குழந்தைகளுக்கு புத்தக வாசிப்பு அனுபவம்; நண்பிகளின் ‘Toolo’ முயற்சி!
Töölö நிறுவனத்தில் ஃப்ரான்சைஸ் முறையில் சேர்ந்துகொள்ளும் Töölö அம்பாசிடர்கள் கிளவுட் லைப்ரரியைப் பயன்படுத்தி மினி லைப்ரரியை வீட்டிலிருந்தே நடத்தலாம்.
நூலகம் என்பது மக்களின் அறிவை மேம்படுத்தும் அல்லவா? அதே நூலகத்தின் மூலம் பெண்களை தொழில்முனைவோராகவும் மாற்ற முடியும் என்றால் இரட்டிப்பு மகிழ்ச்சிதானே? இதை சாத்தியப்படுத்தியிருக்கிறார் ஷீதல் ஷா.
ஷீதல் ஷாவிற்கு இரண்டு குழந்தைகள். அமெரிக்காவில் தங்கியிருந்தார். இவரது இந்த முயற்சிக்கான விதை 2019-ம் ஆண்டு விதைக்கப்பட்டுள்ளது. இவருக்கும் இவரது குழந்தைகளுக்கும் புத்தகம் படிப்பது பிடிக்கும். ஷீதல் குழந்தைகள் இருவரையும் அழைத்துக்கொண்டு பொது நூலகத்தில் அடிக்கடி செல்வது வழக்கம்.
”நூலகத்தில் நேரம் செலவிடுவது எங்களுக்கு உற்சாகமான அனுபவமாக இருந்தது. இந்தியாவில் உள்ள குழந்தைகளுக்கும் சிறந்த வாசிப்பு அனுபவத்தை வழங்கி ஒரு சமூகமாக ஒன்றிணைக்க விரும்பினேன்,” என்கிறார் ஷீதல்.
பெங்களூரு வீட்டிற்கு திரும்பிய ஷீதல் தனது பகுதிக்கு அருகில் இருக்கும் குழந்தைகளை வாசிப்பு நோக்கி ஈர்க்கும் வகையில் பிரத்யேகமான நூலகம் ஒன்றை அமைக்க முடிவு செய்தார்.
“ஆரம்பத்தில் என் அபார்ட்மெண்ட் வளாகத்திலேயே முதல் நூலகத்தைத் திறந்தேன். என் மகன் மிகுந்த ஆர்வத்துடன் புத்தகங்களைப் படித்தான். மகிழ்ச்சியாக மற்றவர்களுடனும் புத்தகங்களைப் பகிர்ந்துகொண்டான்,” என்கிறார் ஷீதல்.
ஆரம்பத்தில் இலவசமாக புத்தகங்களை வழங்கத் தொடங்கினார்.
“நூலகத்திற்கான தேவையும் வரவேற்பும் எப்படி இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள நினைத்தேன். முதல் மூன்று, நான்கு மாதங்களுக்கு இலவசமாக புத்தகங்களை வழங்க ஆரம்பித்தேன்,” என்கிறார்.
இந்த முயற்சியை ஒரு தொழிலாக மாற்றத் தீர்மானித்தபோது Töölö என பெயரிட்டார். புத்தக தொகுப்பிற்கான MVP வெப்சைட் அறிமுகப்படுத்தினார். 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் கட்டணம் செலுத்தும் வகையில் இந்த செயல்பாடு மாற்றப்பட்டது.
”கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் நூலகத்தை நடத்தியதில் வாடிக்கையாளர்களின் தேவைகளையும் செயல்பாடுகள் தொடர்பான சவால்களையும் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது,” என்கிறார்.
ஷீதல் வீட்டிற்கு பக்கத்தில் வசிக்கும் அர்ச்சனா நந்தகுமார் என்பவர் 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் Töölö இணை நிறுவனராகவும் சிடிஓ-வாகவும் இணைந்துகொண்டார். Töölö முயற்சியில் ஆரம்பத்திலேயே இணைந்து கொண்ட இவர் குழந்தைகளுக்கு அடிக்கடி கதை சொல்லும் அமர்வுகளை ஏற்பாடு செய்து வந்தார். அர்ச்சனா பிராடக்ட் மற்றும் டெக்னாலஜி பிரிவைக் கையாள்கிறார். அத்துடன் கம்யூனிட்டி பில்டிங் செயல்பாடுகளையும் கவனித்துக்கொள்கிறார்.
ஆரம்ப நாட்களிலேயே இணைந்துகொண்ட மற்றொரு உறுப்பினரான சாந்தினி மூன்றாவது இணை நிறுவனராக மூன்று மாதங்களுக்கு முன்னால் இணைந்துகொண்டிருக்கிறார். இவர் செயல்பாடுகள் மற்றும் ப்ரீ ஸ்கூல்களுடன் கைகோர்க்கும் முன்னெடுப்புகளை கவனித்துக்கொள்கிறார்.
10 லட்ச ரூபாய் ஆரம்ப முதலீட்டுடன் தொடங்கிய பிறகு ஷீதலும் அர்ச்சனாவும் பெண் மைக்ரோ தொழில்முனைவோர் மூலம் நூலகங்கள் அமைக்க திட்டமிட்டனர். இவர்கள் Töölö அம்பாசிடர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
இந்த தொழில்முனைவோர், இந்தியா முழுவதும் உள்ள விற்பனையாளர்களிடமிருந்து புத்தகங்களை வாங்கி, அவற்றை வகைப்படுத்தி, புரொஃபஷனலாக அவற்றை லேமினேட் செய்தனர்.
தற்போது Töölö 21 நூலகங்களைக் கொண்டுள்ளது. இவற்றில் 15 நூலகங்களை பெங்களூருவில் உள்ள Töölö அம்பாசிடர்கள் நடத்துகிறார்கள். ஆறு நூலகங்கள் டெல்லி-என்சிஆர், புனே போன்ற நகரங்களில் செயல்படுகின்றன.
இந்த நூலகங்கள் ஒவ்வொன்றிலும் சராசரியாக 12-15 குழந்தைகள் உறுப்பினர்களாக இணைந்திருக்கிறார்கள். 2021-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட Töölö டிஜிட்டல் லைப்ரரியில் சுமார் 1,500 பேர் உறுப்பினர்களாக பதிவு செய்திருக்கிறார்கள்.
தொழில்முனைவில் இணைய பெண்களுக்கு ஊக்கம்
2020-ம் ஆண்டு ஷீதல் டெல்லியில் முதல் Töölö அம்பாசிடரை இணைத்துக்கொண்டார். இந்நிறுவனத்தில் ஃப்ரான்சைஸ் முறையில் சேர்ந்துகொள்பவர்களே Töölö அம்பாசிடர்கள். இவர்கள் கிளவுட் லைப்ரரியைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அதிலிருக்கும் புத்தகங்களின் தொகுப்பைப் பயன்படுத்தி மினி லைப்ரரியை வீட்டிலிருந்தே நடத்தலாம்.
”பெண் மைக்ரோ தொழில்முனைவோர் சொந்தமாக கிளவுட் லைப்ரரியை அமைத்து Töölö பிராடக்ட் பயன்படுத்திக்கொள்ளலாம். இவர்களுக்கு ஒரு லைப்ரரி தளம், 500 புத்தகங்கள் அடங்கிய தொகுப்பு, பிராண்டிங் மெட்டீரியல், மார்க்கெட்டிங் டூல்ஸ், கதை சொல்லும் அமர்வுகள், இதர மதிப்பு கூட்டல் சேவைகள் போன்றவற்றை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைக் கொண்டு இளம் தலைமுறையினருக்கு ஒரு மிகச்சிறந்த அனுபவத்தை இவர்கள் வழங்கலாம்,” என்கிறார் ஷீதல்.
இந்த ஸ்டார்ட் அப், சப்ஸ்கிரைபர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பது, மார்க்கெட்டிங் ஸ்ட்ராடெஜி, டூல்ஸ் மற்றும் டெக்னாலஜி போன்றவை தொடர்பாக அம்பாசிடர்களுக்கு வாராந்திர பயிற்சியும் அளிக்கிறது.
சொந்தமாக ஃப்ரான்சைஸ் அமைக்க Töölö அம்சாசிடர்களிடம் 60,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறது. நூலகத்தின் மூலம் கிடைக்கும் வருவாயில் 80 சதவீதம் அம்சாசிடர்களுக்கும் 20 சதவீதம் ஸ்டார்ட் அப்பிற்கும் செல்லும்படி பகிர்ந்துகொள்ளப்படும்.
”100 பயனர்கள் லைப்ரரியில் சேர்ந்ததும் வருவாய் கிடைக்கத் தொடங்கும். ஒரு பயனரிடம் மாதாந்தோறும் 449 ரூபாய் மெம்பர்ஷிப் கட்டணம் வசூலிக்கப்படும். எனவே, ஒரு தொழில்முனைவர் மாதந்தோறும் சராசரியாக 35,000 ரூபாய் முதல் 40,000 ரூபாய் வரை வருவாய் ஈட்ட வாய்ப்புண்டு. அம்பாசிடர் எந்த அளவிற்கு மார்க்கெட்டிங் செய்கிறார் என்பதைப் பொருத்து வருவாய் ஈட்டப்படும்,” என்கிறார் ஷீதல்.
பெங்களூருவைச் சேர்ந்த ஃபரிசா ஷேக் என்பவர் Töölö அம்பாசிடர். இவருக்கு இரண்டு குழந்தைகள். வேலையை விட்டுவிட்டு வருவாய் ஈட்ட வாய்ப்பு தேடிக்கொண்டிருந்த இவருக்கு Töölö பற்றி தெரியவந்தது.
”குடும்பத்திற்காகவும் நேரம் செலவிடவேண்டும். அதேசமயம் வீட்டிலிருந்தே வேலை செய்து வருமானம் ஈட்டவேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தேன். வீட்டிலிருந்தே சொந்தமாக தொழில் செய்வது உற்சாகமாக இருக்கிறது,” என்கிறார் ஃபரிசா.
வீட்டிலேயே நூலகம் அமைத்திருக்கும் இவர் தனது பகுதியில் இருக்கும் குழந்தைகளுக்காக வாரம் முழுவதும் நூலகத்தை திறந்து வைத்திருக்கிறார்.
“குழந்தைகள் இங்கு வந்து விதவிதமான புத்தகங்களை வாசித்து மகிழலாம். இங்கேயே உட்கார்ந்து படிக்கும் வசதியும் செய்திருக்கிறேன். நான் வெளியில் செல்வதானால் குழந்தைகளுக்கு முன்னரே மறக்காமல் தகவல் கொடுத்துவிடுகிறேன்,” என்கிறார்.
நொய்டாவைச் சேர்ந்த மற்றொரு Töölö அம்பாசிடர் மிரா ஸ்வரூப்.
“Töölö பற்றி தெரிந்துகொண்டபோது இது பிரமாதமான ஐடியா என்று தோன்றியது. என் ஒன்பது வயது மகளுக்கும் தொழில்முனைவின்மீது இதன் மூலம் ஈடுபாடு வரும் என்று நினைத்து இதில் இணைத்துகொண்டேன்,” என்கிறார் மிரா.
மிராவின் மகள் புக் டெலிவரி செய்து வருவதாகவும் வாடிக்கையாளர்களை இணைத்துக்கொள்வதில் தீவிரமாக ஆர்வம் காட்டி வருவதாகவும் மிரா மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்.
அடுத்த தலைமுறையினருக்கான வாசிப்பு அனுபவம்
குழந்தைகளிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கவேண்டும் என்று வலியுறுத்தும் ஷீதல்,
“புனைக்கதை படிப்பதால் எந்தப் பயனும் இல்லை என பெற்றோர்கள் பலர் கருதுகிறார்கள். அது தவறு. ரெசிபி புத்தகம், காமிக்ஸ் புத்தகம் இப்படி எதையும் படிக்கலாம். தவறில்லை. வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்துவதே முக்கியம். இதை ஊக்குவிக்கவேண்டும். அவர்கள் படிக்கும் உள்ளடக்கங்களை படிப்பையாக மாற்றிக்கொள்ள வழிகாட்டலாம்,” என்கிறார்.
இன்று Töölö கிளவுட் லைப்ரரி தளத்தின் மூலம் குழந்தைகள் பல்வேறு புத்தகங்களை வாசிக்க முடியும். ஆங்கிலம் மற்றும் வட்டார மொழிகளில் புத்தகங்கள் இருக்கின்றன. இது தவிர பரிந்துரைகள், கதை சொல்லும் அமர்வுகள், எழுத்தாளர்களுடன் உரையாடல் போன்ற கூடுதல் நடவடிக்கைகள் பலரைக் கவர்கின்றன. உறுப்பினர்கள் ஆன்லைனில் புத்தகங்களை ஆர்டர் செய்து வீட்டிலேயே பெற்றுக்கொள்ளலாம். படித்த பிறகு அவற்றை பிக் அப் செய்துகொள்ளும் வசதியும் உள்ளது.
அடுத்த சில ஆண்டுகளில் 1,000 Töölö நூலகங்களை அமைக்க ஷீதலும் அவரது குழுவினரும் திட்டமிட்டிருக்கின்றனர்.
”இந்தியாவைப் பொருத்தவரை ஆயிரம் என்பது சிறிய எண்ணிக்கைதான். இந்த முன்னெடுப்பிற்காக முதலீட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். இந்த ஆண்டு இறுதிக்குள் 50-60 நூலகங்களை அமைப்பதை குறுகிய கால இலக்காகக் கொண்டிருக்கிறோம்,” என்கிறார்.
Töölö ப்ரீ ஸ்கூல்களுடன் இணையும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
ஆங்கில கட்டுரையாளர்: அஞ்சு நாராயணன் | தமிழில்: ஸ்ரீவித்யா