Contact Information

JKrish Pvt Ltd, AIC Raise, Rathinam Techzone, Eachanari, Coimbatore. Tamilnadu - 641 021.

We Are Available 24/ 7. Call Now.

அடக்க விலையில் ஆரோக்கிய உணவு – ‘Saladaa’ தொடங்கி மாதம் ரூ.5 லட்சம் ஈட்டும் சென்னை தம்பதி!

மில்லட் சாலட், கீட்டோ பன்னீர் சாலட், Low carb High fat சாலட், வெஜிடபிள் சாலட், ப்ரோட்டீன் சாலட், தானிய சுண்டல்கள் மற்றும் சூப்கள் என பார்த்து பார்த்து ரெசிபிகளை உருவாக்கி ஆரோக்கிய உணவுப் பட்டியலை உருவாக்கி இருக்கின்றனர் சென்னை தம்பதிகளான சிந்து மற்றும் விஜய்.

Saladaa ஸ்டார்ட் அப் மூலம் இவர்களின் ஆரோக்கிய உணவு சென்னை நகரவாசிகள் மட்டுமின்றி கார்ப்பரேட் நிறுவனங்களின் ஸ்நாக் நேரத்தையும் ஆரோக்கியமானதாக மாற்றி இருக்கிறது.

ஹோம் டியூட்டரான சிந்து, ’சாலட்டா’வை நிறுவியதன் பின்னணி மிகவும் சுவாரஸ்யமானது. தன்னுடைய உடல் எடையை குறைப்பதற்காக சாலட்களை சமைத்து சாப்பிட்டவர் அவற்றை நண்பர்கள், உறவினர்களுக்கும் கொடுக்க வரவேற்பு அதிகரிக்கவே அதையே ஒரு தொழிலாக மாற்றலாம் என்று எந்த முதலீடும் இல்லாமல் வீட்டின் சமையல் அறையில் இருந்து தன்னுடைய ஸ்டார்ட் அப் பயணத்தைத் தொடங்கி இருக்கிறார்.

“2015ல் எங்கள் வீட்டின் அருகில் டாக்டர் விஜயராகவன் என்று ஒரு மருத்துவர் இருந்தார். அவருடைய மருத்துவமனை முகப்பில் ஒரு பதாகை வைக்கப்பட்டிருந்தது. ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில் அரிசி, கோதுமை, பால் சாப்பிடக்கூடாது பன்னீர், பட்டர், சீஸ் சாப்பிடலாம் என்று அதில் இடம்பெற்றிருந்தது. இது மிக வித்தியாசமாக இருந்தது. ஏனெனில், பெரும்பாலானவர்கள் சீஸ், பட்டர் சாப்பிடக்கூடாது என்று தானே சொல்வார்கள் என்று நானும் என்னுடைய கணவர் விஜயும் நினைத்தோம்.”

அவருடைய ஒரு ஆலோசனை பயிற்சியில் பங்கேற்ற போது தான், Ketogenic டயட் என ஒன்று இருப்பதே தெரிய வந்தது, என்கிறார் சாலடாவின் இணை நிறுவனரான விஜய்.

”என்னுடைய மனைவி சிந்துவிற்கு உடல்பருமன் பிரச்னை இருந்து வந்தது பல விதமான டயட்கள் முயற்சித்து எதுவும் கைகொடுக்கவில்லை, கீடோ டயட்டை முயற்சித்த ஒரு மாதத்திலேயே இருவருக்கும் 35 கிலோ வரை உடல் எடை குறைந்தது. ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைப்பதை மற்றவர்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம்.”

ஆரோக்கிய உடல் எடை குறைப்பு

சிறு வயது முதலே நான் சற்று பருமனான உடல்வாகுடனே இருப்பேன். கல்லூரி காலம் முதலே உடலை குறைப்பதற்காக பல்வேறு விதமான டயட்களை பின்பற்றிக் கொண்டே இருந்தேன். 2009ல் என்னுடைய இடதுபுற கிட்னியின் செயல்பாடு சரியில்லை என்பதால் அறுவை சிகிச்சை செய்து அதனை அகற்றினார்கள். அப்போது மருத்துவர்கள் நான் எடை கூடாமல் இருக்கும்படியான டயட்களை பின்பற்றுவதற்கு அறிவுறுத்தினார்கள்.

ஆனால், அதற்கு பின்னர் உடல் எடை ஏறிக்கொண்டே இருந்தது, மகப்பேறின் போது சுமார் 20 கிலோ வரை என்னுடைய எடை கூடிவிட்டது.

”டெலிவரிக்குப் பிறகு 2 கிலோ மட்டுமே எடை குறைக்க முடிந்தது, அதற்கு மேல் எடையை குறைக்க முடியாமல் இருந்தது. அப்போது தான் டாக்டர் விஜயராகவனின் கீடோ டயட் ஆலோசனை பெற்றோம். எடைகுறைப்புக்கென்று தனியாக எந்த ஒரு வொர்க்அவுட்டும் செய்யவில்லை, வீட்டிலேயே யோகா செய்வது, ஆரோக்கியமான உணவை உட்கொள்வது என்று சரியான முறையிலேயே எடை குறைத்தேன்,” என்கிறார் சிந்து.

சொந்த சாலட் ரெசிபிகள்

எந்த டயட்டாக இருந்தாலும் அதில் காய்கறிகள் நிச்சயமாக இருக்கும். நாள் ஒன்றிற்கு ஒரு மனிதன் 300 கிராம் காய்கறிகளையாவது உட்கொள்ள வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். சாப்பாட்டை தயார் செய்வதற்கு எளிமையாகவும் அதே சமயம் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்றால் அதற்கு சாலட் தான் நல்ல தேர்வாக இருக்கும் என்று நினைத்தோம்.

”பிடித்தவிதத்தில் சாப்பிட வேண்டும் என்பதால் விதவிதமான சாலட்களை நாங்களே உருவாக்கினோம். அவற்றை நாங்கள் சாப்பிட்டதோடு நின்றுவிடாமல் எங்களுடைய நண்பர்களுக்கு கொடுத்தோம். நண்பர்கள், உறவினர்கள் என எங்களின் சாலட்களை சாப்பிட்டவர்கள் நன்றாக இருக்கிறது என்று தெரிவித்தனர். அவர்களிடம் இருந்து கிடைத்த வரவேற்றை அடுத்தே ஏன் இதையே ஒரு ஸ்டார்ட் அப் ஆக தொடங்கக்கூடாது என்கிற எண்ணம் எழுந்தது,” என்று சொல்கிறார் முதல் தலைமுறை தொழில்முனைவரான சிந்து.

சாலட்டா தொடக்கம்

தொழில்முனைவராவதற்கு முன்னர் சிந்து வீட்டில் இருந்தே கணிதம் கற்றுத்தரும் ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்தார். நான் வங்கி ஒன்றின் பிபிஓ செயல்பாடுகளை கவனித்து வந்தேன். தொழில்முனைவராக வேண்டும் என்கிற ஒரு எண்ணம் எனக்கும் சிறு வயது முதலே இருந்தது. ஆனால், எதைத் தொழிலாக எடுத்துச் செய்வது என்று தெரியாமல் இருந்தது. சாலட்க்கு கிடைத்த வரவேற்பை அடுத்து உணவுத் துறையையே தேர்ந்தெடுக்கலாம் என்கிற சிந்தனை எழந்தது.

சாலட்டை நாங்களே உட்கொண்டு அதில் நிறைய பலன்களை அனுபவித்தோம். எங்களைப் போலவே ஆரோக்கியத்தில் அக்கறை உள்ள நண்பர்கள் அவர்களுக்கும் சேர்த்து தினசரி சாலட் தயாரித்துக் கொடுக்கும்படி கேட்டதன் அடிப்படையில் வீட்டில் இருந்தபடியே அவர்களுக்கும் சாலட் தயாரித்துக் கொடுக்கத் தொடங்கினோம். நாளுக்கு நாள் இந்த எண்ணிக்கை அதிகரிக்கவே ஒரு கட்டத்தில் சாலட் விற்பனையையே தொழிலாகத் தொடங்கலாம் என்று முடிவெடுத்தோம்.

