சிஏ, ஐஐஎம் பட்டதாரி – ஓட்டல் தொழிலில் மாதம் 4.50 கோடி ஈட்டும் ‘ராமேஸ்வரம் கஃபே’ திவ்யா!
மத்தியதர வர்க்கப் பின்னணி கொண்ட திவ்யா ராவ் பல இடைஞ்சல்கள், எதிர்ப்புகளுக்கு இடையே தான் பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு ‘ராமேஸ்வரம் கஃபே’ என்ற ஒரு அவுட்லெட்டைத் தொடங்கி இன்று பெரும் வருவாய் ஈட்டுகிறார் என்றால், அதன் பின்னணியில் அவரது உறுதியும் விமர்சனங்கள், பின்னடைவுகளினால் மனம் சுணங்காத செயலுறுதியும் மட்டுமே உள்ளது என்று அர்த்தம்.
திவ்யா ராவ் நடுத்தர வர்க்கம் என்றால், அதிலும் நிதி மட்டத்தில் கீழ்நடுத்தர வர்க்கம் என்றுதான் கூற வேண்டும். இந்த நிலையிலிருந்து பல பணக் கஷ்டங்களைச் சந்தித்து இன்று தொழில் முனைவோராக வளர்ந்திருக்கிறார் என்றால், திவ்யாவின் துவளா முயற்சியே காரணம்.
திவ்யாவின் இடைவிடா கல்வி நாட்டம், சவால் அளிக்கும் தடைக்கற்கள் நிரம்பிய தொழில் முனைவு வாழ்க்கை, இவற்றை தேர்வு செய்த மனத் துணிச்சல் இவையாவும் ‘ராமேஸ்வரம் கஃபே’யின் வெற்றியில் பிரதிபலிக்கின்றது. கஷ்டங்கள் வெற்றிப் படிக்கட்டு என்பது திவ்யா வாழ்க்கையில் உண்மைதான்.
சிக்கனம்தான் முதன்மை
கீழ்நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த திவ்யாவுக்கு மாதம் பாக்கெட் மணியாக ரூ.1,000 தான் கிடைத்து வந்தது. பணக் கஷ்டங்களால் லட்சியத்திலிருந்து பின் வாங்காமல் திவ்யா 21 வயதில் சி.ஏ. முடித்தார். மேலும், ஒரு படி போய் இந்தியாவின் மிகச் சிறந்த மேலாண்மை கல்வி நிறுவனமான அகமதாபாத் ஐஐஎம்-ல் நிதித்துறை மேலாண்மைப் பட்டமும் வென்றார்.
தான் வளர்ந்த விதம், பெற்றோர் தன்னை கட்டுப்பாட்டுடன் வளர்த்ததை கருத்தில் கொண்ட திவ்யா தன் குடும்பத்தின் நிதி பலவீனமாக இருப்பதை அறிந்ததால், அவர் பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருந்தார். அனாவசிய செலவுகளைக் கட்டுப்படுத்தினார். அவருக்குப் பிடித்த முட்டை பப்ஸ் சாப்பிட் வேண்டும் என்றால் கூட அவர் ஒரு வாரம் காத்திருக்க வேண்டும். வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி என்பார்களே அப்படித்தான் சிக்கனம் பிடித்தார் திவ்யா.
பணமும் சம்பாதிக்க வேண்டும், பெற்றோரையும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று தன்னுடைய இக்கட்டைப் பகிர்ந்து கொண்ட திவ்யா, படிப்பின் அவசியத்தை தான் உணர்ந்ததாக கூறுகிறார். இவரது குடும்பத்தில் முதன்முதலில் சி.ஏ. படித்துப் பட்டம் பெற்றவர் திவ்யாதான். இவர் இதனைப் படிப்பதற்கான கோச்சிங் கிளாஸுக்குச் செல்வதற்கே இரண்டு பஸ்கள் மாறிச் செல்ல வேண்டியிருந்தது.
உணவுத் தொழிலில் ஆர்வம்
ஐஐஎம் அகமதாபாத்தில் இருந்தபோது, திவ்யா ராவ் ஆரம்பத்தில் ஹோட்டல் அல்லது ரெஸ்டாரண்ட் தொழிலில் ஈடுபட ஆர்வம் கொண்டார். மெக்டொனால்ட்ஸ், கேஎஃப்சி மற்றும் ஸ்டார்பக்ஸ் போன்ற உலகளாவிய உணவு விற்பனை ஜாம்பவான்கள் பற்றிய விரிவான ஆய்வுகளில் ஈடுபட்டு, அத்தகைய உணவுச் சங்கிலிகளை நிர்வகிப்பதில் இந்தியர்கள் சிரமப்படுகின்றனர் என்று தனது பேராசிரியரின் அவதானிப்பினாலும் திவ்யா உணவுத் தொழிலில் ஆர்வம் காட்டத் தொடங்கினார்.
இந்தியர்களால் ஏன் உணவுச் சங்கிலிகளை நிர்வகிக்க முடியாது என்ற கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக அவர் உலகளாவிய உணவுப் பிரியர்களுக்கான வெஜிட்டேரியன் உணவகச் சங்கிலியை தொடங்க முழுமூச்சுடன் இயங்கினார். ஆனால், அவரது இந்த யோசனை உடனே நிறைவேறி விடவில்லை.
இந்தத் துறையில் அனுபவமிக்க நிபுணரான ராகவேந்திர ராவுடன் திவ்யா ராவ் பயிற்சி அனுபவத்திற்காக இணைந்தார். ராகவேந்திர ராவ் முதலில் சாலையோர தள்ளு வண்டி உணவகத்தை வைத்திருந்தவர்தான். இவருக்கும் குடும்ப சப்போர்ட் இல்லை. ஆகவே, பல உணவகங்களில் நிர்வாகியாகவும் கேஷியராகவும் பணியாற்ற வேண்டி வந்தது. திவ்யா சிஏ படித்திருந்ததால் ராகவேந்திர ராவிடம் முதன்முதலில் ரெஸ்டாரண்ட் தொடங்க நிதி ஆலோசகராக இணைந்தார். இதன் மூலம் உணவுத்தொழில் மலர்ந்தது.
தைரியமான அந்த முடிவு
ராகவின் முந்தைய உணவக முயற்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அவர் திவ்யாவுக்கு புதிய உணவகச் சங்கிலியில் சேர அழைப்பு விடுத்தார். ஆடிட்டராக திவ்யா நன்றாக வளர்ந்து வந்த நிலையிலும், புதிய உணவக முயற்சியில் இறங்குவதென்று தைரியமான முடிவை எடுத்தார்.
உணவகம் தொடங்க வேண்டும் என்று திவ்யா முடிவுறுதியுடன் இருந்தது குடும்பத்தாருக்குப் பிடிக்கவில்லை. திவ்யாவின் தாயார் தன் மன ஆதங்கத்தை இவ்வாறு தெரிவித்தார்:
“உன்னை சிஏ படிக்க வைக்க நான் கடுமையாக உழைக்க வேண்டி இருந்தது. நீ என்னடாவென்றால் தெருத்தெருவாய் பத்துக்கும் இருபதுக்கும் இட்லி தோசை விற்கப் போகிறேன் என்கிறாய்!”
ஆனால், சற்றும் கலங்காத திவ்யா, ராகவேந்தருடன் சேர்ந்து தன்னுடைய சேமிப்பையெல்லாம் திரட்டி ‘ராமேஸ்வரம் கஃபே’வை பெங்களுருவில் தொடங்கினார்.
ராமேஸ்வரத்தில் பிறந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் நினைவாகவும், தென்னிந்திய உணவுகளுடன் உடனடி தொடர்பை வலியுறுத்தவும் இந்தப் பெயர் பொருத்தமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
உணவகத்துக்கு படிப்படியாக அதன் ருசியைப் பாராட்டி வாடிக்கையாளர் கூட்டம் சேர்ந்தது. இதனையடுத்து, வர்த்தகக் கூட்டாளியாக இருந்த திவ்யா, ராகவேந்தர் வாழ்க்கையிலும் திருமண பந்தத்தில் ஒன்றிணைய முடிவெடுத்தனர்.
தற்போது, ‘ராமேஸ்வரம் கஃபே’ பெங்களூரில் நான்கு விற்பனை நிலையங்களை நிறுவியுள்ளது, துபாய், ஹைதராபாத் மற்றும் சென்னைக்கு விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. உணவகச் சங்கிலி 700 நபர்களைக் கொண்ட கணிசமான பணியாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது.
இந்த விற்பனை நிலையங்கள் மாதத்திற்கு ரூ.4.5 கோடி வருவாய் ஈட்டுகிறது. ஆண்டு வருமானம் தோராயமாக ரூ.50 கோடி என்பது தெரிய வருகிறது.
ராமேஸ்வரம் கஃபேயின் 10-க்கு 10 அல்லது 10-க்கு 15 சதுர அடி அளவுள்ள கடைகள் சிறிய அளவு என்ற போதிலும், நாளொன்றுக்கு 7,500 பில்கள் போடப்படும் சுறுசுறு வர்த்தகமாக விளங்குகிறது .
முயற்சித் திருவினையாக்கும் என்பதற்கு வாழும் எடுத்துக்காட்டாக விளங்கும் திவ்யா,
“அடுத்த 5 ஆண்டுகளில், தென்னிந்தியாவிலும், வட இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் கூட உணவகங்களை நிலைநாட்ட இலக்கு வைத்துள்ளோம்,” என்கிறார்.
திவ்யா மற்றும் ராகவ்வின் கதை, தாங்களாகவே வெற்றி பெற விரும்பும் மற்றும் வாழ்க்கையில் வாய்ப்புகளைப் பெற விரும்பும் எவருக்கும் ஊக்கமளிக்கும் வெற்றிக்கதை என்பதில் இருவேறு கருத்துகள் இல்லை.