Contact Information

JKrish Pvt Ltd, AIC Raise, Rathinam Techzone, Eachanari, Coimbatore. Tamilnadu - 641 021.

We Are Available 24/ 7. Call Now.

அன்று செக்யூரிட்டி; இன்று ‘செம’ பவுலர்


ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு வளரும் நட்சத்திரத்தை கிரிக்கெட் உலகுக்குத் தந்துள்ளது. அவர்தான் 24 வயது ஷமார் ஜோசப்.

ஷமார் ஜோசப் தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையின் முதல் பந்திலேயே ஜாம்பவான் ஸ்மித்தை வெளியேற்றினார், லபுஷேனை பவுன்சரில் காலி செய்தார், 5 விக்கெட்டுகளை அறிமுக டெஸ்ட்டிலேயே வீழ்த்தி சாதனை படைத்தார். இவர் வீசிய பவுன்சரால் உஸ்மான் கவாஜா ரத்தம் சிந்த நேரிட்டது. இவ்வாறாக கவனம் ஈர்த்துள்ள ஷமார் ஜோசப், ஒரு செக்யூரிட்டி கார்டு ஆக வேலை பார்த்தவர் என்றால், என்றால் ஆச்சரியமாகத்தானே இருக்கும்!

‘பின்தங்கிய’ பின்புலம்

ஷமார் ஜோசப் பிறந்து வளர்ந்தது பராகாரா என்ற கிராமத்தில். இங்கு செல்ல சாலை வசதிகள் கிடையாது. சுமார் 50 பேர் மட்டுமே வாழும் குக்கிராமத்தில் பிறந்தவர்தான் ஷமார் ஜோசப். இந்த கிராமத்துக்குச் செல்ல வேண்டுமென்றால் ஒருவர் இரண்டு நாள் படகுப் பயணம் மேற்கொள்ள வேண்டும்.

2018-ஆம் ஆண்டின் பிற்பகுதியில்தான் இந்த கிராமத்துக்கு இன்டர்நெட் வசதி கிடைத்தது. தொலைக்காட்சிப் பெட்டி எதுவும் இல்லாததால் கிரிக்கெட் அங்கு பிரபலமாக இருந்தது இல்லை. ஜோசப்புக்கு மூன்று சகோதரிகள் மற்றும் ஐந்து சகோதரர்கள். தனது கிராமத்து தெருக்களில் கிரிக்கெட் விளையாடுவதுதான் அவரது ஒரே பொழுதுபோக்கு.

இந்தப் பின்புலத்தில்தான் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் தொடக்கப் பந்துவீச்சாளர்களான கர்ட்லி ஆம்ப்ரோஸ் மற்றும் கர்ட்னி வால்ஷ் ஆகியோரை தன் மனதில் ஆராதனை செய்து ‘வேகப்பந்து வீச்சாளராக வேண்டும்’ என்ற லட்சியத்தை வளர்த்துக் கொண்டார்.

அந்த லட்சியப் பயணத்தில், தனது அயராத உழைப்பாலும் விடாமுயற்சியாலும் தற்போது வெற்றியை ருசித்து வரும் ஷமார் ஜோசப் செக்யூரிட்டி கார்டு வேலை பார்த்தவர் என்பது கவனம் ஈர்க்கும் உத்வேகத் தகவல்.

தனது வாழ்வாதாரத்துக்காக நியூ ஆம்ஸ்டர்டாமில் செக்யூரிட்டியாக வேலைப் பார்த்து வந்த ஷமார் ஜோசப், டேப் சுற்றிய பந்தை வைத்துக் கொண்டு பந்து வீசிப் பழகினார்.

செக்யூரிட்டியாக வேலை பார்த்து ஈட்டும் வருமானம்தான் தன் குடும்பத்துக்கும், தன்னுடைய இரண்டு வயது பிள்ளைக்கும் வாழ்வாதாரமாக இருந்தது. எனினும், தனது கிரிக்கெட் கனவை அவர் கைவிடவே இல்லை.

திருப்புமுனை சம்பவம்

ரொமாரியோ ஷெப்பர்ட் என்ற சக வீரர்தான் ஷமார் ஜோசப்பை கயானா தலைமைப் பயிற்சியாளரிடம் அறிமுகம் செய்து வைத்தார். ஆம்புரோஸ் நடத்தி வரும் வேகப்பந்து வீச்சு அகாடமியில் இணைந்து பயிற்சி பெற்று, ஆம்புரோஸையே இவரது பவுலிங்கால் கவர்ந்தார்.

தொழில்முறை கிரிக்கெட் ஆன பிறகுதான் தனது செக்யூரிட்டி வேலையைத் துறந்தார். கயானாவுக்காக கடந்த பிப்ரவரியில்தான் அறிமுகப் போட்டியில் ஆடினார்.

தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் அனலிஸ்ட் பிரசன்னா அகோரம் என்பவரை கடந்த கரீபியன் பிரிமியர் லீக் போட்டிகளின்போது சந்தித்ததுதான் ஷமார் ஜோசப்பின் திருப்புமுனையாக அமைந்துள்ளது.

ஜோசப் அப்போது நெட் பவுலராக கயானா வாரியர்ஸ் சிபிஎல் அணியில் இருந்தார். இவர் வீசிய 2 பந்துகளைப் பார்த்த அகோரம், ’கயானா வாரியர்ஸ்’ கேப்டன் இம்ரான் தாஹிரிடம் சொல்லி உடனே ஷமார் ஜோசப்பை அணிக்குள் சேர்க்கச் செய்தார். டி20 அறிமுகம் இப்படி அமைய அனைவரும் இவரது பந்து வீச்சில் ஈர்க்கப்பட்டனர்.

ஷமார் ஜோசப்பின் கிரிக்கெட் முன் அனுபவம் என்பது வெறும் 5 முதல் தரப் போட்டிகளே. வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி, தென் ஆப்பிரிக்கா சென்றபோது 12 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பவுலராகத் திகழ்ந்தார்.

பேட்டிங்கிலும் தன் டெஸ்ட் அறிமுகத்திலேயே அன்று அடிலெய்டில் 36 ரன்களை விளாசினார். அதுவும், 10-ம் நிலையில் இறங்கி செமயாக ஆடி ஆஸ்திரேலிய பவுலர்களை லேசாக கலக்கம் அடையச் செய்தார். இவர் இன்னும் முன்னால் இறக்கப்பட வேண்டியவர். அதுவும் ஜோஷ் ஹாசில்வுட் பந்தை சிக்சருக்கு விரட்டியபோது ஆச்சரியம் அதிகமானது.

ஷமார் ஜோசப் குறித்து பேசும்போது நம் நினைவுக்கு வரும் இன்னொரு இளம் வீரர் அமீர் ஜமால். பாகிஸ்தான் ஆல்ரவுண்டரான இவர் சமீபத்தில் நடந்த டெஸ்ட் தொடரில் ஆல்ரவுண்டராக கலக்கினார். இவர் தனது வாழ்வாதாரத்துக்காக ஒரு கேப் டிரைவராக இருந்தவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் கிரிக்கெட்டை இப்போது இருக்கும் ஆழ்ந்தத் தூக்க நிலையிலிருந்து தட்டி எழுப்ப, ஷமார் ஜோசப்களும் அமிர் ஜமால்களும் தேவை.

அத்துடன், இவர்களின் எழுச்சி என்பது எல்லா துறைகளிலுமே கடைநிலையில் இருந்து உச்சிக்கு செல்ல உத்வேகமூட்டும் வெற்றிக் கதை என்பதும் நிஜம்.

Share:

administrator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *