காலேஜ் புராஜெக்ட் டு ஸ்டார்ட் அப்: கழிவு மேலாண்மையில் ‘ரோபோ’ புரட்சி!
கல்லூரி புராஜெக்ட்டாக தொடங்கப்பட்டு, பின்னாளில் வெற்றிகர ஸ்டார்ட் அப் ஆக மாறிய சோலினாஸ் நிறுவனமானது, ரோபோட்டிக் தொழில்நுட்பத்தினால் கழிவு மேலாண்மையை மேம்படுத்தும் நோக்கிலும், கையால் சுத்தம் செய்யும் முறையை முற்றிலுமாக ஒழிப்பதைக் குறிக்கோளாகவும் கொண்டு செயல்பட்டு வருகிறது.
ஐஐடி-ஜேஇஇ தேர்வுக்காக தயாராகும்போது, ஐஐடி- கான்பூரில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பதே திவான்சு குமாரின் குறிக்கோளாக இருந்தது. ஆனால், விதி வேறு திட்டங்களைக் கொண்டிருந்தது. அவர் ஒரு மதிப்பெண்ணில் அக்கல்வி நிறுவனத்தின் சேர்க்கையைத் தவறவிட்டார். அதற்குப் பதிலாக ஐஐடி- மெட்ராஸில் இணைந்தார்.
ஆனால், வாழ்வில் நடந்த அந்தத் திருப்பம் நேர்மறையாகியதாக அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். ஏனெனில், மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் பிடெக் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பில் முதுகலைப் படிப்பதற்காக ஐஐடி – மெட்ராஸில் அவர் ஐந்தாண்டுகள் படிக்கும் சமயத்திலே, தொழில்முனைவோராகி இரண்டு ஸ்டார்ட் அப் நிறுவனங்களைத் தொடங்கினார்.
கல்லுாரியின் இரண்டாம் ஆண்டில் அவர் துவங்கிய முதல் ஸ்டார்ட் அப்பான ‘இன்வால்வ்’ ஆனது, ஒன்பது மாத பெல்லோஷிப் மூலம் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த ஜீனியர் மாணவர்களுக்கு, சீனியர் மாணவர்கள் பாடங்களை கற்பிக்கவும் வழிகாட்டவும் உதவும் நோக்கத்தில் தொடங்கப்பட்டது. கல்லூரியின் இறுதியாண்டில், புராஜெக்ட்டுக்காக மேன்ஹோல் மற்றும் செப்டிக் டேங்க்களை சுத்தம் செய்யும் ரோபோவை உருவாக்கும் திட்டத்தை கையிலெடுத்தார் அவர்.
Get connected to Solinas
“டெக்னாலஜியை விரும்புபவன் என்ற முறையில், சுகாதாரத் துறையில் உள்ள பல சிக்கல்களை தொழில்நுட்பத்தில் உதவியுடன் தீர்க்க முடியும் என்பதால், இத்திட்டம் எனக்கு மிகவும் சுவாரஸ்யமாக தெரிந்தது. இந்த புராஜெக்டுக்காக பிரதமரிடம் இருந்து எங்களுக்கும் விருது கிடைத்தது. அதன்பிறகு கல்லூரி புராஜெக்ட் என்பதை தாண்டி அதை சீரியஸா ஸ்டார்ட் அப்பாக எடுத்துச் செல்லலாமா என்று யோசிக்க ஆரம்பித்தேன்” என்றார்.
இந்த யோசனையின் நீட்சி சோலினாஸ் இன்டக்ரிட்டியின் (Solinas Integrity) பிறப்பிற்கு வழிவகுத்தது. இது ஐஐடி – மெட்ராஸில் இருந்து தோன்றிய ஒரு தொடக்கமாகும்.
காலேஜ் புராஜெக்ட் டூ ஸ்டார்ட் அப்!
ஆரம்பத்தில், சோலினாஸ் ஆனது கல்லூரி புராஜெக்ட்டுக்காக உருவாக்கப்பட்டது. பின்னர், அது ஒரு ஸ்டார்ட் அப்பாக உருவெடுத்தது.
