மக்களுக்கு ஆரோக்கியம்; விவசாயிகளுக்கு நியாயவிலை வியப்பூட்டும் சென்னையின் இயற்கை உழவர் சந்தை!
இயற்கை வேளாண்மை, இயற்கைப் பொருட்களின் அங்காடி, பாரம்பரிய உணவு என இன்று ஆர்கானிக் எங்கும் நிறைந்து மகிழ்ச்சிதரும் மாற்றத்தை சமூகம் அடைந்துள்ளது. ஆனால், ஆர்கானிக் என்ற சொல் நடைமுறையில் பரவலாக புழங்காத காலத்திலே விவசாயிகளின் நலன் கருதி, “ரீஸ்டோர்” எனும் இயற்கை அங்காடியினை தொடங்கி மக்களுக்கும், விவசாயிகளுக்கும் நன்மை பயக்கும் செயலை செய்து மாற்றத்திற்கான விதையினை வித்திட்டார் அனந்து.
சென்னையைச் சேர்ந்த அனந்து, டெலிகாம் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார். கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு நாள் அவரது வீட்டார் திராட்சை பழத்தினை கிலோ ரூ.45க்கு வாங்கியதை கண்டார். ஏனோ, அவருக்குள் விலை நிர்ணயத்தின் பின்னணியில் உள்ள இயக்கவியலை அறிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது.
அனந்து அவரது நண்பர்களுடன் சேர்ந்து, திராட்சை பயிரிடப்பட்ட பண்ணைக்கு நேரடியாக சென்று பழத்தின் பயணத்தைக் கண்டறிய முடிவு செய்தார். அதற்காக சென்னையில் இருந்து 455 கி.மீ., தொலைவில் உள்ள மதுரை வரை பயணித்தார். அங்கு திராட்சை கிலோ ரூ.30க்கு விற்கப்பட்டது. அருகில் உள்ள கிராமத்தில் உள்ள உள்ளூர் விற்பனையாளர்கள் மதுரை வியாபாரிகளுக்கு, திராட்சையை கிலோ 8 ரூபாய்க்கு விற்பனை செய்தனர்.
அனந்துவும் அவரது நண்பர்களும் இறுதியாக திராட்சையை பயிரிட்ட விவசாயிகளைக் கண்டுபிடித்தனர். அவர்கள் திராட்சையை கிலோ 3 ரூபாய்க்கு விற்பனையாளர்களுக்கு விற்றதை கண்டு திகைத்தனர்.
“நம்முடைய பழங்கள் மற்றும் காய்கறிகளின் பொருளாதாரத்தை மட்டும் நாம் ஆராய முடிந்தால், ஒவ்வொரு பரிவர்த்தனை நிலையிலும் விலையில் அதிர்ச்சியூட்டும் ஏற்றத்தாழ்வைக் காணலாம்,” என்கிறார் அனந்து.
திராட்சை பழத்தின் பயணம் அனந்துவை ஆழமாக சிந்திக்க செய்தது. ஒரு புறம் ஆரோக்கியமான மற்றும் இயற்கையாக விளைந்த பொருட்கள் விவசாயிடமிருந்து நுகர்வோரை அடைவதற்குள் பல கைமாறுவதால், மக்கள் அதிக பணத்தினை கொடுத்து வாங்கும் சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளனர். மறுபுறம், விவசாயிகளிடம் மலிவான விலைக்கு மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்வதால், விவசாயிகள் பெரும் நஷ்டத்தில் தவிக்கின்றனர். விவசாயிகளையும் நுகர்வோரையும் இணைக்கும் பாலமாக செயல்படுவதே இதற்கு தீர்வாக இருக்கும் என்று நம்பினார்.
அதற்கு உறுதுணையாகவும், ஒத்த சிந்தனையையும் கொண்டிருந்த அனந்து, அவரது மனைவி சுமதி, அவர்களது நண்பர்கள் உஷா ஹரி, சங்கீதா ஸ்ரீராம், ராதிகா ராம்மோகன் மற்றும் மீரா ராம்மோகன் ஆகியோர் கைகோர்த்து “ரீஸ்டோர்” (Restore) கடையினை திறந்தனர்.
ஓஎஃப்எம்- இன் வேளாண் பொருளாதாரம்!
2007ம் ஆண்டு சென்னையில் கார் நிறுத்தும் இடம் ஒன்றில் துவங்கப்பட்டது ரீஸ்டோர் கடை இன்று, 10 வருட செயல்பாட்டிற்குப் பிறகு, “ஆர்கானிக் ஃபார்மர்ஸ் மார்க்கெட்” (OFM- Organic Farmers Market) என்ற பெயரில் தென்னிந்தியாவில் 15 கூட்டுறவு அங்காடிகளைக் கொண்டுள்ளது. இதன்மூலம், தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், கேரளா, ராஜஸ்தான் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட விவசாயிகளின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
OFM கடைகள் இயற்கை விவசாயிகளின் நலனை மேம்படுத்தும் இயக்கத்தில் ஆர்வமுள்ள தன்னார்வலர்களால் நிர்வகிக்கப்படுகின்றன. சுயநிதி மற்றும் க்ரவுட் ஃபண்ட் இயக்கமான OFM இலிருந்து அவர்களுக்கு பணப் பலன்கள் எதுவும் கிடைப்பதில்லை. இந்த கடைகளில், காய்கறிகள் ஆண்டு முழுவதும் ரூ.50 முதல் ரூ.60 வரை விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன. இவை தவிர, மெலிந்த விளைச்சல் அல்லது சொத்துக்களை இழந்த விவசாயிகளுக்கு விதிவிலக்குகள் உள்ளன. ஓஎஃப்எம்- இன் மிகப்பெரிய பணி விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.
“நாங்கள் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கடற்கரை போன்ற பொது இடங்களுக்குச் சென்று எங்கள் வணிகமாதிரியை விளக்கி எங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்தோம். நுகர்வோரிடமிருந்து மிகுந்த வரவேற்பைப் பெற்றோம். அவர்களுடைய நம்பிக்கையினாலும் வாய் வார்த்தைகளினாலும் தான் நாங்கள் இன்று இருக்கும் நிலைக்கு வளர்ந்திருக்கிறோம்.“
“ரீஸ்டோர்” அங்காடியில் உள்ள ஒவ்வொரு பொருளுக்குப் பின்னும், அதை விளைவித்த உழவரின் பெயர் இருக்கும். ஓஎஃப்எம்-ல் விற்பனை செய்யப்படும் பொருள்களை விவசாயிகளே நிர்ணயிக்கின்றனர். உழைப்பு, விதைகள், உபகரணங்கள், உரம் போன்ற அனைத்தையும் கருத்தில் கொண்டு அதனடிப்படையில் விவசாயிகளை அவர்களது அறுவடைக்கான விலையை நிர்ணயிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், சவால்களை ஈடுகட்ட, அவர்களின் அனைத்து பங்குகளையும் ஒரே பயிரில் வைப்பதற்கு மாறாக பல்வேறு வகையான காய்கறிகளை இயற்கை முறையில் பயிரிட அவர்களுக்கு உதவுகிறோம்.
விவசாயிகளுக்கு வர்த்தக ரீதியாக உதவுவதோடு மட்டுமில்லாமல், அவர்களுக்கு விவசாய தேவைகளையும் நிவர்த்தி செய்கிறோம். விவசாயிகள் எதிர்கொள்ளும் அனைத்து அபாயங்கள் மற்றும் நிச்சயமற்ற தன்மைகளையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறோம். இது அரசாங்கம் செய்ய வேண்டிய ஒன்று.
பல சமயங்களில், இயற்கை முறையில் வளர்க்கப்படும் காய்கறிகள் போக்குவரத்து சாதனங்களில் கொண்டு செல்கையில் அழிந்துவிடும். இது கணக்கில் எடுத்து கொள்ளப்படாமலிருந்தது. எனவே, கிராமங்களில் இருந்து சென்னைக்கு உள்ளூர் பேருந்துகள் மூலம் விளைபொருட்களைக் கொண்டு செல்லும் கருத்தை OFM துவக்கியது. இது எரிபொருள் பயன்பாட்டையும் குறைக்கிறது,” என்று அனந்து அடுக்கடுக்காய் பெருமிதத்துடன் ஓஎஃப்எம்-ன் முன்னெடுப்புகளை பகிர்ந்தார்.
மக்களின் ஆதரவும்; அரசின் அங்கீகாரமும்;
2012 ஆம் ஆண்டில், சென்னையில் சிறுதானியமான தினை விற்கும் சில கடைகளில் ரீஸ்டோரும் ஒன்று. மூத்த ஐஏஎஸ் அதிகாரியான சாந்தா ஷீலா நாயர் ரீஸ்டோரின் வாடிக்கையாளராக இருந்தார். அதனால், அவர் தமிழ்நாடு மாநில திட்ட ஆணையத்தின் துணைத் தலைவராக ஆன பிறகு, அனந்துவும் அவரது குழுவினரும் மாநிலத் திட்டக் குழுவுடன் சேர்ந்து ஐஐடி மெட்ராஸில் ஒரு நாள் தினை பட்டறையை ஏற்பாடு செய்யுமாறு உதவி கோரினர். இந்த பயிலரங்கில் இயற்கை வேளாண்மை வல்லுநர்கள், பாரம்பரிய மருத்துவ நிபுணர்கள் மற்றும் 20 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு 10 வகையான தினை உணவுகள் வழங்கப்பட்டது.
தினை மீதான அரசின் ஈடுபாடு மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரத்தால், ஒரு தசாப்தத்திற்கு முன்னர் பறவையின் தீவனமாக பார்க்கப்பட்ட தினை மனித நுகர்வுக்கு ஆரோக்கியமான ஒன்று என்ற கருத்து வேகமாக பரவியது. அதன்பின், OFM நெட்வொர்க்கிலிருந்து அதிகமான விவசாயிகள் தினைகளை வளர்க்கத் தொடங்கினர். தினைகள் காலநிலை எதிர்ப்பு மற்றும் தீவிர தட்பவெப்ப நிலைகளிலும் செழித்து வளரக்கூடியவை என்பதால் அவை நீண்ட காலத்திற்கு, விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் என்கிறார் அனந்து.