஓக் & ஓக் எனும் பெயரில் சிஎச்.எம் ஸ்டோரில் தனது முதல் கடையை திறந்தார். டிவி ஸ்டாண்டில் துவங்கி, பின்னர் ஸ்டூல்கள் மற்றும் பர்னீச்சர்களுக்கு மாறினார். உள்ளூர் உற்பத்தியாளர்களிடம் இருந்து பொருட்களை தருவித்தார். சீனா இறக்குமதி பொருட்களுக்கான தேவை அதிகரித்த போது, சவாலும், வாய்ப்பும் உண்டானது.
2005ல் உள்ளூர் மற்றும் இறக்குமதி பர்னீச்சர்களுக்கான சப்ளை செயினை உண்டாக்க வேண்டியிருந்தது. வர்த்தகம் வேகமாக வளர்ச்சி அடைந்தது. அவர் மொத்த விற்பனைக்கு விரிவாக்கம் செய்ததோடு, சீனாவில் இருந்து நேரடியாக இறக்குமதியும் செய்யத்துவங்கினார்.
2010ல் பசவந்தியில் இன்னொரு கடை அமைத்தார். இங்கு தான் ’ராயல் ஓக்’ பிறந்தது. ஆனால், பர்னீச்சர் பிராண்டை நிலைபெறச்செய்வது எளிதாக இல்லை. விதிமுறைகளைப் பின்பற்றுவது கடினமாக இருந்தது, கடையை மூட வேண்டிய நிலை உண்டானது.
“இது சினிமா போல இருந்தாலும், என் கஷ்டங்களை நினைத்துப்பார்த்த போது, ஊழியர்களை நினைத்து அவர்களுக்காக தொடர விரும்பினேன்,” என்கிறார்.
2015ல் ராயல் ஓக்கை மீண்டும் துவங்கினார். செயல்பாடுகளை சீராக்கி, சப்ளை செயினை வலுவாக்கினார். எட்டு ஆண்டுகளில் நிறுவனம் வளர்ச்சி அடைந்து, இந்தியா முழுவதும் 150 ராயல் ஓக் கடைகளை பெற்றுள்ளது. தவிர, ராயல் ஓக் இணையதளம் மற்றும் அமேசான், பிளிப்கார்ட் மூலமும் விற்பனை செய்கிறது.
“கர்நாடகாவின் முன்னணி பர்னீச்சர் பிராண்டாக இருக்கிறோம்,” என்று கூறும் விஜய், பெருந்தொற்றுக்கு முன், 50 கடைகள் இருந்தது மற்றும் ஊழியர்கள், குடும்பத்தின் ஆதரவு வளர்ச்சிக்குக் காரணம் என்கிறார்.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் ரூ.1,000 கோடி விற்றுமுதல் எட்டுவோம் என்கிறார்.
எதிர்காலத் திட்டம்
விஜயின் பயணம் அவரை பாரம்பரியத்தில் இருந்து நவீனத்திற்கு கொண்டு வந்துள்ளது. வர்த்தக உலகின் மாற்றங்களையும் கண்டு வருகிறார்.
“புதுயுக தொழில்முனைவோர் நன்றாக படித்துள்ளனர். தொழில்நுட்ப அறிவு மற்றும் புதுமையாக்கம் கொண்டுள்ளனர். அவர்களுடன் நான் போட்டியிடுவதில்லை. அவர்கள் என்னைவிட சிறந்து விளங்கினாலும், என் அனுபவ வலுவில் செயல்படுகிறேன்,” என்கிறார்.
முதலீட்டாளர்களிடம் இருந்து பல கோரிக்கைகள் வந்தாலும் தன் வர்த்தகத்தின் முழு கட்டுப்பாடு தேவை என்கிறார்.
“பர்னீச்சர் பிராண்ட்கள் துவக்க நிலையிலேயே எங்கள் விற்றுமுதலை மிஞ்சுவதை பார்த்தாலும், எனக்கு வருத்தம் இல்லை. நாங்கள் செயல்படும் வேகம் பிடித்தமாக இருக்கிறது,” என்கிறார்.
தொழிலாளர்களை தக்கவைப்பது மற்றும் மக்கள் வெளிநாட்டு பிராண்ட்களை விரும்புவது ஒரு சவால் என்கிறார்.
அடுத்த ஆண்டில் நாடு முழுவதும் 300 கடைகள், 200 பிரான்சைஸ் கடைகள் மற்றும் 5,000 வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் எனும் இலக்கை கொண்டிருப்பதாக கூறுகிறார்.