மேலும், உணவுத் துறை என்றால் பணம் சம்பாதிப்பதைத் தாண்டி பலருக்கும் ஆரோக்கியமான வாழ்வை பரிசளிக்கலாம் மேலும் அவர்களின் வாழ்த்துகளையும் பெறலாம் என்கிற ஒரு திருப்தியும் கிடைத்தது, என்று சொல்கிறார் விஜய்.

3 பேரில் இருந்து 300 பேர்

முதன்முதலில் செய்யும் தொழில்முனைவு என்பதால் பெருமளவில் பொருட்செலவு செய்யவில்லை, எங்களுடைய வீட்டின் ஒரு படுக்கை அறையையே கிட்சனாக மாற்றினோம், முதலில் 3 பேருக்கு மட்டுமே டெலிவரி செய்தோம். வாடிக்கையாளர்கள் அதிகரிக்கத் தொடங்கியதும் 2019ம் ஆண்டில் கிளவுட் கிச்சன் அமைத்து எங்களது தொழிலை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தினோம்.

முந்தைய நாள் இரவு 8 மணிக்குள் சாலட் ஆர்டரை செய்து விட வேண்டும். நாங்கள் மதிய உணவு மற்றும் இரவு உணவை சாலடாக தயாரித்து தருகிறோம். மதிய உணவு மதியம் 1 மணிக்குள் டெலிவரி செய்யப்பட்டுவிடும், இரவு உணவு மாலை 7 மணிக்குள் டெலிவரி செய்யப்படும். 6 விதமான சாலட்களை நாங்கள் மெனுக்களாக வைத்துள்ளோம்.

காய்கறிகளை மட்டுமே வைத்து சாலட், பன்னீர் சாலட், சிறுதானிய சாலட், கார்போஹைட்ரேட்ஸ் குறைவான சாலட், புரதச் சத்து நிறைந்த சாலட், பாதி வேகவைக்கப்பட்ட காய்கறி சாலட் இதனுடன் சூப் மற்றும் சுண்டல் உள்ளிட்டவற்றையும் டெலிவரி செய்கிறோம். சாலட்களை வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்பவும் சமைத்து தருகிறோம்.

2020ல் கோவிட் பெருந்தொற்று காலத்தில் பலரும் பச்சையாக காய்கறிகளை சாப்பிட பயந்ததால் ஓராண்டு நாங்கள் செயல்படவில்லை. 2021ல் மீண்டும் எங்களது டெலிவரியை தொடங்கினோம். 15 பேர் கொண்ட குழுவினர் உள்ளனர், செயல்பாடுகள் டெலிவரியை நான் பார்த்துக் கொள்கிறேன், மெனு மற்றும் கிச்சன் செயல்பாடுகளை சிந்து கவனித்துக் கொள்கிறார். தனி நபர்களுக்கான டெலிவரி தவிர்த்து கார்ப்பரேட் நிறுவனங்களின் ஸ்நாக் டைமை ஆரோக்கியமானதாக மாற்றும் வித்தில் அவர்களுக்கும் மொத்தமாக டெலிவரியும் செய்து வருகிறோம் என்று சொல்கிறார் விஜய்.

டெலிவரி கட்டணமும் சேர்த்து ரூ.180 முதல் ரூ.300 வரையிலான விலையில் சாலட்கள், சுண்டல் மற்றும் சூப்களை அளிக்கிறோம். இது தவிர புதிதாக 2 சிக்னேசர் டிஷ்களுக்கான ரெசிபிகளை நாங்களே உருவாக்கி இருக்கிறோம்.”

என்ன ஸ்பெஷல்?

பொதுவாக காய்கறிகளை தண்ணீரில் சுத்தம் செய்து பயன்படுத்துவோம். ஆனால், சாலட்டாவில் நாங்கள் காய்கறிகளை உப்பு தண்ணீரில் சுத்தம் செய்கிறோம், பிரக்கோலி மற்றும் காலிபிளவர் போன்றவற்றை வினிகர் மற்றும் உப்பு தண்ணீர் கலந்து சுத்தம் செய்கிறோம். அதன் பின்னர், சுடுதண்ணீரில் சிறிது நேரம் ஊறவைத்த பின்னர் காய்கறிகளை நறுக்குகிறோம்.

சௌ சௌ, கேரட், முட்டைகோஸ் என்று பச்சையாக சாப்பிடும் காய்கறிகள் மட்டுமல்ல வெண்டைக்காய், முள்ளங்கி, பீர்க்கங்காய் போன்றவற்றையும் பச்சையாக சாலட் தயாரித்துக் கொடுக்கிறோம். அதே போல, மையனோஸ் உள்ளிட்ட ஆரோக்கியமற்றவற்றை பயன்படுத்துவதில்லை, எண்ணெயும் கூட virgin ஆலிவ் எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெணை பயன்படுத்துகிறோம். சிலருக்கு பச்சை காய்கறிகள் பிடிக்காது அவர்களுக்கு பாதி வேகவைத்து அவற்றை சாலட்டாக தயாரித்து கொடுக்கிறோம்.

காலை 7 மணிக்கெல்லாம் கிச்சன் பணிகள் தொடங்கி 10 மணிக்குள் முடிந்துவிடும் அதன் பின்னர் மதிய உணவுக்கான டெலிவரி தொடங்கும், அதன் பின்னர், 12 மணி முதல் 4 மணி வரை இரவு உணவு டெலிவரிக்கான பணிகள் நடக்கும், மாலை 5 மணி முதலே டெலிவரி தொடங்கிவிடும்.

எப்படி ஆர்டர் செய்வது?

தனிவாடிக்கையாளர்களின் டெலிவரி தவிர இடைப்பட்ட நேரத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மொத்த டெலிவரிக்கான பணிகள் செய்யப்படும். தொடக்கத்தில் நாங்களே டெலிவரி செய்தோம் ஆனால், இப்போது மூன்றாவது நபர்கள் மூலமே டெலிவரி செய்கிறோம். https://saladaa.com/ இணையதளம் மூலமும் 72006 59000 என்கிற வாட்ஸ் அப் மூலமும் சாலட்டாவில் ஆர்டர் செய்யலாம். சாலட்டாவின் பிரத்யேக செயலி தயாரிப்பு நிலையில் உள்ளது.

வீட்டில் இருந்தே ஸ்டார்ட் அப்கை தொடங்கியதால் ஆரம்பத்தில் ரூ.30 முதல் ரூ. 40 ஆயிரம் வரை முதலீடு செய்தோம், 2021ல் மீண்டும் தொடங்கும் போது எங்களது உறவினர் முதலீடு செய்ய முன்வந்தார். அதனை வைத்து பெரிய அளவில் தொழிலை மறுதொடக்கம் செய்தோம்.

வடசென்னையில் அண்ணாநகர் வரையிலும் தென்சென்னையில் அடையாறு மற்றும் கே கே நகர் வரையிலும் தற்போது சாலட் டெலிவரி செய்யப்படுகிறது. வாடிக்கையாளர்களின் நற்சான்று மற்றும் சமூக ஊடகம் மூலமே அதிக வாடிக்கையாளர்களை பெற்றிருக்கிறோம்.

தினசரி சாலட் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை என்பது குறைவு தான், சாலட் போன்ற உணவை நீண்ட நாட்கள் subscription பிளான் எடுக்கமாட்டார்கள். டயட் விரும்புபவர்கள், 25 முதல் 55 வயதானவர்களே தற்போது வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர்.

“ஆரோக்கிய உணவிற்கான விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால், எதிர்காலத்தில் சாலட்டா பெருமளவில் வளர்ச்சியடையும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. அடுத்த ஓராண்டில் சாலட்டாவை சென்னையின் அனைத்து பகுதிகளிலும் டெலிவரி செய்யும் ஒரு நிறுவனமாக வளர்த்தெடுக்க வேண்டும், தற்போது ஈட்டும் மாதம் 5 லட்ச ரூபாய் வருவாய் என்பதை பன்மடங்காக்குவதே இலக்கு,@ என்கின்றனர் இந்த தம்பதி. 

Share:

administrator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *