Contact Information

JKrish Pvt Ltd, AIC Raise, Rathinam Techzone, Eachanari, Coimbatore. Tamilnadu - 641 021.

We Are Available 24/ 7. Call Now.

‘ஒரு தமிழன் நிர்ணயித்த விலையே இன்று நாடு முழுவதுமே ரத்தப் பரிசோதனைகளின் விலையாக உள்ளது’ – தமிழ்நாடு ஸ்டோரி விழாவில் ‘தைரோகேர்’ வேலுமணி!

யுவர்ஸ்டோரி நடத்திய ‘தமிழ்நாடு ஸ்டோரி’ 2024 3ஆம் ஆண்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் யுவர் ஸ்டோரி நிறுவனர் மற்றும் சிஇஓ ஷ்ரதா ஷர்மாவுடன், தைரோகேர் நிறுவனர் Dr.ஏ.வேலுமணி கலந்துரையாடினர்.

ஒரு தொழில்முனைவராக உங்களுக்கு இருந்த முக்கியமான 3 தடைகள் என்றால் எதைக் குறிப்பிடுவீர்கள் என்று ஷ்ரத்தா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார் வேலுமணி.

“தமிழனாக இருந்து கொண்டு இந்தி, மராத்தி மொழி தெரியாமல் மும்பையில் ஒரு தொழிலைத் தொடங்குவதே மிகப்பெரிய தடையாக இருந்தது. அடுத்ததாக அரசுப் பணியை விட்டுவிட்டு ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் தலைவராக உயர்வது அடுத்த சவால். பல தடைகள் இருந்த போதும் ஒரு தொழில்முனைவராக நான் மாறுவதில் இருந்த முக்கியமான சவால்கள் இவையே. உங்களை விட உங்களது சவால் பெரிதாக இருந்தால் அதில் வெற்றிகாண முடியாது, உங்களுடைய சிந்தனை உயர்வாக இருந்தால் சவால் உங்கள் உயரத்திற்கு குறைவாகவே இருக்கும்,” என்கிறார்.

ஒரு பிடி நிலம் கூட சொந்தமாக இல்லாத விவசாயியின் மகனான வேலுமணி அடிப்படையில் ஒரு கணிதவியலாளர். பாபா அணுஉலை மையத்தில் 1995ம் ஆண்டு PhD முடித்த பின்னர், ஒரு Pathologist ஆக முடிவு செய்தார்.

அப்பநாயக்கன்பட்டிபுதூரில் பிறந்து, பஞ்சாயத்து யூனியன் அரசு தொடக்கப் பள்ளியில் தமிழ் வழியில் படித்து காமராஜர் மதிய உணவு சாப்பிட்டு வளர்ந்தவன் நான். ஒருவரை மிகவும் சக்தியுள்ளவர்களாக மாற்ற இதைவிட வேறு எதுவும் இருக்க முடியாது என்று நான் நினைக்கிறேன்.

“நடக்கத் தொடங்கினால் பாதை புரியும், நடக்க பயந்தால் பாதை புரியாது. முரட்டு தைரியத்தில் நான் தொழில்முனைவராக நடக்கத் தொடங்கினேன் அது நிறைவேறியது. ஒரு தொழிலில் நீங்கள் எல்லா தவறுகளையும் கட்டாயம் செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளும் தவறு செய்யுங்கள், அந்தத் தவறே உங்கள் வெற்றிக்கான தீர்வைத் தரும்.”

ஒவ்வொரு நாளும் புத்தப்புது தவறுகளைச் செய்யுங்கள். ஒரே தவறைத் திரும்பத் திரும்பச் செய்தால் நீங்கள் கையேந்த தான் வேண்டும், ஒவ்வொரு நாளும் புதுப்புது தவறுகளைச் செய்தால் ஆட்சிசெய்யலாம். எனவே, தொழில்முனைவர்களான நீங்கள் ஒவ்வொரு நாளும் புதுப்புது தவறுகளைச் செய்து அதற்கு விரைவான தீர்வைக் கண்டுபிடியுங்கள்.

தவறே செய்யாதவர்கள் இதுவரையில் எதையும் கற்றுக் கொள்ளவில்லை என்று தான் சொல்ல வேண்டும். எனவே, தவறு செய்யக் கற்றுக் கொள்ளுங்கள். அப்படித் தான் நானும் தவறு செய்து மிக விரைவிலேயே அதற்கான தீர்வுகளையும் கற்றுக் கொண்டேன்.

வெற்றிக்கு வழி

உங்களது போட்டியாளர்களை விட குறைவான விலையில் விற்பனையைச் செய்யுங்கள் அதுவே உங்களது வெற்றிக்கான தாரக மந்திரம்.

“ஒரு தொழிலைப் பொறுத்த வரையில் இரண்டே வாய்ப்புகள் தான், அதே விலையில் அதிக தரத்தை கொடுப்பது மற்றொன்று அதே தரத்தில் குறைந்த விலையில் ஒரு விற்பனையை செய்வது. அதைத் தான் நானும் செய்தேன், குறைந்த விலையில் அதிக தரத்தில் ரத்தப் பரிசோதனை அது எனக்கு வெற்றியைத் தந்தது. விலையை குறைத்ததால் ஒரு நிறுவனம் தோல்வியை சந்தித்தது என்று எங்குமே நடந்ததில்லை, நான் பிரச்னைகளை நோக்கமாகக் கொண்டேன், நோய்களை அல்ல. நோய்கள் வரும் போகும், ஆனால் பிரச்னைகள் எப்போதுமே இருக்கும், வாடிக்கையாளர்களுக்கு கட்டணம் மட்டுமே ஒரே பிரச்னை, அதற்கான தீர்வைத் தான் நான் தந்தேன்.”

பேதாலஜி லேபில் buffet முறையில் சோதனைகளைச் செய்தது நான் தான். ஒரே ஒரு ரத்தப் பரிசோதனை என்றாலும் ஒன்றுக்கும் மேற்பட்டவை என்றாலும் மாதிரி சேகரிப்பு, போக்குவரத்து செலவு அனைத்தும் ஒன்று தான். எனவே, ஒரே முறை 15 பரிசோதனை ரூ.2000 விலையில் ஆரோக்கியம் என்கிற பேக்கேஜிங்கை அறிவித்தேன். அது வெற்றி தரும் என்று அப்போது எந்த நிறுவனமும் நினைக்கவில்லை, ஆனால், இன்று எல்லா லேப்களும் என்னுடைய இந்த பேக்கேஜிங்கை தான் பின்பற்றுகின்றன.

“யாராலும் இந்த குறைந்த விலையில் பரிசோதனை செய்ய முடியாது என்று நான் நினைத்தேன். ஆனால், இன்று எல்லோருமே இதே விலையில் ரத்தப் பரிசோதனைகளைச் செய்கின்றனர். ஒரு தமிழன் நிர்ணயித்த விலை தான் இன்று நாடு முழுவதுமே ரத்தப் பரிசோதனைகளுக்கான விலையாக இருக்கிறது,” என்று மகிழ்ச்சியோடு கூறினார்.

கிளவுட் லேப்

கோயம்புத்தூரில் அன்னபூர்ணா என்கிற ஓட்டல் மிகவும் பிரபலம். 1970லேயே இந்த ஓட்டல் கிளவுட் கிச்சனை செயல்படுத்தியது, ஒரு இடத்தில் கிச்சன் 10 இடத்தில் ரெஸ்டாரண்ட் என்று அவர்கள் செயல்பட்டது அன்னபூர்ணாவுக்கு வெற்றியைத் தந்தது. ஒரு பரிசோதனைக் கூடமும் ஒரு கிச்சன் போலத் தான் நாம் ஏன் ஒரு பரிசோதனைக் கூடம் பல்வேறு ரத்த மாதிரி சேகரிப்பு மையங்களை நடத்தக் கூடாது என்று சிந்தித்தேன்.

மும்பையில் 20 மையங்களையும் ஒரே ஒரு பரிசோதனைக் கூடத்தையும் தொடங்கி நடத்தினேன், அது வெற்றியைத் தந்தது. சூரத், நாசிக், புனேக்கு 3 மணி நேரம் ரயில் பயணம் ஒரே ஒரு லேபில் ஆய்வு அது கைகொடுத்தது. சண்டிகர், கொல்கத்தா, சென்னை 3 மணி நேரம் விமான போக்குவரத்து மாதிரிகளை சேகரித்து மும்பையில் ஆய்வு செய்தேன் அது கைகொடுத்தது.

“25 ஆண்டுகளுக்கு முன்னர் கோடிக்கணக்கான மக்களுக்கு ஒரே ஒரு பரிசோதனைக் கூடத்தில் ரத்தப் பரிசோதனை என்பதை யாரும் நினைத்துக் கூட பார்க்கவில்லை, ஆனால் நான் அதை சாத்தியப்படுத்தினேன்.”

மெக்டோனால்டு எப்படி பர்கர் மட்டும் விற்பனை செய்கிறதோ அதையே நான் தைரோகரிலும் செய்து பார்த்தேன். மெக்டோனால்டில் தோசை கிடைக்காது அதே போல, 100 கிலோ எடை கொண்ட மனித உடலில் நான் 15 கிராம் எடை கொண்ட ‘தைராய்டு கிளாண்டை’ மட்டுமே தேர்ந்தெடுத்தேன்.

இந்தத் தமிழன் தான் “built a brand around a gland.” என்னுடைய இலக்கு ஒன்று தான், இலக்கு ஒன்றாக இருந்தால் எல்லா இடங்களிலும் பிரகாசிக்கலாம், நீங்கள் எல்லாவற்றையும் செய்தால் அதை ஒரே இடத்தில் இருந்து தான் செய்ய முடியும். இந்தியா முழுவதும் தைரோகேர் செயல்பட்டது ஆனால், என்னுடைய இலக்கு தைரோ கிளாண்ட் மட்டுமே.

என்னுடைய வருகைக்கு முன்னர் பரிசோதனைக் கூடங்களில் இயந்திரங்கள் 4 மணி நேரம் மட்டுமே செயல்பட்டன, இப்போது நாள் ஒன்றிற்கு 20 மணி நேரங்கள் செயல்படுகின்றன. நின்று கொண்டிருக்கும் இயந்திரம் ஒரு பொறுப்பு மட்டுமே, ஓடிக்கொண்டே இருக்கும் இயந்திரம் மட்டுமே சொத்தாக மாறும். எனவே, உங்களுடைய இயந்திரங்களை 24 மணி நேரம் ஓட விட்டால் நீங்களும் பணக்காரராகலாம். அமேசான் ஹோம் டெரிவரி தொடங்குவதற்கு முன்னர் 2000ம் ஆண்டிலயே வீடு தேடி வந்து ரத்த மாதிரிகளை சேகரிக்கும் முறையை நான் அமல்படுத்தினேன்.

தொழில்முனைவோருக்கு என்ன தேவை?

தோற்றுவிடுவோம் என்கிற பயத்தில் விற்பனை விலையை அதிகரித்தால் ஜெயிக்க முடியாது. குறைவான விலையே ஒரு பிராண்டை உருவாக்கும். இளம் தொழில்முனைவர்களுக்கு நான் கூறும் அறிவுரையானது நான்கு முயல்களை ஒரே நேரத்தில் பிடிக்க நினைக்காதீர்கள், கடைசியில் உங்களால் எதையுமே பிடித்திருக்க முடியாது என்றார்.

“ஒட்டு மொத்த ஆசியாவிலேயே தமிழர்கள் சிறந்த அறிவாளிகள். பொறுமை, பக்குவம் மற்றும் சிக்கனம் இந்த மூன்றும் தொழில்முனைவர்களுக்கு மிகவும் அவசியம். பணமும் சரியான தொழில் திட்டமும் இருந்தால் எந்த வயதில் வேண்டுமானாலும் தொழில் தொடங்கலாம், ஆனால், 30 வயதில் தொழில்முனைவராக இருப்பதே சரியானதாக இருக்கும் என்று நான் அறிவுறுத்துகிறேன்.”

முடித்துக் காட்டலாம் என்கிற நம்பிக்கையோடு திறமை மற்றும் சிக்கனத்தை இரண்டையும் கொண்டு செயல்பட்டதே தைரோகேர் வெற்றியடைந்ததற்கான காரணம். எல்லா பரிசோதனைக் கூடங்களும் அதிக விலையில் ரத்தப் பரிசோதனைகள் செய்து கொண்டிருந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் சாமானியர்களுக்கு ஏற்ற விலையிலும் இந்தப் பரிசோதனைகளைச் செய்யலாம் என்பதை நிரூபித்து காட்டியது தைரோகேர்.

முதலீட்டாளர்களை அணுகுவது பற்றி வேலுமணியிடம் கேட்ட ஷ்ரத்தா சர்மாவின் கேள்விக்கு,

“முதலீட்டாளர்கள் உங்கள் மீது அன்பு செலுத்த வருவதில்லை, அவர்களின் எதிர்பார்ப்பு உங்கள் நிறுவனத்தில் இருந்து அவர்களுக்குக் கிடைக்கப்போகும் வருவாய் மட்டுமே. அதனால், நீங்கள் ஒவ்வொரு காலாண்டிற்கும் உங்கள் நிறுவன வளர்ச்சியை 10%-15% வரை காண்பித்தால் அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்,” என்றார்.

ஒரு முதலீட்டாளரின் மகிழ்ச்சியே அடுத்த முதலீட்டாளரை உங்களுக்கு கொண்டு வரும். என்னிடம் முதலீடு செய்ய வந்த எல்லா முதலீட்டாளர்களுக்கும் நான் அதிக லாபத்தை கொடுத்திருக்கிறேன். 40 ஆண்டுகள் கடுமையாக உழைத்த பின்னர் 2021ல் இது தான் சரியான நேரம் என்று தைரோகேரை நல்ல விலைக்கு விற்பனை செய்தேன். தைரோகேரின் 66.1% பங்குகளை Pharm easyக்கு 1.5பில்லியன் டாலருக்கு விற்பனை செய்தேன், 2016ல் பொது சந்தையில் பட்டியலிடப்பட்ட பின்னர், தற்போது 404.8 பில்லியன் மார்க்கெட் கேப் வரை உயர்ந்துள்ளது.” என்று விளக்கமாக பதிலளித்தார்.

40 வயது வரை காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை அன்றாடம் அயராது உழைத்தேன். நான் தொடங்கிய தொழில் நல்ல லாபத்தை கொடுத்தது. என்னுடைய வளர்ச்சியில் உறுதுணையாக இருந்த என்னுடைய மனைவி இறந்துவிட்டார், அவருடைய இழப்பும் கூட நான் தொடர்ந்து தொழில் மீது கவனம் செலுத்தாதற்கு காரணம்.

நான் மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்பவன், எனக்கு அதிக தேவைகள் இல்லை. வாழ்வின் முதல் பகுதியில் நேரம் இருந்தது பணம் இல்லை, இரண்டாவது பகுதியில் பணம் இருந்தது நேரம் இல்லை. இப்போது வாழ்க்கையின் மூன்றாவது பகுதியில் இருக்கிறேன் பணம் மற்றும் நேரம் இருக்கிறது அதனால் என்னுடைய அனுபவத்தை மற்ற தொழில்முனைவர்களுக்கான அறிவுரைகளாக வழங்கி அவர்களை உயர்த்தும் வேலையை செய்து கொண்டிருக்கிறேன்.

கட்டுப்பாடு என்கிற ஒன்று இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். கட்டுப்பாடு இல்லாதவர்களால் ஜெயிக்க முடியும் ஆனால், அந்த வெற்றி நீடித்து நிலைத்திருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். தொழில் என்பது 10 மீட்டர் ஓட்டம் அல்ல, ஒரு மராத்தான். எனவே, ஒரு மராத்தான் ஓட்டம் போல ஓட வேண்டும், இல்லாவிட்டால் ஓட்டம் தொடங்கிய 3 கிலோமீட்டரிலேயே தோல்வியை சந்திக்க நேரிடும். தொழில்முனைவர்கள் இதனை மனதில் கொண்டு தங்களின் தொழிலை நிதானமாக கொண்டு செல்ல வேண்டும் என்று வேலுமணி அறிவுறுத்தினார்.

Share:

administrator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *