Contact Information

JKrish Pvt Ltd, AIC Raise, Rathinam Techzone, Eachanari, Coimbatore. Tamilnadu - 641 021.

We Are Available 24/ 7. Call Now.

அன்று இஸ்ரோ விஞ்ஞானி; இன்று சிஇஓ. – ST Cabs உதய குமாரின் உத்வேக வெற்றிக் கதை!

ஊபர் பயணத்தின்போது சந்தித்த ஓட்டுநர் உதய குமாரின் கதையை அறிந்த ராமபத்ரன் சுந்தரம் அதனை ‘லிங்க்ட் இன்’ தளத்தில் பகிர, கன்னியாகுமரியில் பிறந்து இஸ்ரோவில் விஞ்ஞானியாகி பின்னர், அதனைத் துறந்து சொந்தத் தொழிலை நிறுவி சிஇஓவாக ஜொலிக்கும் உதய குமார் மீது பாராட்டுகள் குவியத் தொடங்கியுள்ளது.

சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற விருப்பம் கொண்ட ஒவ்வொருவருக்கும் உதய குமாரின் பயணம் நிச்சயமாக ஓர் உத்வேகம் தரும் வெற்றிக் கதையாக இருக்கும் என்றால் அது மிகையல்ல.

தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரு சிறிய டவுனில் பிறந்தவர் உதய குமார். இஸ்ரோவில் வெற்றிகரமாக விஞ்ஞானியாக பணியாற்றி வந்தார். ஆனால், ஒரு கட்டத்தில் அந்த வேலையை உதறிவிட்டு ஒரு தொழிலைத் தொடங்க வேண்டும் என்ற மிகவும் துணிச்சலான முடிவை மேற்கொண்டார். அவருடைய அந்த முடிவு ஒரு புதிய பயணத்துக்கான தொடக்கம். அது வாழ்க்கையில் ஒருவர் கொண்ட உறுதியும், தீவிர விருப்பமும் அவரை எதுவரை இட்டுச் செல்லும் என்பதற்கான சாட்சியாகும்.

இஸ்ரோ விஞ்ஞானி டு தொழில்முனைவர்

புள்ளியியல் படிப்பில் முனைவர் பட்டம் பெற்ற உதய குமாருக்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகமான இஸ்ரோவில் வேலை கிடைத்தது. அங்கே அவரது பணி மிக முக்கியமானதாகவே இருந்தது. செயற்கைக்கோள்களை ஏவும் ராக்கெட்டுகளுக்கான திரவ எரிபொருள் அடர்த்தியை மேம்படுத்தும் பணியைச் கொண்டிருந்தார் உதய குமார்.

குறிப்பாக, திரவ எரிபொருளில் கொப்பளங்கள் உருவாதலை தணித்து அதன் அடர்த்தி கட்டுக்குள் இருக்கும்படி உறுதி செய்வதே அவரது வேலை. கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் அவர் அந்தப் பணியைச் செய்தார். அதன் பின்னர், பொறியியல் கல்லூரி ஒன்றில் அவர் துணை விரிவுரையாளராகப் பணியாற்றினார். இஸ்ரோவில் பணியாற்றிய அவர் தொழில் தொடங்க வேண்டும் என்ற கனவை துரத்த ஆரம்பித்தார்.

‘ST கேப்ஸ்’ உதயம்

தனது நண்பர்களின் உறுதுணையோடு உதய குமார் 2017-ஆம் ஆண்டு ST Cabs (எஸ்டி கேப்ஸ்) நிறுவனத்தைத் தோற்றுவித்தார். சுகுமாறன், துளசி என்ற தனது பெற்றோரின் பெயருக்கு பெருமை சேர்க்க ‘எஸ்டி கேப்ஸ்’ என்று தன் ஸ்டார்ட் அப் நிறுவனத்துக்கு அவர் பெயர் சூட்டினார்.