“காலேஜில் புராஜெக்ட்டின் பிரசன்டேஷனை முடித்த பிறகு, அனைவரும் சிரித்தனர். கஷ்டப்பட்டு நீங்கள் உருவாக்கிய ஒன்றை பார்த்து சிரித்தால் மனம் எவ்வளவு புண்படும்? அப்போது, அவர்கள் செப்டிக் டேங்க் சுத்தம் செய்வதை பார்த்திருக்கீர்களா? என்று கேட்டனர். அதற்கு எங்களிடம் இல்லை என்பதே பதிலாக இருந்தது. செப்டிக் டேங்க் சுத்தம் செய்வதில் ஈடுப்படுபவர்களின் நகங்களும், தோல்களும் எந்தளவு பாதிக்கப்படுகின்றன என்பதை அவர்கள் காண்பித்தனர். மேலும் நள்ளிரவில் ஒரு துப்புரவுத் தளத்தில் அவர்களுடன் சேர்ந்து உண்மைநிலையை அறிந்து கொள்ளுமாறு கூறினர்” என்று ஆரம்ப நாட்களை அவர் நினைவு கூர்ந்தார்.
Get connected to Solinas
அந்த நள்ளிரவும், அன்று கண்ட சம்பவங்களும் செப்டிக் டேங்க் சுத்தம் செய்வதில் உள்ள சிக்கலை தீர்ப்பதற்கான ஆழ்ந்த ஆர்வத்தை ஏற்படுத்தியது. அவர்களது ஆரம்ப முன்மாதிரியானது ஒரு உயிரி உந்துவிசை அடிப்படையிலான இயக்க ரோபோவாக உருவாக்கப்பட்டது. இது குறைந்த அடர்த்தியிலான திரவம் மற்றும் பிசுபிசுப்பான செப்டிக் டேங்கிற்குள் மட்டுமே சென்றது. அனைத்து செப்டிக் டேங்க்களிலும் அவர்கள் உருவாக்கிய ரோபோ வேலை செய்யாது என்பதை குழு புரிந்து கொண்டது. இது அடுத்தக்கட்டத்தை நகர்வுக்கிற்கு அவர்களை நகர்த்தியது.
2018-ம் ஆண்டில், ரோபோ முன்மாதிரியை கல்லூரி புராஜெக்டாகவே விட்டுவிடுவதா அல்லது அதை ஒரு ஸ்டார்ட் அப்பாக முன்னோக்கி எடுத்துச் செல்வதா என்று குமாரும் அவரது பேராசிரியரும் ஆலோசித்தனர். அந்த சமயத்திலே, மொய்னக் பானர்ஜி இணை நிறுவனராக குழுவில் இணைந்தார். மேலும் அவர்கள் ஒரு குழுவை உருவாக்கத் தொடங்கினர். செப்டிக் டேங்க்களை சுத்தம் செய்வது நகர்ப்புற நீர் துப்புரவு நிர்வாகத்தில் உள்ள பிரச்சனைகளில் ஒன்று என்று குமார் சுட்டிக்காட்டுகிறார்.
நீர் மற்றும் சுகாதாரம் இரண்டும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. மேலும் நீர் குழாய்கள், வடிகால் அமைப்புகள், செப்டிக் டேங்க்கள் மற்றும் கழிவுநீர் குழாய்கள் உட்பட அனைத்து சொத்துக்களும் நிலத்தடியில் உள்ளன. அவற்றினை ஆய்வு செய்தல் மற்றும் சுத்தம் செய்வது முற்றிலும் கைமுறையாக இல்லாவிடினும் இன்றும், சில சமயங்களில், சில பணிகளுக்கு மனித தலையீடு தேவைப்படுகிறது.
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பிரச்சனை எங்கு இருக்கிறது என்பதைக் கண்டறிந்து, அதை விரைவாக தீர்க்க முடியும் என்று நம்பினர். ஒரு சாக்கடை பல முறை நிரம்பி வழியும்; எனவே மூச்சுத் திணறல் எங்கே நடந்தது? அது ஏன் நடந்தது? நிலத்தடியில் வடிவமைப்பு பிரச்சனை உள்ளதா? போன்ற தரவு மற்றும் ரோபாட்டிக்ஸ் மூலம் இந்த சவால்களை எதிர்கொள்ள முடியும் என்று குழு முடிவு செய்தது.
கழிவு மேலாண்மையை மேம்படுத்தும் கண்டுபிடிப்புகள்…
இதுவரை சேகரித்த தரவுகளின் அடிப்படையில், பிளேடுகள், உறிஞ்சும் நுட்பம், உறிஞ்சியதை சேமித்து அகற்றுவதற்கான சேமிப்பு களம் ஆகியவை உள்ளடக்கிய ‘HomeSep‘ எனும் இந்தியாவின் முதல் செப்டிக் டேங்க் மற்றும் மேன்ஹோல் க்ளீனிங் ரோபோவை உருவாக்கினர்.
இதனையடுத்து, ‘EndoBot’ எனும் ஒரு “எண்டோஸ்கோபி” வகையான ரோபோவை உருவாக்கினர். இந்த ரோபோவானது நீர், கழிவுநீர், வடிகால் போன்ற அனைத்து வகையான குழாய்களுக்கும் சென்று, அங்குள்ள நிலைமைகள், குறைபாடுகள் மற்றும் சரியான சிக்கலைக் கண்டறிந்து அது பற்றிய தரவுகளை வழங்குகிறது. பெரும்பாலான நீர் விநியோக குழாய்கள் 80 மிமீ முதல் 200 மிமீ வரை உள்ளதால் ‘எண்டோ90’ ஆனது 90 மிமீ விட்டம் கொண்ட குழாய்களுக்குள் செல்லும். எண்டோ90 ஏற்கனவே 12 நகரங்களில் குழாய் ஆய்வுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
“எங்களுக்கு முன்னிருந்த மற்றொரு சவாலானது, அடைக்கப்பட்டிருக்கும் கிடைமட்ட கழிவுநீர் குழாய்களை எவ்வாறு சுத்தம் செய்வது? இதற்காக, ACT வழங்கும் மானியத்துடன் R-Botஐ உருவாக்கி வருறோம். இது எங்களுக்கு ஒரு கேம் சேஞ்சராக இருக்கும். ஏனெனில், இதுவரை கிடைமட்ட அமைப்புகளை சுத்தம் செய்வதற்கு சரியான தீர்வுகளே இல்லை” என்றார்.
இந்த கண்டுபிடிப்புகளுடன், சோலினாஸ் ஆனது குறைபாடு தரப்படுத்தல் மற்றும் இடர் மதிப்பீடு ஆகியவற்றைக் கண்டறிய, தரவு மேலாண்மைக்கான டிஜிட்டல் கிளவுட் ஏஐ டேஷ்போர்டான ஸ்வஸ்த் (Swasth) ஐயும் அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறைபாடுள்ள இடம் மற்றும் குழாய் தணிக்கையின் GIS குறியிடலை வழங்குகிறது.
எண்ட்பாட் மூலம் சேகரிக்கப்பட்ட தரவு செயலாக்கப்பட்டு, ஸ்வஸ்த் டாஷ்போர்டில் தனிப்பயனாக்கப்பட்ட அறிக்கை உருவாக்கப்படுகிறது. மைக்ரோ லெவலில் உள்ள இந்த நுண்ணறிவு சவால்களைக் கணிக்கவும், சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்கவும் உதவும் என்கிறார் குமார்.
இதுவரை ஸ்வஸ்த் இரண்டு தனியார் நிறுவனங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில் சோலினாஸ் அதன் வாடிக்கையாளர் தளத்தை விரிவுபடுத்தும் என்று நம்புகிறது. “நாங்கள் இரண்டு இடங்களில் அரசாங்கத்திற்கு இலவச அணுகலை வழங்கியுள்ளோம், ஆனால் இது ஒரு தொழில்நுட்ப தீர்வு என்பதால், ஏற்றுக் கொள்ள நேரம் எடுக்கும்” என்று குமார் குறிப்பிடுகிறார்.
தனியார்மயமாகிய கழிவு மேலாண்மை…
கழிவு மேலாண்மை தனியார்மயமாக்கியது சோலினாஸிற்கு மிக பெரும் வாய்ப்பாக மாறியதாக அவர் தெரிவித்தார்.
“தனியார்மயமாக்கல் எங்களுக்கு நல்ல வாய்ப்பாக மாறியது. ஏனெனில், கழிவு மேலாண்மையில் தொழில்நுட்ப வசதியிருப்பதை அறியும் வாடிக்கையாளர்கள் தொழிலாளர் செலவை குறைக்கும் நோக்கில் எங்களை அணுகுவர். இரண்டாவதாக, கையால் சுத்தம் செய்வதை ஒழிப்பதை நோக்கமாக கொண்டு செயல்படும் அரசு, ஜல் ஜீவன் மிஷன் மற்றும் அம்ருத் மிஷன் போன்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளது. இருப்பினும், இந்தத் துறையில் நிறைய சலசலப்புகள் நிலவி வருகின்றன” என்றார்.
சோலினாஸின் ரோபோ தயாரிப்புகள் மாசுபாட்டைக் கண்டறிந்து, குறிப்பிட்ட சிக்கல்களைக் கண்டறிந்து, தீர்வுகளை விரைவில் வழங்குவதற்கு உதவுவதோடு மட்டுமில்லாமல், கைமுறையாக கழிவுகளை சுத்தம் செய்யும் முறையை அகற்றுவதிலும் முக்கிய பங்காற்றுவதால் சமூகத்தில் குறிப்பிட்ட தாக்கத்தையும் ஏற்படுத்துகின்றன.
“கர்நாடகாவின் ஹுப்ளி மாநகரத்தில், மாசு, கசிவு மற்றும் அடைப்புப் புள்ளிகளைக் கண்டறிந்து சரிசெய்வதற்காக எல்&டி உடன் இணைந்து பணியாற்றினோம். ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளாக தண்ணீர் கிடைக்காமல் இருந்த சுமார் 1,000 நகர்ப்புற குடிசை வீடுகளுக்கு இறுதியாக குடிநீர் கிடைத்தது. ஒவ்வொரு கிலோமீட்டர் ஆய்விலும் சுமார் 400,000 முதல் 600,000 லிட்டர் தண்ணீரை சேமிக்க முடியும் என்பதால், இது போன்ற தொழில்நுட்பம் நகரங்களுக்கு ஒரு கேம் சேஞ்சராக இருக்கலாம்.
இதுவரை 9 மாநிலங்களில் 15-க்கும் மேற்பட்ட நகரங்களில் சோலினாஸின் ரோபோக்கள் கழிவு மேலாண்மைக்காக பயன்படுத்தப் பட்டுள்ளன. அரசுடன் நேரடியாக பணிபுரிய டெண்டர்களுக்கு விண்ணப்பிக்கவும் தொடங்கியுள்ளோம். இதுவரை, முதலீட்டாளர்களிடமிருந்து இரண்டு சுற்றுகளில் நிதி திரட்டியுள்ளோம்.
எங்கள் முதன்மையான கவனம் இந்தியாதான். ஆனால் நாங்கள் ஏற்கெனவே மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய சந்தைகளையும் ஆராய தொடங்கியுள்ளோம். சிறிய ஆர்டர்களில் இருந்து பெரிய ஆர்டர்களுக்கு மாறுவது நாங்கள் கையாளும் உத்திகளில் ஒன்று. எங்கள் வருவாயை மேலும் உயர்த்துவதை இலக்காகக் கொண்டுள்ளோம்” என்கிறார் குமார்.