37 கார்களுடன் தொடங்கப்பட்ட உதய குமாரின் ஸ்டார்ட் அப் நிறுவனம் தற்போது ஆண்டு வருமானமாக ரூ.2 கோடியை ஈட்டுகிறது.

ஆனால், இதைவிட கவனம் ஈர்ப்பது என்னவோ உதயாவின் அணுகுமுறை. குறிப்பாக, தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஓட்டுநர்களிடம் உதய குமார் கொண்டுள்ள ஈடுபாடு குறிப்பிடத்தக்கது. அவர்களை உதய குமார் தனது தொழில் கூட்டாளியாகவே காண்கிறார். அவர்களுக்கு 30 சதவீத பங்கு கிடைப்பதை உறுதி செய்கிறார். ஓட்டுநர்கள் காருடன் வந்தால் அவர்களுக்கு வருவாயில் 70% பங்களிப்பைத் தருகிறார்.

இந்த தனித்துவமான முன்னெடுப்பு ஓட்டுநர்களை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், அதிக வாடிக்கையாளர்களையும் கார்களையும் அதிக லாபத்தைப் பெற ஈர்ப்பதன் மூலம் நிறுவனத்தின் வெற்றிக்கு பங்களிக்கிறது.

ஆனால், உதய குமாரின் பணியாளர்களின் மீதான அக்கறை இத்துடன் நின்றுவிடாமல், புலம்பெயர்ந்த தொழிலாளர்களாக இருக்கும் ஊழியர்களுக்கு தங்குமிட வசதிகளை உருவாக்க பணத்தைச் சேமித்து வைப்பது வரை நீள்கிறது. மேலும், அவரது சொந்த ஊரில் உள்ள 4 குழந்தைகளின் கல்விச் செலவையும் அவர் ஏற்றுக் கொண்டுள்ளார்.

சவால்களைக் கடந்து சாதனை

உதய குமார் போன்ற தொழில்முனைவோருக்கு சவால்கள் வராமல் இருக்குமா என்ன? கோவிட் பெருந்தொற்று எல்லோருக்கும் சவால்விட்டதே. தான் எதிர்கொண்ட சவால் பற்றி ராமபத்ரன் சுந்தரத்துக்கு உதயா பேசியுள்ளார்.

கோவிட் காலத்தில் பாதுகாப்புக் கவச உடை அணிந்தபடியே தான் ஒடிசாவில் இருந்து கொல்கத்தா வரை பயணிகளை அழைத்துச் சென்ற கதையைக் கூறியுள்ளார். தான் தோற்றுவித்த நிறுவனம் படுத்துவிடக் கூடாது என்பதற்காக உதயா பல சவால்களைக் கடந்துள்ளார்.

உதய குமாரின் அர்ப்பணிப்பு என்பது வளர்ந்து வரும் ஸ்டார்ட் அப் நிறுவனர்களுக்கு ஒரு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் ஊக்கமளிக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

கட்டமைக்கப்பட்ட கார்ப்பரேட் சூழலில் இருந்து தொழில்முனைவோரின் வேகமான உலகத்துக்கு மாறுவதற்கு தகவமைப்புத் தன்மையும், மீண்டெழும் துணிச்சலும் தேவைப்படுகிறது. அவை உதய குமாரிடம் மிகுதியாகவே இருகிறது.

உதய குமாரின் பயணம், நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் வெற்றிக்கான சாத்தியக்கூறுகளுக்கு ஒரு சான்றாக அமைகிறது. நமது ஆரம்ப பாதை எப்படியானதாக இருந்தாலும் கூட சவால்களைக் கடக்க உதயாவின் வெற்றிக் கதை உத்வேகம் தருகிறது.

ஆர்வம், கடின உழைப்பு மற்றும் மாற்றத்தைத் தழுவுவதற்கான விருப்பத்துடன், எவரும் தங்கள் தொழில்முனைவோர் கனவுகளை அடைய முடியும் என்பதை ஆணித்தரமாக உறுதிப்படுத்துகிறது.

Share:

administrator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *